November 29, 2022

நளினியை விடுதலைப் போராட்ட நாயகி போல் சித்தரிக்க வேண்டாமே!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து (சட்ட நுணுக்கங்கள் காரணமாக) விடுவிக்கப்பட்ட கொலையாளி நளினி இன்று தான் ஏதோ நிரபராதியாக விடுதலை பெற்றது போலவும், சிறையிலிருந்து தியாகங்கள் செய்தது போலவும், ராஜீவ் கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாதது போலவும் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஊடகங்களும் அவருக்கு அதீத வெளிச்சம் தந்து, அவர் ஏதோ விடுதலைப் போராட்ட நாயகி போல் சித்தரித்து வருகின்றன.

ராஜீவ் கொலையில் நளினியின் பங்கு பற்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்ல வேண்டிய கடமை இருப்பதாக கருதுகிறேன். அதுவே இந்த நாட்டின் இறையாண்மைக்கும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அவருடன் கொல்லப்பட்ட மற்ற தமிழர்களுக்கும் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

மேற்சொன்ன நோக்கத்துடன், ராஜீவ் கொலை வழக்கின் Accused A-1 நளினி பற்றி S. SHANMUGADIVELU, S. NALINI & OTHERS Vs. STATE BY D.S.P., CBI, SIT, CHENNAI (1999) வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டவை இங்கே.

1. குற்றம் சுமத்தப்பட்ட அனைவர் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் (Charges) மொத்த எண்ணிக்கை 251. அவற்றில் நளினி மீது உள்ள குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 121. இவற்றில் 24 குற்றச்சாட்டுகளை மட்டுமே கீழ் கோர்ட்டுகள் தள்ளுபடி செய்தன. மீதமுள்ள 97 குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டன.

2. ராஜீவ் கொலைக்கு முன்பே பஸ், ஹோட்டல், பொதுக்கூட்ட நிகழ்வுகள் என பல இடங்களுக்கு சிவராசன், சுபா, வெடிகுண்டை இயக்கிய “மனித வெடிகுண்டு” தனு ஆகியோரை அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை நளினி செய்துள்ளார். மே 7, 1991 அன்று ஏதோ ஒரு பெரிய தலைவரை கொலை செய்ய திட்டம் இருக்கிறது என்பது நளினிக்கு தெரிந்துவிட்டது. மே 19, 1991 அன்று அது ராஜீவ்காந்திதான் என்பது அவருக்கு தெளிவாக புரிந்துவிட்டது. அது தெரிந்தே மற்ற கொலையாளிகளுடன் (சிவராசன், சுபா, தனு) தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்.

3. மேலும், மே 21, 1991 அன்று வீட்டிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் கிளம்பும் முன் சுபா நளினியிடம் “இன்று தனு சரித்திரம் படைக்க இருக்கிறாள். நீ அதில் பங்கேற்றால் மகிழ்ச்சி” என சொன்னதை நளினி ஏற்றுகொண்டிருக்கிறார்.

4. சிவராசன் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தியை கொலை செய்யும் செயல்பாட்டு முறையை முடிவு செய்து, சம்பவ இடத்தில் நளினி செய்யவேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.

5. தனுவும் சுபாவும் இலங்கை தமிழர்கள் என்ற அடையாளம் தெரிந்துவிடாத வகையில் அவர்களுக்கு மேல் உடை (Cloak) வாங்கி தந்தது நளினி.

6. தனு, சுபா, ஹரிபாபு, சிவராசனுடன் நளினி ஸ்ரீபெரும்புதூர் சென்றார். அங்கு, தனு ஒரு வெளிநாட்டுக்காரர் என்பது தெரியாதவண்ணம், எந்தவித சிக்கலும் இல்லாமல் ராஜீவ் அருகில் செல்வதற்கு நளினிதான் உரிய அரண் ஏற்படுத்தி தந்தார்.

7. ராஜீவ் கொலை நடந்தவுடன், சுபா மற்றும் சிவராசனுடன் நளினியும் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக கிளம்பி ஜெயக்குமார் என்பவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர்.

8. கொலை சம்பவத்திற்கு பிறகு, மற்ற குற்றவாளிகளுடன் திருப்பதி சென்ற நளினி அங்கே அங்கப்ரதக்ஷிணம் செய்தார். நளினியும், முருகனும் தமிழ்நாடு, கர்நாடகாவில் பல இடங்களில் தலைமறைவாக இருந்தனர்.

9. ராஜீவ் கொலை சதித்திட்டத்தில் நளினியும் ஒரு உறுப்பினர் என்பது முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலே சொன்ன தகவல்களை சரிபார்க்க விரும்புபவர்கள், தீர்ப்பின் முழு விவரங்களை இந்த linkல் படிக்கலாம் – https://indiankanoon.org/doc/1185147/.

ஒரு தேசமாக, முன்னாள் பிரதமரின் கொலையாளிகளை விடுதலை செய்து ஏற்கனவே நமக்கு நாமே தலைகுனிவு ஏற்படுத்திக் கொண்டுவிட்டோம். அரசியல்வாதிகளும், ஊடகங்களும் நளினிக்கு முக்கியத்துவம் தந்து இந்த தேசத்திற்கான அவமானத்தை மேன்மேலும் அதிகரிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முன்னாள் உளவுத் துறை அதிகாரி