டி. பி. பேஷண்டுகள் குறித்து தகவல் தெரிவிக்காத டாக்டர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை: மத்திய அரசு உத்தரவு

டி. பி. பேஷண்டுகள் குறித்து தகவல் தெரிவிக்காத டாக்டர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை: மத்திய அரசு உத்தரவு

கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.). வெளியிட்ட ஒரு அறிக்கையில் காச நோயால் இறப்பவர்களும் காச நோய்க்கு ஆளானவர்களும் உலக அளவில் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வந்தாலும், சமீபகாலமாகச் சில நாடுகளில் காச நோய்க்கு ஆளாகும் புதியவர்களின் எண்ணிக்கையும், காச நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் இதற்கு முன்னால் மதிப்பிட்டதைவிட அதிகமாக உள்ளன என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு முக்கியக் காரணம், இந்தியாவில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்திருப்பதுதான். 2014-ல் 22 லட்சம் பேருக்கு காச நோய் ஏற்பட்டது. 2015-ல் அந்த எண்ணிக்கை 28 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வுகூட இடைக்கால மதிப்பீடுதான். உண்மையில், காச நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும் என்றும் கவலை தெரிவித்திருந்தது..

காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள் 2013 முதல் 2015 வரையில் தங்களிடம் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்த பிறகுதான், காச நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு தெரிய வந்திருக்கிறது. காச நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தால் அரசுக்கு அது பற்றிய தகவலைத் தெரிவிப்பது கட்டாயம் என்று 2012-ல் மத்திய அரசு அறிவித்த பிறகும்கூட, பல தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அதில் அக்கறை காட்டவில்லை.
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளில் 50% பேரும், அரசு மருத்துவமனைகளில் 65% பேரும் தான் முழுமையாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக் கிறார்கள். அப்படியெனில், இரு பிரிவுகளிலும் கணிசமானோர் நோயைத் தீர்க்கும் மருந்துகளை உட்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

இத்தனைக்கும் காச நோய்க்கு நல்ல மருந்துகள் உண்டு, அதை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு முதலில் ஊட்டப்பட வேண்டும். காச நோய் வந்தவர்கள் அதை மறைக்கவோ, அதைக் கண்டு அச்சப்படவோ கூடாது. மருந்தைச் சிறிது காலத்துக்கு மட்டும் உட்கொண்டுவிட்டு, குணமடைந்துவிட்டதாகக் கருதி நிறுத்திவிட்டால், பிறகு தடுப்பு மருந்துகளுக்கு அது கட்டுப்படாது என்பதை பலரும் உணருவதில்லை. இந்நிலையில் காசநோயாளிகள் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்காவிட்டால், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து காசநோயை (டிபி) ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ள நிலையில், அதற்கு வலுசேர்க்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,“மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் காசநோயாளிகள் குறித்து உள்ளூர் காசநோய் சிறப்பு சுகாதார மையத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், காசநோய் ஒருவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது தெரிந்து இருந்தும் அது குறித்து தகவல் தெரிவிக்காமல் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐபிசி 269, 270 பிரிவின்படி அதிகபட்சமாக 2 ஆண்டுகள் கூட சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்திய குற்றவியல் பிரிவு 269 என்பது மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் குறித்து அறிந்தும், அது பரவுவது அறிந்தும் அதைத்தடுக்காமல் கவனக்குறைவாக இருத்தலாகும். பிரிவு 270 என்பது, தொற்றுநோய் பரப்பும் நோயை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பரப்ப அனுமதித்தல் பிரிவாகும்.

காசநோய் என்பது மிகவும் ஆபத்தான தொற்றுநோயாகும். மனித உயிர்களுக்கு அச்சுறுத்தும் நோயை விளைவிக்கக் கூடியதாகும். இந்த நோய் உள்ள நோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களை மற்றவர்களுடன் பரவாத வகையில், அவர்களை மேலாண்மை செய்வது மிகவும் அவசியமாகும். அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும், அவர்கள் குறித்த விவரங்களையும் மருத்துவர்கள அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். காசநோய் குறித்து ஆய்வகங்கள், ரத்தப் பரிசோதனை மையங்கள் ஆகிய இடங்களில் இருந்து காசநோயாளிகள் குறித்த விவரங்களை சேகரித்து வைத்திருப்பது, பொது சுகாதார மைய அலுவலர்களின் கடமையாகும்.” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!