நோ டச்சிங்; நோ கிஸ்ஸிங் – கடுப்பேற்றும் ஷாங்காய் ஹெல்த் டிப்பார்ட்மெண்ட்!

நோ டச்சிங்; நோ கிஸ்ஸிங் – கடுப்பேற்றும் ஷாங்காய் ஹெல்த் டிப்பார்ட்மெண்ட்!

சீனாவின் பொருளாதார மையமாகக் கருதப்படும் ஷாங்காய் நகரில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தீவிரத் தொற்றுப் பகுதியாக (ஹாட்ஸ்பாட்) அந்நகரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘இன்று இரவு முதல், தம்பதிகள் தனியாகத்தான் தூங்க வேண்டும். முத்தமிடக் கூடாது. கட்டியணைக்க அனுமதி கிடையாது. சாப்பிடும்போதுகூட தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றெல்லாம் கட்டுப்பாடு விதிப்பதால் டென்சனாகி உள்ளார்கள்.

 

ஷாங்காய் நகரில் கடந்த சில நாட்களாக தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. எனினும், பிற நாடுகளை ஒப்பிட அங்கு தினசரி பாதிப்பு அதிகம். இதையடுத்து 2.6 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஷாங்காய் நகரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் வீட்டைவிட்டே வெளியே வரக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், கடும் சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்கள் அந்நகர மக்கள்.

கிட்டத்தட்ட கரோனா பரவலின் ஆரம்பத்தில் இருந்த சூழல் ஷாங்காயில் இப்போது நிலவுகிறது. சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்தான் வெளியில் செல்ல முடியும். பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் இருப்பவர்கள் அதற்காகச் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படாததால், வீட்டின் பால்கனிக்கு வந்து கண்டனக் குரல் எழுப்பும் அளவுக்கு அங்குள்ள மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் பால்கனியில் நின்று சோகமாகப் பாட்டு பாடுகிறார்கள். அவர்களின் சோகத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.

கரோனா கட்டுப்பாட்டு அறிவிப்புகளை ஒலிக்கவிட்டப்படி செல்லும் நாய் ரோபோக்கள் பற்றிய செய்திகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகின. தற்போது அங்கு டிரோன்கள் மூலம் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. ஒலிப்பதிவு செய்யப்பட்ட அறிவிப்புகளை, தெருக்களின் மேல் பறந்தபடி டிரோன்கள் ஒலிக்கச் செய்கின்றன.

அது தொடர்பான சில காணொலிகள் இணையத்தில் வைரலாகியிருக்கின்றன. அதில், டிரோன்களிலிருந்து ஒலிக்கும் அறிவிப்புகள் மிக விநோதமானவையாக இருக்கின்றன. ‘உங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து ‘ஜன்னலைத் திறக்கக் கூடாது, பாடக் கூடாது’ என்பது வரை விதவிதமான அறிவிப்புகள் வெளியாகின்றன.

மெகாபோன்கள் எனப்படும் ஒலிக் கருவிகளை வைத்து அறிவிப்புகளை வெளியிடும் சுகாதாரப் பணியாளர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று ரொம்பவே அந்தரங்கமான விஷயங்களுக்குத் தடை போடுகிறார்கள். இதுதொடர்பான ஒரு காணொலியில், ‘இன்று இரவு முதல், தம்பதிகள் தனியாகத்தான் தூங்க வேண்டும். முத்தமிடக் கூடாது. கட்டியணைக்க அனுமதி கிடையாது. சாப்பிடும்போதுகூட தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சுகாதாரப் பணியாளர்கள் கூறுவது பதிவாகியிருப்பதுதான் பலரையும் கடுப்பேற்றி உள்ளது

error: Content is protected !!