இரட்டை இலை முடக்கப்பட சாத்தியம்!- தேர்தல் ஆணைய பதிலால் சந்தேகம்!

இரட்டை இலை முடக்கப்பட சாத்தியம்!- தேர்தல் ஆணைய பதிலால் சந்தேகம்!

டப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை.. அத்துடன் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி முடிவெடுப்பார் என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது தமிழக அரசியலில் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது. .

ஈரோடு கிழக்குத் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டிருந்தது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது குறுக்கிட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உங்களது இந்த கோரிக்கை குறித்து தெரிவித்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது இபிஎஸ் தரப்பில், இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டோம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மனு தொடர்பான விவரங்களை ஓபிஎஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பகிர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த மனு மீது தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு ஒன்றை சமர்பித்துள்ளது. அதில் . எடப்பாடி பழனிச்சாமியை தற்போதைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது.?. ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் குறித்து எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை. கையெழுத்திட அதிகாரமுள்ளவர் என தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டவர் கையெழுத்துள்ள வேட்புமனுவையே ஏற்க முடியும். ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் பணிகள் கிடையாது. ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவெடுப்பார் எனவும் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணை மட்டுமே நடைபெறுமே தவிர அதைத் தாண்டி வேறு எந்த ஒரு விவகாரத்திற்குள்ளும் நாங்கள் செல்ல மாட்டோம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அப்படியான சூழலில் இரட்டை இலை சின்னம் தங்கள் தரப்புக்கு கிடைக்கும் என இபிஎஸ் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியே முடிவெடுப்பார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால் இரட்டை இலை முடக்கப்பட சாத்தியமுள்ளது என்ற சேதி பரவி வருகிறது!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!