பாஜக பெற்ற நன்கொடை 7 மடங்கு உயர்ந்து ரூ.532.27 கோடியாக அதிகரிப்பு!

பாஜக பெற்ற நன்கொடை 7 மடங்கு உயர்ந்து ரூ.532.27 கோடியாக அதிகரிப்பு!

நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் இருந்த பழைய நடைமுறைகள் மாற்றப்பட்டு, தேர்தல் பத்திரம் மூலமாக மட்டுமே நன்கொடை பெற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, ‘பாஜ, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 6 தேசிய கட்சிகள் மற்றும் சமாஜ்வாடி ஆகியவை எவ்வளவு நன்கொடை வசூலித்துள்ளன?’ என்ற விவரத்தை வழங்கும்படி புனேயை சேர்ந்த விகார் துர்வே என்ற சமூக ஆர்வலர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தார். இதற்கு தேர்தல் ஆணையத்தின் மத்திய பொது தகவல் அதிகாரியும், தேர்தல் கமிஷனின் மூத்த முதன்மை செயலாளருமான வில்பர்ட் அளித்துள்ள பதிலில், ‘அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது.மேலும், தேர்தல் பத்திரம் மூலம் கடந்த 2017-18ல் வசூலித்த நன்கொடை விவரங்களை 6 தேசிய கட்சிகளும் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்த கணக்கை சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 30 கடைசி தேதி என்பதால், அது பற்றிய தகவல் எதுவும் தற்போது எங்களிடம் இல்லை’ என்று கூறியிருந்தார்.

அதாவது அரசியல் கட்சிகள் எதுவும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் முதலில் இல்லாமல் இருந்தன. ஆனால், கடந்த 2013, ஜூன் 3ம் தேதி மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், பாஜ. காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 6 தேசிய கட்சிகளும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என அறிவித்தார். இந்த உத்தரவுக்கு மாறாக, தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலால் தகவல் உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தது நினைவிருக்கும்.

இதனிடையே 2016-17-ம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை 7 மடங்கு உயர்ந்து ரூ.532.27 கோடியாக அதிகரித்துள்ளது, இது காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையைக் காட்டிலும் 9 மடங்கு அதிகமாகும் என்று தெரியவந்துள்ளது. அதிலும் கடந்த 2016-17-ம் ஆண்டு தேசியக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ரூ.710 கோடி நன்கொடை பெற்ற நிலையில், அதில் பாஜக மட்டும் ரூ.532.27 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு ஆகியவை சேர்ந்து, கடந்த 2016-17-ம் ஆண்டில், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த ஆய்வறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் 2016-17ம் ஆண்டு பெற்ற நன்கொடைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் கடந்த 2015-16ம் ஆண்டில் பாஜக ரூ.76.85 கோடி நன்கொடை பெற்றிருந்த நிலையில், அது 2016-17-ம் ஆண்டில் 7 மடங்கு அதிகரித்துள்ளது. 2016-17-ம் ஆண்டில் பாஜக ரூ.532.27 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கட்சி ரூ.41.40 கோடி நன்கொடை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் பாஜகவின் நன்கொடை 9 மடங்கு அதிகமாகும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.71 லட்சம் நன்கொடை பெற்றநிலையில், இது 2016-17-ம் ஆண்டில் ரூ.6.34 கோடியாக உயர்ந்தது.

பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சிகள் பெற்ற 166 நன்கொடைகளுக்கு பான் எண் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நன்கொடையின் மதிப்பு ரூ.2.86 கோடியாகும்.

காங்கிரஸ்கட்சி ரூ.1.69 கோடியை 88 நன்கொடைகள் மூலமாகப் பெற்று இருப்பதாகக் கூறினாலும், அதில் நன் கொடை  அளித்தவர்களின் பான் எண்கள் குறிப்பிடவில்லை. இதில் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை ஏதும் பெறவில்லை எனத் தெரிவித்துவிட்டது.

பாஜக பெற்ற நன்கொடையில் ரூ.464.84 கோடிக்கு எந்தவிதமான வழியில் இருந்து வந்தது எனக் குறிப்பிடவில்லை.

ஒட்டுமொத்தமாக தேசியக் கட்சிகள் 708 நன்கொடைகள் மூலம் ரூ.563.24 கோடி பெற்றுள்ளன. இதில் பாஜக மட்டும் ரூ.515.43 கோடி பெற்றுள்ளது. தனிநபர் 663 பேர் அரசியல்கட்சிகளுக்கு ரூ.16.82 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts

error: Content is protected !!