என்ஜினியர், டாக்டர் டிகிரி பட்டமா? கொஞ்சம் யோசிக்கலாம்.. வாங்க!

பொறியியல் கல்லூரிகளில் நிரப்படாத இடங்கள் சுமாராக ஒரு லட்சம் இடங்கள் உள்ளதாம். இல்லாமல் என்ன செய்யும்? வருடா வருடம் லட்சக்கணக்கில் மாணவர்கள் பொறியியல் படிப்பு படித்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு எல்லாம் என்ன வேலை வாய்ப்பு உள்ளது? சுமார் 20 – 30 % பேருக்கு வேலை கிடைத்தாலே அதிகம். இந்த லட்சணத்தில் பல லட்சங்கள் செலவழித்து படித்துவிட்டு மதிப்புமிக்க வருமானம் கொட்டும் மதிப்பு மிக்க வேலை கிடைக்கும் என்று பார்த்தால் எதுவும் கிடைப்பதில்லை.

மாதம் 10,000 – 15,000 சம்பளத்தில்தான் வேலை கிடைக்கின்றது. அதற்கும் மற்ற சாதாரண படிப்புகள் படித்தவர்களுடன் கடும் போட்டி போடவேண்டி உள்ளது. எனக்கு தெரிந்து கட்டிட மேஸ்திரி வேலை பார்க்கும் நிறைய சிவில் எஞ்சினியர்களை தெரியும். இவர்களுக்காவது ஒரு அனுபவம் கிடைக்கும். ஆனால் படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் ஏற்றுமதி தொழிற்சாலைகளில் புரடக்சன் இன்சார்ஜ், சூப்பர்வைசர், கணக்குபிள்ளை, கம்ப்யுட்டர் ஆபரேட்டர் என வேலை பார்க்கும் நிறையப் பேர் உள்ளனர். இதற்க்கு எல்லாம் லட்சக்கணக்கில் செலவழித்து இந்த படிப்புகள் படிக்க வேண்டிய தேவையே இல்லை.

எஞ்சினியர் என்ற படிப்பின் கெளரவம் மற்ற வேலைகளை செய்யவிடாமல் தடுக்கின்றது. எஞ்சினியர் படிப்பு படித்து விட்டு இந்த வேலைகளுக்கு போவதா என நிறையப்பேர் தயங்குகின்றனர்.மருத்துவ படிப்பின் லட்சணமும் கிட்டத்தட்ட இந்த அளவில்தான் உள்ளது. ஒரு வித்தியாசம் அங்கு கல்லூரிகளில் இடம் நிரம்பி விடுகின்றது. ஆனால் படித்து முடித்துவிட்டு வெளியில் வந்து பார்த்தல் ஏமாற்றம்தான் மிஞ்சுகின்றது. பெற்றோர் பிரபல மருத்துவர்கள் என்றால் பிரச்னை இல்லை. பெற்றோர்களுடன் ஒட்டிக்கொண்டு அவர்கள் பெயரில் வளர்ந்துவிடலாம். புதியவர்களுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலதான் இருக்கும்.

கஷ்டப்பட்டு ஏழெட்டு வருடங்கள் MS, MD என மருத்துவம் படித்து முடித்துவிட்டு நிறைய பேர் நோயாளி கிடைக்காமல் மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டு சாலையின் மேல் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டு உள்ளனர். தடுக்கில் விழுந்தால் வீதிக்கு ஒரு MBBS மருத்துவர்கள் உருவாகிக்கொண்டு உள்ளார்கள். இவற்றில் ஒரு சில மருத்துவமனைகளுக்கே நோயாளிகள் அதிகம் வருகின்றனர். மற்ற மருத்துவமனைகள் எல்லாம் காற்று வாங்கிக்கொண்டு உள்ளனர்.

காரணம் கைராசி என்பதுதான் மருத்துவத்தில் மிக அதிகபட்ச முக்கியத்துவம் பெறுகின்றது. இதில் பெயர் எடுக்கவில்லை என்றால் எந்த பிரபல கல்லூரியில் சிறப்பாக முதலிடத்தில் தேர்ச்சி பெற்று இருந்தால் கூட ஒன்றும் செய்யமுடியாது. பெரிய பெரிய மருத்துவமனைகளில் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிக மிகக்குறைந்த சம்பளத்தில் பணிக்கு சேர்கின்றனர். இப்படி சேர்வதற்கே கெஞ்சி கூத்தாடி, ஏகப்பட்ட சிபாரிசுகள் பெற்றுதான் சேரமுடியும். காரணம் அங்கும் ஏகப்பட்ட போட்டிகள், காத்திருப்பு பட்டியல்கள் உள்ளன.

இங்கு அவர்கள் எந்த அளவுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன், பிளட் டெஸ்ட் ஆகியவற்றை எழுதி தந்து மருத்துவமனைக்கு அதிக வருமானம் தேடி தருகின்றார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்களுக்கு சம்பளம், சலுகைகள், மரியாதை எல்லாம் கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகும்.சரி அரசு மருத்துவமனைகளில் வேலைக்கு சேரலாம் என்று பார்த்தால் அங்கு அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்றுத்தான் வேலையில் சேரமுடியும். அதற்கும் எக்கச்சக்க போட்டி உள்ளது. நேரடியாகவோ, வேலைவாய்ப்பு மையத்தின் பதிவு வரிசைப்படியோ சேரமுடியாது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் படித்து முடித்துவிட்டு வரும் மருத்துவர்களுக்கு எதற்கு மறுபடியும் அரசு தேர்வாணைய தேர்வு? இதில் என்ன புதிய தகுதியை கண்டுபிடித்துவிட போகின்றார்கள்?

இதே அளவுக்கு போய்க்கொண்டு இருந்தால் மருத்துவம் படித்துவிட்டு தொழிற்சாலைகளில் மற்ற சாதாரண வேலை செய்யும் நிலை வந்தாலும் வந்துவிடும்.இந்த லட்சணத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை என நிறையப் பேர் கூறுகின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுக்கு வார்டு மருத்துவர்கள் வந்தால் அவர்களுக்கு என்ன வருமானம் கிடைக்கும்? எல்லா மக்களுக்கும் மாறி மாறி தினமும் எக்கச்சக்கமாக நோய்கள் வந்துகொண்டு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இதற்காக புதிது புதிதாக நோய்கள்தான் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஊர்முழுதும் மருத்துவர்களை நியமித்து அவர்களுக்கு அரசு சம்பளம் தரவேண்டும். இது சாத்தியமா?

இது புரியாமல் மருத்துவ படிப்பு படித்தால் பல கோடிகளை அள்ளலாம் என்ற கனவில் நிறையப் பேர் கோடிகளை அள்ளி வீசி தனியார் மருத்துவமனைகளில் இடம் பிடிப்பது மிக கொடுமையான விஷயம்.தனியார் கல்லூரிகள் கோடி கோடியாக சம்பாரிக்கவே தேவையின்றி இப்படி பொறியியல், மருத்துவ படிப்பின் மீது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஆசையை தூண்டிவிடுகின்றனர். இதற்கும் மக்களும் பலியாகின்றனர்.

இதில் உள்ள சிரமங்களை தெரிஞ்சிக்கிட்டு , நடைமுறையில் உள்ள யதார்த்த சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு தனியார் கல்லூரிகளுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை, கல்லூரி கட்டணம் என செலவு செய்யாமல் அரசு கல்லூரிகளில் அல்லது குறைந்த கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளில் குறைந்த செலவில் படிக்க முயற்சித்தால் கடைசியில் வீடு, வாசல், தோட்டம் ஆகியவையாவது மிஞ்சும். கடனில்லாமல் பெற்றோர்கள் நிம்மதியாக கொஞ்ச நாள் உயிருடன் இருக்க முடியும்.திருமணத்திற்கு வரன் தேட, கல்யாண பத்திரிக்கையில் பெயருக்கு பின்னால் சேர்க்க ஒரு பட்டம் உள்ளது என்பதுதான் இத்தகைய படிப்புகளில் கிடைக்கும் ஒரே ஆதாயம்.

நடராஜன் ஜி

Related Posts

error: Content is protected !!