ஊரடங்குக் காலமாகிய இச்சூழலில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்!

ஊரடங்குக் காலமாகிய இச்சூழலில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்!

கொரோனா பரவலால் அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீடுகளில் குடும்பத்தினர் முடங்கியிருக்கும் சமயத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைவரும் குடும்பத்துடன் வீடுகளில் தங்கியுள்ளனர். கிடைத்த வாய்ப்பில் செல் போன், டிவிகளில் பார்ப்பதில் மக்கள் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. அதேநேரத்தில் வீடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து இதுவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 257 புகார்கள் வந்திருப்பதாகவும் அதில் 69 புகார்கள் வீடுகளில் நிகழும் வன்முறைகள் குறித்து வந்ததாகவும் பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஷர்மா கூறியுள்ளார். மார்ச் முதல் வாரத்தில் இதுபோன்று 3 புகார்களே வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் பெரும்பாலான புகார்கள் மின்னஞ்சல் மூலம் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக புகார்களைப் பெற்றிருப்பதாகத் தேசிய பெண்கள் ஆணையம் கூறியுள்ளது. அதேசமயம், வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் ஊரடங்கு உத்தரவால் சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!