September 23, 2021

அமெரிக்க அதிபரானார் 70 வயசு தாத்தா டொனால்டு டிரம்ப்!

கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவர் 45வது அதிபராக நேற்று பதவி ஏற்றார் .வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அதிக வயதில் (70) அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவர் என்ற சாதனையை டிரம்ப் படைத்துள்ளார்.முன்னதாக அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் பென்ஸ், துணை அதிபராகப் பதவியேற்றார். அதிபர் பதவியேற்கும் முன்னர் துணை அதிபருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அமெரிக்க நடைமுறையாகும்.

donalt jan 21

முன்னதாக, முன்னதாக நேற்று முன்தினம் இரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள பிளேர் ஹவுஸில் தங்கினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி நேற்று காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்றனர். பின்னர் அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்துப் பேசினார். ஒபாமா, அவரது மனைவி மிஷெல் ஒபாமா சார்பில், டிரம்ப், அவரது மனைவி மெலாயாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஒபாமாவும், டிரம்ப்பும் கூட்டாக நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.

இந்தத் அதிபர் தேர்தலில் டிரம்பிடம் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன், அவரது கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமார் 8 லட்சம் பேர் முன்னிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றார். விழாவில் புதிய அதிபராக டிரம்ப், துணை அதிபராக பென்ஸ் மற்றும் அமைச்சர்கள் பைபிள் மீது ஆணையிட்டு, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பதவிப் பிரமாணத்தில் அவர் பயன்படுத்தும் பைபிள் ஆபிரகாம் லிங்கன் 1861-இல் பயன்படுத்திய பிரதியாகும்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க காங்கிரஸ் குழு உறுப்பினர்களுடன் டிரம்ப் மதிய உணவு விருந்தில் பங்கேற்றார். பின்னர் அதிபராக முதல் உரையை நிகழ்த்தினார். முன்னதாக லிங்கன் நினைவு இல்லத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்கள் மத்தியில் டிரம்ப் பேசினார். அப்போது அவர் “ஒன்றுபட்ட அமெரிக்காவாக நாம் அனைவரும் மாற வேண்டிய தருணம் இது. அமெரிக்காவை மிகச்சிறந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நமது மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அமெரிக்கா மிகச்சிறந்த இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும்.இதற்காக நான் மிகக்கடினமாக உழைப்பேன் என்று உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நமது வேலைகளை நாம் திரும்ப பெற வேண்டும். நமது வேலைவாய்ப்புகளை மற்ற நாட்டினர் தொடர்ந்து செய்ய நாம் அனுமதிக்கக்கூடாது. நமது மிகச்சிறந்த ராணுவத்தை இன்னும் சிறப்பானதாக கட்டமைக்க வேண்டும். நமது எல்லைகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கான இயக்கம் தொடங்கி விட்டது. இது மிகச்சிறப்பானது” என்று அவர் பேசினார். அவருடன் மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜார்டு குஷ்னர், மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை, குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வென்றார். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்விலும் கடுமையான போட்டியை டிரம்ப் எதிர்கொண்டார்.அமெரிக்காவின் 41-ஆவது அதிபர் ஜார்ஜ் புஷ் மகனும், 43-ஆவது அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் சகோதரருமான ஜெப் புஷ் உள்பட 16 வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, துளிக்கூட அரசியல் அனுபவம் இல்லாத டிரம்ப் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக வெற்றி பெற்றார்.அவருடைய சோதனைகள் அத்துடன் முடியவில்லை. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், தனிப்பட்ட முறையில் டிரம்ப்பை விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டார். அவரது மனைவி மெலானியாவையும் ஹிலாரியின் ஜனநாயகக் கட்சியினர் விட்டு வைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு டிரம்ப் பதிலளிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தனது ஆக்ரோஷமான பிரசார உத்தியையும் அவர் இறுதி வரை மாற்றிக் கொள்ளவில்லை. நான் அமெரிக்க அதிபராவேன் என்று 1987-ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டார் என்பது நினைவுக்கூறத்தக்கது.