September 20, 2021

வில்லாதி வில்லன் வீரப்பன் படத்தை யாரும் பார்க்காதீங்க! – முத்து லட்சுமி சொல்றாங்க!

“எனது கணவர் வீரப்பன் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க திரைப்படம் எடுத்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம். முன்னாள் போலீஸ் அதிகாரி தேவாரம் பல ஆண்டுகளாக என் கணவரை தேடியுள்ளார். அவர்கள் புத்தகம் எழுதினால் அர்த்தம் உண்டு. ஆனால் விஜயகுமாருக்கு என்ன தெரியும். எனது கணவரை மோரில் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இந்த உண்மையை அவர் சொல்ல தயாரா ? விஜயகுமார் தவறான தகவல் கொடுத்து வருகிறார். யாரும் செய்யாத தவறை எனது கணவர் செய்யவில்லை. தலைமைறைவாக வாழ்ந்த காரணம் என்ன என்ற பல விஷயங்கள் விரைவில் வெளிவரும். இவருக்கு இது போன்ற சூழல் ஏற்பட காரணம் என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்று சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி வீ.முத்துலட்சுமி நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார். அப்போது அவருடன் அவரது மூத்த மகள் வீ.வித்யாராணியும் வந்திருந்தார்.

vee july 2

அந்தப் பேட்டியின் போது வீ.முத்துலட்சுமி, “‘வில்லாதி வில்லன் வீரப்பன்’-ங்கற பேர்லே திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. எனது கணவர் வீரப்பன் சந்தன மரம் கடத்தினார் என்பது பரவலான கருத்து. கடத்தியவர் எனது கணவர் என்றால், அவர் கடத்திய சந்தன மரம், யானை தந்தங்களை எல்லாம் வாங்கியவர்கள் யார் என்பது பற்றிய செய்தி எந்த திரைப்படங்களிலும் வருவதில்லை. வீரப்பனை பிடிப்பதாக கூறி வந்த போலீஸ் படையினர் அந்த பகுதியில் வசித்த மக்களுக்கு என்னென்ன கொடுமைகள் செய்தார்கள் என்பதை யாரும் திரைப்படத்தில் காண்பிப்பதில்லை. உண்மை என்ன என்று தெரியாமல் போலீசார் கூறுவதை மட்டுமே வைத்துக் கொண்டு எல்லோரும் திரைப்படமாக எடுக்கிறார்கள்.

எனது கணவருக்கும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் நேரடி தொடர்பு கிடையாது. அவருடன் பயிற்சி பெற்றவர்கள் சிலருடன் தான் தொடர்பு உண்டு. பிரபாகரனை சந்திக்கப்போவதாக கூறி அழைத்து செல்லும் வழியில் எனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக இந்த படத்தின் இறுதிக்கட்ட காட்சியில் காண்பிக்கப்படுகிறது. உண்மையில் எனது கணவர் அவரது உறவினர்கள் மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் எனது கணவர் பற்றி புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். அவருக்கும் ஒன்றும் தெரியாது. அவர் கடைசி நேரத்தில் தான் வந்தார். என் கணவரின் ரகசிய வாழ்க்கை குறித்து எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் மட்டுமே தெரியும்.

‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படம் எடுப்பதற்கு என்னிடம் ஒப்புதல் பெற்ற டைரக்டர் ராம்கோபால் வர்மா, என்னிடம் கூறிய கதைக்கு சம்பந்தம் இல்லாத பல காட்சிகளை படத்தில் வைத்துள்ளார். இந்த படத்திற்கு என்னிடம் ஒப்புதல் பெற்றுவிட்டதால், சட்டப்பூர்வமாக என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.எனவே, ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த திரைப்படத்தை தயவு செய்து எல்லோரும் புறக்கணியுங்கள். எனது கணவரின் வாழ்க்கை குறித்த உண்மை கதையை நானே திரைப்படமாக எடுக்க இருக்கிறேன். அதற்கான கதையை நானே எழுதி வருகிறேன்.

தகுதியான, எங்களை ஏமாற்றாத தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களை தேடி வருகிறோம். வாய்ப்பு அமைந்ததும் படத்தை எடுப்போம். அதில் போலீசாரின் குற்றங்களும் காண்பிக்கப்படும். தமிழகத்தில் தற்போது இருக்கும் சூழலில் மொத்த உண்மைகளையும் சொன்னால் எனக்கும், என் பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.தற்போது, எனது கணவரின் பெயருக்கும், அவரது உருவ படத்திற்கும் டெல்லியில் சென்று காப்புரிமை பெற்றுவிட்டோம். எனவே, இனிமேல் வீரப்பன் என்ற பெயரையோ, அவரது புகைப்படத்தையோ யாரும் எனது அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது” என்று அவர் கூறினார்.