March 31, 2023

உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.- அது காதலை வாழ வைக்கும்- ரியல் ஸ்டோரி!

2009-ஆம் ஆண்டு பழனியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருந்த அந்த வாலிபனைக் குறுகுறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் நதியா. அதை அந்த வாலிபனும் கவனித்து விட்டார். “என்ன என்னையே கவனிச்சுக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டார் அந்த வாலிபர் நதியா அருகில் வந்து. “என்னமோ புடிச்சது பார்த்தேன். பார்க்கலாம் இல்லையா?’ என்று கேட்டார் நதியா.

“தாராளமாப் பார்க்கலாம். ஆனா அதுக்கு முன்னாடி உங்க பேரு என்னனு சொல்லிட்டுப் பாருங்க. என் பேரு நாராயணசாமி” என்றார் அந்த வாலிபர்.
“என் பேரு நதியா” என்று சொன்ன அந்த இளம்பெண் “நீங்க என்ன செய்றீங்க?” என்று நாராயணசாமியைக் கேட்டார்.

“நான் சொல்லப் போற பதிலைக் கேட்டு உங்களுக்குப் புடிக்குமோ என்னமோ தெரியல. ஆனால் உண்மை அதுதான். நான் ஒரு கொத்தனார்” என்றார் நாராயணசாமி.

“கொத்தனார்னா அதுவும் ஒரு வேலைதானே? பொய் சொல்லல; ஏமாத்தல. உழைச்சிதானே சம்பாதிக்கிறீங்க.. இப்பவும் சொல்றேன். எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்குது.” என்று சொன்னார் நதியா, தரையில் கால் விரல்களால் கோலமிட்டபடியே. பிறகென்ன, பாரதிராஜா படங்களில் வெள்ளுடை தரித்த தேவதைகள் மத்தியில் இருவரும் காதல் டூயட் பாடிக் களித்தார்கள்.. திண்டுக்கல் மாவட்டம் போடி காமன் வாடி நாராயணசாமியும் நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் நதியாவும் காதல் வலையில் வீழ்ந்த கதை இதுதான்.

அதன் பிறகு இவர்களுடைய காதல் தொலைபேசி வழியே தொடர்ந்தது. மணிக்கணக்கில் இருவரும் பேசித் தங்கள் காதலை வளர்த்து வந்தார்கள். இப்படியே ஆறு ஆண்டுகள் ஆறு நிமிடங்களாகக் கழிந்தன. நதியாவிடம் ஏற்பட்டிருந்த மாறுதல்களைக் கவனித்து வந்த அவரது பெற்றோர் கூப்பிட்டு விசாரித்தார்கள். நாராயணசாமி மேல் உள்ள காதலைச் சொன்னார் நதியா. “அதெல்லாம் சரிப்படாது. அந்தப் பையன மறந்திடு. நாங்க பார்த்து வைக்கிறவனைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும். காதல் என்பதெல்லாம் நம்ம வம்சத்துக்கே சரிப்படாத விஷயம்..” என்று பெற்றோர் காதலுக்குத் தடை போட்டனர். கண்ணீரோடு காதலனை மறக்க முடியாமல் பல நாள் பட்டினி கிடந்தார் நதியா. பெற்றோரும் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வருவதாகத் தெரியவில்லை. “நீங்க அவரைக் கல்யாணம் பண்ணி வைக்கலேன்னா நான் விஷத்தைக் குடித்து செத்துப் போயிடுவேன்..” என்று தனது கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்தார் நதியா. “உன்னையெல்லாம் திருத்த முடியாது. உன் தலையெழுத்து எப்படியோ அப்படியே போ” என்று கடைசியாக வேறு வழியின்றி இறங்கி வந்தார்கள் பெற்றவர்கள்.

எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தபோதுதான் 2015 ஆம் ஆண்டு அந்த விபத்து நிகழ்ந்தது. கொத்தனார் வேலையில் ஈடுபட்டிருந்த நாராயணசாமி, உயரமான கம்பி ஒன்றைத் தலைக்கு மேல் தூக்கியபோது, மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் அது உரச உடலில் மின்சாரம் தாக்கியது. இரண்டு கைகளும் செயலிழக்கத் தூக்கி வீசப்பட்டார் நாராயணசாமி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாராயணசாமி உயிர் பிழைத்தார்; ஆனால் இரண்டு கைகளையும் நீக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. கைகளை இழந்த நிலையில் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குப் போனார். “கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் செலவாகும். ஆனாலும் யாராவது கைகளை தானம் செய்ய முன் வந்தால் உடனே பொருத்தி விடலாம்” என்று தெரிவித்தனர்.

பண வசதி இல்லாததால் சில மாதங்கள் சிகிச்சையே மேற்கொள்ளாமல் இருந்தார் நாராயணசாமி. அதன் பிறகு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய்யைச் சந்தித்து இது குறித்துத் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

இதற்கிடையில் ஒரு நாள் நதியா விடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “அம்மா அப்பா வெளியூர் போயிருக்காங்க. உங்களைப் பார்க்கணும் போல இருக்கு. உடனே வாங்க” என்று அவர் அழைக்க, நதியாவின் ஊருக்கு வந்துவிட்டார் நாராயணசாமி. நாராயணசாமி அதுவரை நடந்ததை நதியாவிடம் சொல்லவில்லை. கைகள் இல்லாமல் நதியா முன் போய் நின்றபோது, நதியா உடைந்துபோய் கீழே விழுந்து புரண்டு அழுதார்.

“என்ன இப்படி வந்து நிக்கிறீங்க? உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் எப்படி வாழப் போறேன்? நம்ம மாதிரி ஏழைகளுக்கு கைகள் தானே சோறு போடுது.. அந்தக் கைகளே இல்லேன்னா… என்னால நினைச்சே பார்க்க முடியலை”

“நதியா நடந்தது நடந்து போச்சு. இதுக்கு யார் என்ன செய்ய முடியும்? நீ வேணும்னா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க”

“எனக்கு மாப்பிள்ளைன்னா அது நீங்க மட்டும்தான். வேற யாரையும் தாலி கட்ட விடமாட்டேன். நீங்க உடனே உங்க வீட்ல சொல்லி எங்க வீட்ல வந்து பொண்ணு கேட்கச் சொல்லுங்க” என்று அழுதபடி சொன்னார் நதியா.

நதியா சொன்னபடி, நாராயணசாமியின் பெற்றோர் வந்து பெண் கேட்டார்கள். ஏற்கனவே நாராயணசாமி நதியா காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த நதியாவின் பெற்றோர், இப்போது கைகள் இல்லாமல் வந்திருந்த நாராயணசாமியைப் பார்த்து மேலும் கோபம் கொண்டார்கள்‌. “ஏற்கனவே இது சரியா வராதுன்னு சொல்லியிருந்தோம். இப்ப பையன் கைகளை வேற இழந்து வந்து நிற்கிறார். என் பொண்ணு இவரை நம்பி எப்படி குடித்தனம் நடத்த முடியும்? முதல்ல பையனுக்குக் கைகள் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க, அப்புறம் வந்து பொண்ணு கேளுங்க..” என்று சொல்லி அனுப்பினார்கள் நதியாவின் பெற்றோர்.

தன் காதலுக்காக, தன் காதலிக்காக வேண்டியாவது கைகளைப் பொருத்திக்கொண்டு வந்து நிற்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்களிடம் போராடினார் நாராயணசாமி. “நாங்க என்ன பண்றது? கைகளை தானம் செய்ய ஒருவர் கூட முன் வரவில்லை. கொஞ்சம் பொறுமையா இருப்பா. இலவசமா அறுவை சிகிச்சை செய்து முடிக்கிறோம். உன்னைப் பார்த்துக் கை இல்லாதவங்க தைரியத்தோடு கை தானம் செய்யவும், பெறவும் வருவாங்க” என்று ஆறுதல் வழங்கினார்கள் ஸ்டான்லி மருத்துவர்கள். குறிப்பாக இதில் மிகவும் ஆர்வம் காட்டினார் டாக்டர் ரமாதேவி.

கைகள் மாற்று அறுவை சிகிச்சை என்பது, மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து கைகளை எடுத்து, கைகள் இல்லாதவருக்குப் பொருத்துவது. இந்திய அளவில், ஓர் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாகச் செய்ய இருந்த முதல் கை மாற்று அறுவை சிகிச்சை இதுதான். டாக்டர் ரமாதேவி ஆலோசனையின் பேரில் பொருத்தமான கை கிடைப்பதற்காகக் காத்திருந்த நாராயணசாமிக்கு இரண்டு வருடங்கள் கழித்து 2018 – ஆம் ஆண்டு பிப்ரவரியில் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து கைகள் கிடைத்தன. சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற 39 வயது நபர்தான் நாராயணசாமிக்குக் கைகளைத் தானமளித்து அவருக்கு மறுவாழ்வு அளித்தவர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறை தலைமைப் பேராசிரியர் டாக்டர் வி. ரமாதேவி தலைமையிலான 75 பேர் அடங்கிய மருத்துவக் குழு தொடர்ந்து 13 மணி நேர அறுவை சிகிச்சை செய்து நாராயணசாமிக்கு இரு கைகளையும் பொருத்தினர். தானம் பெறப்பட்ட கைகளைப் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்று, ஏறத்தாழ ஒரு வருடமாக மருத்துவமனையிலேயே தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார் நாராயணசாமி.

தமிழகத்தின் முதல் கைகள் மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது. இது தமிழக மருத்துவத்துறையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும். சிகிச்சை முடிந்த கையோடு தமிழக அரசால் நாராயணசாமிக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி தரப்பட்டுள்ளது. கைகள் பொருத்தப்பட்ட நிலையில் நாராயணசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், நதியா குடும்பத்தினரை அணுகி பெண் கேட்டார்கள். டாக்டர் ரமா தேவி, நதியா வீட்டில் நாராயணசாமிக்கு செய்யப்பட்ட வெற்றிகரமான கைகள் மாற்று அறுவை சிகிச்சை பற்றி விளக்கிக் கூறினார். டாக்டர் ரமாதேவி தலைமையில் நாராயணசாமி – நதியா திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. இந்தத் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை இப்போது பிறந்துள்ளது.

நாராயணசாமி மாற்று அறுவை சிகிச்சை செய்த கைகளால் செல்போன், பேனா உள்ளிட்ட பொருட்களை இப்போது பயன்படுத்துகிறார். அவரால் கைகளை உயர்த்தி, விரல்களை அசைக்க முடிகிறது. போகப் போக கைகளைப் பழைய மாதிரியே பயன்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.

மருத்துவத் துறையின் வளர்ச்சியில் அறிவியல் சேரும்போது, அந்த வளர்ச்சி அடுத்தக்கட்டத்தைச் சென்றடையும். அப்படித்தான் சாத்தியமாகியுள்ளது, ‘உடல் உறுப்பு தானம்’ என்ற துறையின் வளர்ச்சியும். இதயம், சிறுநீரகம், கண் போன்றவை மட்டுமல்ல… ரத்த நாளங்கள், குடல், நுரையீரல், கல்லீரல், தோல், எலும்பு, கை எனப் பல உறுப்புகளைத் தானமாக அளிக்கலாம். ஒருவர் உடலுறுப்பு தானம் செய்வதன் மூலம், பத்துப் பேருக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். உடலுறுப்பு தானத்தைப் பொறுத்தவரையில் இந்திய அளவில், தமிழகத்துக்குத்தான் முதலிடம்.
2011 – ஆம் ஆண்டு முதல் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமத்தைப் பெற்று வைத்திருந்தது, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை. ஆனாலும், கைகளைத் தானமளிக்க யாரும் முன் வராததால் அறுவை சிகிச்சைகள் செய்யப்படவில்லை. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து எப்படி மற்ற உறுப்புகள் அனைத்தும் தானம் பெறப்படுமோ, அப்படித்தான் கைகளும்.

ஆனால் கைகள், கால்கள் போன்ற வெளிப்புற உறுப்புகளைத் தானம் அளித்தால், இறுதிச்சடங்கின்போது சங்கடமாக இருக்குமோ என்று நினைத்து தானமளிக்கப் பலரும் தயங்குகின்றனர். அதனாலேயே கைகள் தானம் பெறப்பட்டபோது செயற்கைக் கைகள் பொருத்தி, உடலை ஒப்படைத்து இருக்கின்றனர் ஸ்டான்லி மருத்துவர்கள்!

இந்த அறுவை சிகிச்சையை சிறப்பாகச் செய்து முடித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் டாக்டர் ரமாதேவியிடம் பேசிய போது, “2011-ம் ஆண்டு முதல் கை மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமத்தைப் பெற்று வைத்திருந்தது, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை. ஆனாலும், கையைத்  தானமளிக்க யாரும் முன் வராததால் அறுவை சிகிச்சைகள் செய்யப்படவில்லை. மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து எப்படி மற்ற உறுப்புகள் அனைத்தும் தானம் பெறப்படுமோ, அப்படித்தான் கைகளும். ஆனால் கை, கால் போன்ற வெளிப்புற உறுப்புகளைத் தானமளித்தால், இறுதிச்சடங்கின்போது சங்கடமாக இருக்குமோ என்று நினைத்து தானமளிக்கத் தயங்குகின்றனர். அதனாலேயே கை தானம் பெறப்பட்டபோது செயற்கை கை பொருத்தி, உடலை ஒப்படைத்தோம்.

இந்திய அளவில் சில தனியார் மருத்துவமனைகள் மட்டுமே மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட கைகளை மாற்றிப் பொருத்தும் அறுவை சிகிச்சையை  வெற்றிகரமாகச் செய்துள்ளன. அரசு மருத்துவமனைகளில், இதுவே முதன்முறை. மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள அரசு மருத்துவமனையில் இதுபோன்ற முயற்சி  மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தோல்வியடைந்துவிட்டது. எங்களுடைய முதல் முயற்சியே வெற்றிபெற்றதில், பெருமகிழ்ச்சி. என்றாலும், இந்த மகிழ்ச்சி தந்த  பெருமையைக் காட்டிலும், அழுத்தம் அதிகம். காரணம், இதற்குமுன்பு இப்படியான அறுவை சிகிச்சைகள் அதிகம் செய்யப்படாததால், இதன் பக்கவிளைவுகள் குறித்தோ, பிரச்னைகள் குறித்தோ அதிகம் தெரியவில்லை. நோய்த்தொற்று ஏதேனும் ஏற்படக்கூடுமோ என்ற பயமும் இருந்தது. அதனால்தான் அவரை கடந்த ஒரு வருடமாக எங்கள் மருத்துவமனையிலேயே சிறப்பு வார்டு ஒன்றை அமைத்து தங்க வைத்திருந்தோம்!’’ என்றார்.

ஆக.. மண்ணுக்குப் போகும் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. அது மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு உதவும்! மூளைச்சாவு அடைந்தவர்கள் உடல் தானம் மூலம் 10 பேர் உயிர்த்தெழ உதவ முடியும் நம்மால்!

மருத்துவர் அமலோற்பவநாதன்