September 29, 2021

நம்ம பி.எம்.மோடியின் இப்போதைய சொத்து மதிப்பு எம்புட்டு தெரியுமா?

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பிரதமா் மோடியின் சொத்து மதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தங்களது சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இதன்படி பிரதமர் தனக்கு ரூ.2 கோடி அளவுக்கு சொத்து உள்ளதாக கூறியுள்ளார். தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. ஒரு கோடியே 13 ஆயிரத்து 403 எனவும் ( ரூ.1,00,13,403) மற்றும் அசையா சொத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் கூறியுள்ளார். அதே சமயம் மோடியின் அமைச்சரவையில் தற்போது வரை 15 போ் மட்டுமே தங்ளது சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளனா். மத்திய நிதி அமைச்சா் அருண் ஜெட்லி 67 கோடியே 62 லட்சம் மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியுறவுத் துறை அமைச்சா் சுஷ்மா சுவராஜ் 5 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் 1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான சொத்துகளையும் வைத்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உள்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங், ரயில்வே அமைச்சா் பியுஷ் கோயல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சா் மேனகா காந்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சா் ஸ்மிருதி இராணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சா்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.