இந்தியாவில் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் எது தெரியுமா?
கடந்த ஆண்டான 2021 நிலவரப்படி டெல்லியில் நாள்தோறும் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் இந்தியாவில் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக தலைநகர் டெல்லி மாறியுள்ளது எனவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நம் நாட்டில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றம், பலாத்காரம் உள்பட பல்வேறு குற்றங்களை தனித்தனியே மாநிலம் வாரியாக இந்த தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக டெல்லி உள்ளது.
20 லட்சம் பேருக்கு மேலாக வசிக்கக்கூடிய இந்தியாவில் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிராக 2021ல் பதிவான குற்றங்கள் வெளியாகி உள்ளன. இதில் நாட்டில் அதிகபட்சமாக டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2020ம் ஆண்டில் 9,782 குற்றங்கள் பதிவாகி இருந்த நிலையில் 2021ல் குற்றங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியின் பங்கு மட்டுமே 32.20 சதவீதமாக உள்ளது.
இதன்மூலம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் நடக்கும் மேலும் தினமும் டெல்லியில் 2 சிறுமிகள் வரை பலாத்காரம் செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லிக்கு அடுத்து 2வது இடத்தில் மும்பை உள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு 5,543 குற்றங்கள் பதிவாகி உள்ளன. 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிராக பதிவான வழக்குகளில் மும்பையின் பங்கு 12.76 சதவீதமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் டெல்லி, மும்பையை தொடர்ந்து 3-வது இடத்தில் பெங்களூரு இருக்கிறது. பெங்களூரில் கடந்த ஆண்டு 3,127 குற்றங்கள் பதிவாகி உள்ளன. பெண்களுக்கு எதிராக பதிவான வழக்குகளில் பெங்களூரின் பங்கு 7.2 சதவீதமாக உள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்தியாவில் உள்ள 19 மெட்ரோ நகரங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த நகரங்களாக சென்னை, கோவை ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 874 குற்றங்களும் கோவையில் 190 குற்றங்களும் மட்டுமே நடந்துள்ளது. இந்த இரண்டு நகரங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லி, மும்பை, பெங்களூர் உள்பட 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிராக 43,414 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 8,664 குற்றங்கள் கடத்தல் தொடர்பானது. இதில் 3,948 குற்றங்கள் டெல்லியில் மட்டுமே நடந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.