March 31, 2023

ஞாபகம் வருதே. ஞாபகம் வருதே – இங்க் பேனா எனும் கருவி…!

அன்றைய நாட்களில் பால் பாயின்ட் பேனா அதிக புழக்கம் இல்லாதபோது, ஜனங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு ஃ பவுண்டன் பேனா மட்டுமே. அதாவது இங்க் ஊற்றும் மை பேனா. கடையில் சில்லறை விலைக்கு இங்க் விற்பார்கள். இங்கின் அளவு கோல் அவுன்சில். நீல இங்க், பச்சை இங்க், சிகப்பு இங்க், கருப்பு இங்க்மட்டுமே விற்பனை செய்யப் பட்டது. கடைக்காரரிடம் இங்க் அளக்கும் அளவி அந்த பெரிய இங்க் பாட்டிலின் மீதே கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கும். நிச்சயமாக இங்கில் தண்ணீர் கலக்கப் பட்டு தெளிவில்லாத எழுத்துக்களை பிரசவிக்கும். அடர் நீலத்திற்கு பதில் வெளிர் நீலத்தில் எழுதும். அன்றும் கேம்லின் கம்பனியார் தயாரித்த தரமான இங்க் இருந்தது. ஆனால் விலை அதிகம். கட்டுப் படி ஆகாது. இங்க் பேனா முதலியவைகள் வீடு பட்ஜெட்டில் வராது. அவை unforeseen செலவுகளின் தலைப்பில் வரும். ஒரு புதிய பேனா வாங்க அத்தனை மெனக்கெட வேண்டும் வீட்டில். இங்க் வாங்க கேட்கவே வேண்டாம். அடுத்த வீட்டில் கடனாக கேட்டு போட்டுக் கொள் என்றே அம்மாவிடமிருந்து பதில் வரும்.

நம் மன நிலைக்கு ஏற்றபடி இங்க் மாற்றுவோம். சில நாள் கருப்பு சில நாள் நீலம். திடீரென்று ஒரு நாள் கருநீலமாக இருக்கும். காரணம் கருப்பு நீலம் இரண்டையும் தெரிந்தோ தெரியாமலோ கலந்திருப்போம். திடீரென்று இங்க் தீர்ந்து போனால், அடுத்த மாணவனிடம் இங்க் கடன் வாங்குவது என்பது தவிர்க்க இயலாது. அவனும் தன பேனாவின் கழுத்தை திறந்து, நம் பேனாவின் உடலுக்குள் இன்ஜெக்ஷன் மருந்து ஊற்றுவது போல திரவத்தின் மினிச்கஸ் குமிழை சர்வ ஜாக்கிரதையாக பப்பாதி ஊற்றிக் கொடுக்கும் கலையை என்னவென்று சொல்வது? அதைவிட அவன் அந்த இங்க கொடுத்ததை ஒரு வருடம் வரை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு திரும்பி வாங்கி செல்லும் பழக்கம் உள்ள ஞாபக சக்தி மெமரி மன்னார்களை மறக்க முடியாது.

இங்க் பாட்டில் வாங்குபவர் நிச்சயம் கூட ஒன்று வாங்க வேண்டும். அதன் பெயர் இங்க் ஃபில்லர்.

தலையில் தொப்பி போட்டமாதிரி ஒரு இரப்பர் வஸ்து பிப்பெட்டுக் குழாயில் பொருத்தப் பட்ட மூக்கு உறிஞ்சி. இதன் மூலம் இங்கினை உறிஞ்சி பேனாவில் உடலுக்குள் போட வேண்டும். பேனாவின் உடலுக்கு பேரல் என்று பெயர். நேரடியாக இங்க்பாட்டலில் இருந்து பேரலுக்குள் இங்க் போட கம்ப சூத்திரம் தெரிந்திருக்க வேண்டும். அதை சிந்தாமல் போடுபவன் ஜெகஜ்ஜாலக் கில்லாடி எனப் படுவான். எப்போதும் இங்க் சிந்தாமல் போட்டுத் தர அவனை எப்போதுமே எல்லோரும் நாடுவார்கள். பரீட்சை சமயத்தில் பேனாவின் கூடவே இங்க் பாட்டில்களை கொண்டு வரும் பிச்சு மணிகளும் இருந்தார்கள். அத்த்தனை எழுத வேண்டியது இருக்கிறதாம் பரிட்சையில்.

பேனாவிற்கு நிப் மற்றும் நாக்கு எனும் கருத்த பிளாஸ்டிக் சாதனமும் உண்டு. அடிக்கடி நிப் எனும் மெட்டல் சமாச்சாரம் உடைந்து விடும். உடைந்தால் கூட அப்படியேதான் எழுதுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பத்மநாபன்கள், நாசுக்காய் அந்த நிப்பை தரையில் தேய்த்து, பட்டையாக வரிகள் வருமாறு எழுத வைத்து விடுவார்கள். அதே போல பேனாவிலிருந்து இங்க் சொட்டுகிறது என்றால் உடனே நிப்பையும் நாக்கையும் கழட்டி சற்றே அட்ஜஸ்ட் செய்து மீண்டும் பொருத்தி சரி செய்து கொடுப்பார்கள் சில முளையிலே பூத்த மெக்கானிகல் இஞ்சினியர்கள். இங்க் சரியாக வரவில்லை என்றால் நாக்கில் உள்ள இங்க் வழி தடத்தில் ஒரு பிளேடு எடுத்து நன்றாக கீறி திரவம் வரும் வழி தடத்தை சரி செய்து கொடுக்கும் சிவில் இஞ்சினியர்களையும் பள்ளிக் கூடத்தில் காணலாம் ….. சில நேரம் பேனாவின் கழுத்தை பாதி வரை திறந்து பின்னர் பேனாவை கவிழ்த்துப் பிடித்து கழுத்து மூடி சொட்டு சொட்டாக இங்க்கை வரவழைத்து அடைப்பை சரி செய்யும் கார்ப்பரேஷன் டெக்னிஷியன்களும் உண்டு.

ஃ பவுண்டன் பேனாக்களில் முக்கியமான ஒன்று, பார்க்கர் பேனா. உடலெங்கும் பவழ நிறமும், கழுத்து மட்டும் கருத்த நிறமுமாக இருந்த பேனாவே அத்தனை பேனாவிலும் அழகு ராணி. அதன் அழகிற்கு விலையே சொல்ல முடியாது. என்னைப் போல தந்தையின் பேக்கட் மணி இல்லாத மாணவர்களுக்கு பார்க்கர் பேனா ஒரு கனவு மட்டுமே . எங்களைப் போல எளியவர்களுக்கு கேம்லின் பேனா மட்டுமே. பேனா வாங்குவதை ஒரு விழாவாகவே நடத்துவோம். ஒரு நாலு பேர் சேர்ந்துகொண்டு அபிப்பிராயங்கள் சொல்லி, கேட்டு பின்னரே வாங்குவோம். ஒரு பேனா வாங்குவதற்குள் கடைக்காரரை அழ வைத்து விடுவோம்.

ஒரே சட்டைப் பையில் இரண்டு மூன்று பேனாக்கள் வைத்த வைத்திய நாதர்களும் உண்டு. கரெக்டாக நீல நிறம் கொண்ட பேனா உள்ளில் நீல இங்க. சிகப்பு நிற பேனாவில் சிகப்பு இங்க.. விதி மாறாமல் எல்லா மாணவர்களும் இந்த நியதியை பின் தொடர்வார்கள். சில நேரம் பச்சை இங்க போட்ட பேனா எவனாவது கொண்டு வந்தால் போலிஸ் பிடித்துக் கொள்ளும் என்று பொறாமையால் பயமுறுத்தியே அவனை கொண்டு வருவதை நிறுத்தி விடுவோம். பின்னொரு நாளில் கேம்லின் கம்பனியார் அறிமுகப் படுத்திய டர்காயிஸ் நீலம் எனும் இங்க்கே என் வாழ் நாளில் மிக அதிக தூரம் உடன் வந்தது. ஏனோ அதன் மேல் ஒரு பிரேமை.

என்னதான் நல்ல பேனாவாக இருந்தாலும் ஒரு நாள் சளி பிடித்து லீக் ஆகவே செய்யும். பார்க்கரும் விதி விலக்கல்ல. இங்க் லீக் ஆனால் மகா மோசம். கைவிரல்களில் பட்டு, கட்டை விரல் ஆள் காட்டி விரல் மற்றும் நாடு விரல்களில் மை படிந்து, சாதம் பிசையும்போது நீல சோறு உண்ண வேண்டி வரும். எத்தனை அழித்தாலும் போகாது, அதுவாக மூன்று நாள் கழித்து மருதாணி மாதிரி மெல்ல அழியும். அந்தக் காலத்திலேயே, பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் போட்டு இங்க் கரையை அழிக்க மருந்து கண்டு பிடித்த கெமிகல் இன்ஜினியர்களும் என் கூட ஏழாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள். அது போலவே, கழுத்தில் லீக் ஆனால் குளியல் சோப்போ இல்லை கிரீசோ அதன் திருகு மேல் இட்டு லிக்விட் சீலிங் செய்த விற்பன்னர்களும் இருந்தார்கள்.

ஹீரோ பேனா பற்றி சொல்லாமல் போனால் விமோசனம் கிடைக்காது….. ஒரிஜினல் ஹீரோ பேனா கழுத்து முனையில் ஒரு தங்க நிற அம்புக்குறி இருக்கும் ….டுப்ளிகேட்டுக்கு இருக்காது…. இங்க் ஃ பில்லருடன் வரும் பேனா. பின்புறம் அதிக எடை உள்ளதால் எழுத்துக்கள் சரியாக வராது. அது போல கழுத்தில் விரல்கள் பட பிடிக்கையில் ஒரு வித தயக்கம் காரணமாக எழுத்துக்கள் அழகாக வரவில்லை. கழுத்து நீளம குறைந்த பேனாக்களே அழகாக எழுத வரும் என்ற கணிப்பினால், கேம்லின் எனது விருப்பமான தேர்வு.

இன்றைக்கு வகை வகையாக செவழித்து தூக்கி எறியும் பேனாக்கள் வந்து விட்டது. யுனி பால், ஜெல் பேனா, என எல்லாம் வந்து பார்க்கர் போன்ற பேனாக்களை பின் நோக்கி ஓடச் செய்து விட்டது. இங்க் கடைகளில் சில்லறை விற்பனை உண்டா என்று தெரியவில்லை. கிராமங்களில் இருப்பதாகத் தெரிகிறது. கேம்லின் பேனாக்கள் வடிவம் மாறி இருக்கின்றன . பார்க்கர் பேனா ஜோடியாக வருகிறது . விமான நிலையக் கடைகளில் கொள்ளை லாபத்திற்கு விற்கிறார்கள்.

இங்க் கரை, விரல்கள் இடையே மை என்று நினைக்கையில் ஒரு கவிதை கண்களில் நீர் முட்ட வந்து போகிறது.
ஜவுளிக்கடை கணக்கர்
அப்பாவின் விரல்களுக்கு
இடையில் மசிக்கரை
காணும் வரை நிறுத்தவில்லை
அப்பாவின் ஜோபியில் நான்
கை வைப்பதை…..
அப்பா…என் நல்ல அப்பா ….
சொல்லவில்லை
சட்டையில் பணம்
குறைந்ததை கடைசிவரை…..
அப்பா …என் நல்ல அப்பா….

– டிமிடித் பெட்கோவ்ஸ்கி