இந்திய குடிரசு விழாவில் கலந்து கொள்ள ட்ரம்ப் மறுப்பு! – ஏன்?
நம் நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொள்ள முடியாதது ஏன் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் விளக்கமளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்தியாவில் குடியரசு தின விழா கொண்டாடப் படவுள்ளது. டில்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பு மற்றும் விழாவில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுப்பது வழக்கம். அதன்படி, அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை டிரம்ப் ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும், இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் கூறிவருகிறது. ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தம், ஈரானுடன் நட்புறவு வைத்துள்ளது போன்ற காரணங்களால்தான், இந்தியாவின் அழைப்பை டிரம்ப் நிராகரித்ததாக செய்திகள் வெளியாயின.
இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், டில்லியில் செய்தியாளர்களிடம்,”அடுத்த மாதம் அதிபர் டிரம்ப்புக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கின்றன. குறிப்பாக இங்கு குடியரசு தின கொண்டாட்டத்தின் போது, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்ற வேண்டியுள்ளது. குடியரசு தின விழாவில் அவரால் பங்கேற்க முடியாததற்கு ஏற்கெனவே நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுதான் காரணம்” என்று தெரிவித்தார்.