September 24, 2022

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி!

பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர்.
அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண். சட்டசபையில் அங்கம்வகித்த முதல் பெண். இப்படிப் பல நிகழ்வுகளில் முதல்பெண் மணியாகத் திகழ்ந்தவர் முத்துலட்சுமி ரெட்டி-மேலும், சமூக žர்திருத்தவாதியாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைய முத்துலட்சுமி ரெட்டி பெற்ற வேதனைகளும், சோதனைகளும் எக்கச்சக்கம்!

dr reddy jy 22

1896ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, திண்ணைப் பள்ளியில் தான் ஆரம்பக் கல்வியை துவக்கினார். குடும்ப சூழ்நிலை காரணமாக 6ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்த இருந்த முத்துலட்சுமியின், ஆசிரியர் தானே முன்வந்து கல்வி செலவை ஏற்று 8ம் வகுப்பு வரை கொண்டு சென்றார். பெண்கள் பருவம் எய்துவிட்டால் பள்ளிப் படிப்பை நிறுத்துவது அந்த காலத்து வழக்கம். அதனை தகர்த்து, தனது பெண்ணை பள்ளிக்கு அனுப்ப முன் வந்தார் முத்துலட்சுமியின் தந்தை. அந்த ஆண்டில், இடைநிலைத் தேர்வை எழுதி தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 13 பேரில் முத்துலட்சுமியும் ஒருவர் ஆனார். தேர்ச்சி பெற்றாலும், அவரது கல்லூரி கனவுக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன.

இறுதியாக அனைத்தையும் தகர்த்து, கல்லூரியில் ஒரு திரையின் மறைவில் முத்துலட்சுமி உயர்கல்வியைக் கற்றார். அவர் திரை மறைவில் படித்தாலும், அவரது கல்வித் திறன் வெளி உலகுக்குத் தெரிய பல காரணங்கள் இருந்தன. அதன் ஒரு காரணமாக, அவர் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக தேர்வு பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 1907ல் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி. மற்றும் சி.எம். வகுப்பில் சேர்ந்து உயர்கல்வியைத் தொடர்ந்தார் முத்துலட்சுமி. மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதல் பெண் மாணவி என்ற பெருமையை அப்போது அவர் பெற்றிருந்தார்.

மருத்துவப் படிப்பை முடித்த முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையோடு, எழும்பூரில் உள்ள தாய் – சேய் நல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றினார். பிறகுதான் சுந்தரம் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயானார்.இதுவரை எந்த பெரிய லட்சியமும் இல்லாமல் இருந்த முத்துலட்சுமிக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது. அதாவது, அவரது தந்தையார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உரிய மருத்துவம் இன்றி மிகக் குறைந்த காலத்தில் உயிரிழந்தார்.

சோதனைகளை சாதனைகளாக்குவதே சாதனையாளர்களின் செயல் என்ற வாக்குக்கு இணங்க, தனக்கு ஏற்பட்ட சோதனையை சாதனையாக்கினார். ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து பயிற்சி அறுவை மருத்துவம் பற்றி சிறப்புப் பயிற்சி பெற்றார். புற்றுநோய்க்கான சிகிச்சையில் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.

அதே சமயம், இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து அவருக்கு கவலை ஏற்பட்டது. எனவே, பெண்களின் நிலையை உயர்த்த பல்வேறு வகையில் அவர் பாடுபட்டார். இவரது அயராத உழைப்பினால் மாநிலத்தில் மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரது முயற்சியால் பெண்களுக்கு பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குழந்தைகள், பெண்கள் நலன் காக்க தனி மருத்துவமனை, பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, இளம் விதவைகள் கல்வி கற்க வசதி, மருத்துவமனையில், பெண் நோயாளிகளுக்கு சேவையாற்ற பெண் ஊழியர்கள் நியமனம், குழந்தைகள் திருமணத்துக்கு தடை, கோயில்களில் உள்ள தேவதாசி முறை ஒழிப்பு போன்றவை இவரது முயற்சியால் நடந்த திட்டங்களாகும்.

இவரது தன்னலமற்ற சேவையாலும், முற்போக்கு எண்ணத்தாலும் இவருக்கு பல தலைவர்களுடன் பரிட்சயம் ஏற்பட்டது. மிகுந்த உந்துதல் காரணமாகவும், பெண்களின் விடுதலைக்காகவும் இவர் ஸ்தீரிதர்மம் என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார். இதில், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து கட்டுரைகள் எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்று இவரது முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது. மேலும் கைவிடப்பட்ட குழந்தைகள், இளம் பெண்கள், முதியோரை பராமரிக்க அவ்வை இல்லம் இவரது முயற்சியால் துவக்கப்பட்ட ஒன்றுதான். அந்த அவ்வை இல்லத்தில் தங்கியிருப்போர் கல்வி பெற வசதியாக பள்ளிகளும், ஆசிரியர் பயிற்சி பள்ளியும் துவக்கப்பட்டன.

பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்று கூறும் வாக்குக்கு சான்றாக வாழ்ந்து காட்டிய முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவராகவும், சிறந்த முற்போக்கு சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். 1968ஆம் ஆண்டு அவரது உடல்நிலை பாதித்ததால் ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார்.அவர் மறைந்து விட்டாலும் அவருடைய சேவைகளை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாக அவ்வை இல்லமும், புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமும் விளங்கி வருகின்றன.அத்துடன் அவரது பெயரில், தமிழக அரசு மகப்பேறு நிதி உதவி திட்டத்தை செயல்படுத்து வருவது குறிப்பிடத்தக்கது.