August 8, 2022

தமிழகத்தின் தற்போதைய அவசிய அவசரத் தேவை என்ன தெரியுமா?-எஸ்.பி. லட்சுமணன்

‘‘நான் ‘தமிழ்நாடு’ என்று மூன்று முறை சொல்வேன்… நீங்கள் வாழ்க என்று ஒவ்வொரு முறை யும் சொல்லுங்கள்…’’- சென்னை ராஜ்யத்தின் முதலமைச்சரான அறிஞர் அண்ணா இப்படிச் சொல்ல… அவரது கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல… அவரது அரசியல் ரீதியான எதிரிகள் என்று சொல்லப்படும் அத்தனை உறுப்பினர்களும் சேர்ந்து அந்த வேண்டுகோளை ஏற்க… ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற கோஷம் 1967 ஜூலை 18ம் தேதி தமிழக சட்டமன்ற வளாகம் முழுக்க எதிரொலித்தது.

சென்னை ராஜ்யம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவதால் என்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது? என்று கேட்கிறார்கள்… இது சாதாரணப் பெயர் மாற்றம் அல்ல… தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான மனநிறைவை அளிக்கும் மாற்றம் என்று சொல்லி, பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாராளுமன்றத்தில் விவாதிக்க வைத்து, ஜனாதிபதியின் ஒப்புதலோடு, தமிழர் திருநாளான 1969 ஜனவரி 14 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரபூர்வமாக நிலை பெற்றது.

உணர்ச்சி என்ற வார்த்தையை அண்ணா தெரிந்து சொன்னாரோ… தற்செயலாகச் சொன்னாரோ… அந்த உணர்ச்சிதான் இன்றுவரை தமிழகத்தைக் காத்து நிற்கிறது. அப்படி எந்த ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது? இந்தியா சுதந்திரம் பெறும் முன்பாகவே தமிழகத்தில் நிலவிய சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டி அதைக்களைய முனைந்த நீதிக்கட்சியின் பிரச்சாரம் மற்றும் செயல்பாடுகள் தமிழக மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அது அவர்களை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தும் அளவுக்கு வளர்ந்தது. இந்த உணர்ச்சிபூர்வமான அரசியல் மாற்றத்தை அன்றைய காங்கிரஸ் கட்சி ரசிக்கவில்லை. நீதிக்கட்சிக்குள்ளேயே புகுந்து கோஷ்டி பூசலை உருவாக்கி, ஆட்சிகளைக் கவிழ்த்து… மோதல்களை உருவாக்கி பல்வேறு சித்து விளையாட்டுக்களை செய்த அக்கட்சி, 1967 வரை தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பிலும் அமர்ந்து தமிழ், தமிழர் என்ற உணர்வு மேலோங்கிவிடாமல் செய்ய தன்னாலான அத்தனையும் செய்தது.

சென்னை ராஜ்ஜியத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டுங்கள் என்று எழுந்த கோரிக்கையை ராஜாஜி தொடங்கி காமராஜர் வரை அத்தனை பேரும் ஏற்க மறுத்தார்கள். பழுத்த காங்கிரஸ் காரரான தியாகி சங்கரலிங்கனார், அறுபது நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தபோதும் காங்கிரஸ் அரசு செவிசாய்க்கவே இல்லை. பின்னாளில் அண்ணா அதைச் செய்துகாட்டினார்.

தமிழ், தமிழர் என்ற உணர்வின் அடிப்படையில் மக்கள் ஒன்றிணைவதை விரும்பாத காங்கிரஸ் கட்சி, இந்தியை வலுக்கட்டாயமாகப் புகுத்தியது. குலக் கல்வி முறையைக் கொண்டுவந்து சமநிலையற்ற சமுதாயத்தை நிறுவப்பார்த்தது. ஆனால், இந்த செயல்களே அக்கட்சியின் அழிவுக்கு காரணமாகி, கோஷ்டிகள் அற்ற வலுவான கட்சியாக தி.மு.க.வை மாற்றி, ஏகபோகத் தலைவனாக அறிஞர் அண்ணாவை உருவாக்கி ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிட்டுப் போனது.

ஆட்சிப்பொறுப்பில் இரண்டாண்டுகளைக்கூட நிறைவு செய்ய முடியாமல் இயற்கை எய்திய அண்ணா, தனது பதவிக் காலத்தில் மூன்று முக்கிய விஷயங்களைச் செய்து காட்டினார். ஒன்று, சென்னை ராஜ்ஜியத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உணர்ச்சி கலந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது; இரண்டாவது, சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது; மூன்றாவது, இனி தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட மாட்டாது என்று உத்தரவிட்டது.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்புக்கு வந்த கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொடங்கி இன்றைய எடப்பாடி பழனிசாமி தலைமை வரை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி ஆட்சிகள் அமைந்தாலும், அது திராவிடக் கட்சிகளின் ஆட்சி என்ற அடையாளத்தோடு அமைந்து தேசியக் கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் ஆட்சிபுரியும் அளவுக்கு இடமில்லை என்ற கருத்தை சொல்லாமல் சொல்லிவந்தது.

தி.மு.க., அ.தி.மு.க. இடையை சூழ்ச்சி, வஞ்சகம், பழிவாங்கும் போக்கு, சவால் & எதிர் சவால் என எத்தனையோ இருந்தாலும், இரண்டு கட்சிகளின் மீதும் ஊழல் குறச்சாட்டுகள் அவ்வப் போது எழுந்தாலும் இந்தியாவின் பிற எந்த மாநிலத்தைக்காட்டிலும், தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறியிருப்பதை யாருமே மறுக்க முடியாது. கிராமப்புறங்களில் உட்கட்டமைப்புடன் கூடிய வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, சமூக சூழல், அடிப்படை கட்டமைப்பு என எந்த விஷயம் ஆனாலும் தமிழகம் முன்னால்தான் நிற்கிறது. ஆட்சியையே இழந்தாலும் பரவாயில்லை என்று, ஜனநாயகத்தை அழிக்க வந்த எமர்ஜென்சியை எதிர்த்த கலைஞரின் தீரம்;

எந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டாலும் அதில் ஏழைகள் பயனடைவார்களா? அடித்தட்டு மக்களுக்கு நிம்மது கிடைக்குமா? என்றெல்லாம் பார்த்துப் பார்த்து திட்டங்கள் தீட்டி ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தின் மனங்களில் நிரந்தரமாகக் குடியேறிய எம்.ஜி.ஆர். ;

தான் பிறந்தது பிராமண குலத்தில்தான் என்றாலும் நீதிக்கட்சி காலம் தொடங்கி அ.தி.மு.க. வரை திராவிட இயக்கங்களின் அடிநாதமாக விளங்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்தியாவில் எங்குமே இல்லாத அளவுக்கு 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி சட்டம் இயற்றி, அதை அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து, நீதிமன்றங்களால் கூட தலையிட முடியாத அளவுக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் சாதுர்யம்… என இவைதான் தமிழகத்தின் இந்த முன்னேற்றமான நிலைக்கு அஸ்திவாரம் போட்டவை.

ஆளுமை மிக்க இந்தத் தலைவர்கள் மறைந்த பிறகுதான் காங்கிரசுக்கு சற்றும் சளைக்காமல் மத்தியில் இப்போது ஆளுகின்ற பி.ஜே.பி. அரசு, தமிழகத்தின் மீது மொழி, கலாச்சார ரீதியாக தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது. தமிழர்கள் என்ற அடையாளத்தோடு, ஆயிரம் கருத்து வேறுபாடுகளுக்கு இடையேயும் ஒன்றிணைந்த தமிழ்நாட்டு மக்களை பலவீனப்படுத்த அடுத்தடுத்து அஸ்திரங்களை, குறிப்பாக ஆட்சிப்பொறுப்பிலிருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏவி வருகிறது.

சிலவற்றைப் பார்ப்போம்…

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புகளில் மற்ற மாநிலத்தவர் பயன்பெற இதுவரை வழி இல்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்த சில மாதங்களில் இதற்கான சட்டம் திருத்தப்பட்டு, பிற மாநிலத்தவரும் இங்கே வேலை வாய்ப்பைப் பெற முடியும் என்ற நிலை, பலவீனமான நிலை யில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அ.தி.மு.க. அரசை வைத்து ஏற்படுத்தப்பட்டது. இந்த மாநிலத்தில் ஒருவர் அரசுப்பணி பெற வேண்டுமானால், அவர் தமிழில் தேர்வு எழுதித் தேற வேன்டும் என்ற விதிகள் கூட காற்றில் பறக்கவிடப்பட்டு, ஏராளமான வடமாநிலத்தவர்கள், இங்கே வேலை வாய்ப்பை பெறக் காரணம் தமிழக அரசுதான் என்ற குற்றச்சாட்டை சென்னை உயர்நீதிமன்றமே வெளிப்படையாக முன்வைத்தது.

வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர்வு தொடங்கி விவசாயத்தை இன்றளவும் வாழவைத்துக்கொண்டுள்ள இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வழிவகுக்கும் உதய் மின்திட்டத்தை ஜெயலலிதா மறைந்த சில நாட்களிலேயே தமிழக அரசை ஏற்றுக்கொள்ளச் செய்து, அமல்படுத்த வைத்தது மத்திய பி.ஜே.பி. அரசு. இதைச் செய்தால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடனை அடைக்கும் வகையில் மிகக் குறைந்த வட்டியில் சுமார் 21000 கோடி கடன் பெற தமிழக அரசுக்கு உதவுவோம் என்று சொன்னவர்கள், அதைக் காற்றில் பறக்க விட்டார்கள். இன்றுவரை அந்தக் கடனைத் தன் தோளில் சுமந்து தத்தளிக்கிறது தமிழக அரசு.

புதிய கல்விக்கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. அந்த மூன்றாவது மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று எழுத்து வடிவில் சொல்லப்பட்டாலும், இந்தி மற்றும் சமஸ்கிருதம்தான் அந்த மூன்றாவது மொழி என்பதை செயல்படுத்தும் விதத்தில் கவனமாக காய்கள் நகர்த்தப்பட்டன. இதன் மூலம் இந்தித் திணிப்பு என்ற அஸ்திரம் மீண்டும் தமிழகத்தின் மீது ஏவப்பட்டது.

மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் தொடங்கி, நியூட்ரினோ திட்டம் வரையும்; விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடங்கி அணுக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டுவது வரை பிற மாநிலங்களால் நிராகரிக்கப்பட்ட, தமிழக மக்கள் ஏற்காத பல திட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு அமல்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் ஏற்கனவே 69% இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மறுத்தது மத்திய அரசு. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று அதை அமல்படுத்தச் சொல்லி உத்தரவைப் பெற்றபிறகும் இந்தாண்டு அதை அமல்படுத்த முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறது மத்திய அரசு.

ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் மூன்றரை லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேறிவருகிறார்கள். நீட் தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக இவர்களில் பலநூறு பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தார்கள். ஆனால் நீட் வந்த பிறகு மொத்தமுள்ள 4043 இடங்களில் அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 40 பேருக்குக் கூட இடம் கிடைப்பதில்லை. இந்த நிலையை உணர்ந்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு. இந்த சட்டம் அமலானால் குறைந்தது 300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்கும். முக்கியத்துவமும் அவசரமும் நிறைந்த இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் நாற்பது நாட்களாக வேடிக்கை பார்க்கிறார் தமிழக ஆளுநர். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு மத்திய அரசு கொண்டுவந்த 10% இடஒதுக்கீட்டு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த ஒப்புக்கொண்டால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று மறைமுக பேரம் நடப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. என்ன அக்கிரமம்..?

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளுக்கான இடங்களில் 50% இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. கிராமப்புறங்களில் உள்ள அரசு சுகாதார மையங்களில் தயக்கமின்றி மருத்துவர்கள் பணிபுரிய இந்த இட ஒதுக்கீடு உற்சாகத்தை அளிக்கும். ஆனால், நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும் கூட இதை ஏற்க மறுக்கிறது மத்திய அரசு. எத்தனை வெறுப்பு..?

தமிழகத்தில் உள்ள 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை தன்னுடன் இணைத்து அதன் நிர்வாகப் பொறுப்பை கவனிக்கும் ஒரே பல்கலைக் கழகமான உலகத் தரம் வாய்ந்த அண்ணா பலகலைக் கழகத்திற்கு ‘உயர் புகழ் கல்வி நிலையம்’ என்ற அந்தஸ்தைத் தருகிறோம் என்று ஓராண்டுக்கு முன்பாக அறிவித்தது மத்திய அரசு. அப்படி ஒரு அந்தஸ்து வழங்கப் பட்டால் பல்கலையில் பல வசதிகள் மேம்படும் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இதற்காக ஆகும் 2570 கோடி ரூபாய் செலவில் நாங்கள் 1000 கோடி மட்டுமே தருவோம்; மீதியை மாநில அரசுதான் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தது மத்திய அரசு. ஆனால் மொத்த நிதியையும் மத்திய அரசே தர வேண்டும் என்று தமிழக அரசு சொன்னது.

இதைக்கூட பிறகு விவாதிக்கலாம். இப்படி ஒரு அந்தஸ்து தரப்பட்டால், இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறை பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்று தமிழக அரசு சுட்டிக்காட்டியது. அப்படி எந்த பாதிப்பும் வராது என்று பதில் சொன்னது மத்திய அரசு. அதை எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள் என்று தமிழக அரசு வற்புறுத்திய போது அதை ஏற்காத மத்திய அரசு ஆறு மாதங்களாக மவுனம் சாதிக்கிறது. அதே நேரம் துணை வேந்தர் சூரப்பாவை கைக்குள் போட்டுக்கொண்டு இந்த விவகாரத்தில் தமிழக அரசை சங்கடப்படுத்தி வருகிறது மத்திய அரசு. எத்தனை வஞ்சகம்..?

இந்த மனப்பான்மை, இத்தனை சூழ்ச்சிகள் எல்லாமே ஏதோ ஓரிரு மாதங்களில் உதித்து அமல்படுத்தப்படுபவை அல்ல… மத்தியில் ஆள்வது காங்கிரஸ் ஆனாலும் பி.ஜே.பி. ஆனாலும் அவர்களது நீண்ட கால சித்தாந்தமே இதுதான். ஆளுமை மிக்க தலைவர்கள் அடுத்தடுத்து மறைந்த பிறகு அதனால் ஏற்பட்ட அரசியல் சூழலைப் பயன்படுத்தி இந்தத் திட்டங்களை யெல்லாம் அவசரம் அவசரமாக, சட்டத்திற்குப் புறம்பாக, மக்களின் உணர்வுகளுக்கு மாறாக அமல்படுத்த முனைகிறது மத்திய அரசு.

கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்பதால்தான் இத்தனை தைரியமும் வேகமும் காட்டுகிறார்கள் மத்தியில் ஆள்வோர். இதற்கு அணை போட்டு, தமிழ் நாட்டு நலனையும், தமிழ் மக்களின் நலனையும் காக்கும் வல்லமையும், புத்திக்கூர்மையும் உள்ள ஓர் ஆளுமைதான் தமிழகத்தின் தற்போதைய அவசிய அவசரத் தேவை.

அந்த ஆளுமை இனிமேல் பிறக்க வேண்டியதில்லை. ஏற்கனவே தமிழ் மண்ணில் உலா வருபவராக இருக்கலாம். அவரை அடையாளப்படுத்தி, அவருக்கு கூடுதல் உற்சாகமும், ஆதரவும் தர வேண்டியதுதான் தமிழகத்தின் தற்போதைய தலையாய கடமை.

தந்தை பெரியாரை தமிழ் மண்ணில் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை விதைக்க அனுமதித்து, அதில் எதை ஏற்பது, எதை நிராகரிப்பது என்று தெளிவாக இருந்து, அவரை பூஜித்த, இன்றளவும் பூஜிக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு தங்களுக்கான ஆளுமையை அடையாளம் காண்பது அவ்வளவு கடினமான பணி அல்ல.

நம்பிக்கையோடு காத்திருப்போம்!

மல்லிகை மகள் இதழில் S.P. லட்சுமணன்