November 30, 2022

‘Stalking’ எவ்வளவு கொடுமையானது எனத் தெரியுமா?.

னநல மருத்துவர் Raiz Raiz அவர்களின் மிக முக்கியமான பதிவு. இணையத்தில் பெண்கள் இதில் மிக மோசமாய் நடந்துக்கொள்வதை, அது அவரே அறியாமல் இருப்பதுதான் கொடுமை. இதை பத்து வருடங்களாய் பார்த்து வருவதால் ஆண்களை விட பெண்கள் சொல்லும் இணையக்காதல்கள் மேல் Stalking பார்வை எனக்குண்டு. ஏன் எனில் என்னிடம் ஆண்கள் பக்கம் பகிர்தல்கள் உண்டு. இப்பதிவு ஒரு விழிப்புணர்வு தரும். பெண்களும் தன்னை தான் அலசிப்பார்க்கவும் உதவும் .அவரின் பதிவு. மிஸ் செய்ய வேண்டாம்

‘அம்மன் கோயில் கிழக்காலே’ எனும் படத்தில் ‘ சின்னமணி குயிலே’ எனப் பாடிக் கொண்டு விஜயகாந்த் முன்ன பின்ன தெரியாத ராதா பின்னாடி சுத்தி லவ் டார்ச்சர் கொடுக்கும் போது ரசித்துப் பார்த்தோம். படங்களில் ‘ஹேப்பி என்டிங்’ என்பதால் இது சரி என்பது போல் நமக்குத் தோன்றும். பின்னாளில் வந்த ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ‘லவ் டார்ச்சர் கொடுக்க எனக்குத் தெரியல’ எனப்பாடிக் கொண்டே ஹீரோ ஹீரோயினுக்கு ஹீரோ லவ் கொடைச்சல் கொடுத்ததையும் ரசித்தோம். அது மட்டுமல்ல ‘காதல் கொண்டேன்’ படத்தில் வேறொருவனை காதலிக்கும் ஹீரோயினை கடத்தி வைத்து டார்ச்சர் கொடுக்கும் ஹீரோ மேல் கோபப்படுவதற்குப் பதில் நாம் பரிதாபப்பட்டோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் இது போல அனுபவங்களை சந்தித்தப் பெண்களிடம் போய்க் கேட்டால் ‘Stalking’ எவ்வளவு கொடுமையானது எனத் தெரியும்.

ஒருவருக்குத் தெரியாமல் அல்லது அவருக்கு தெரிந்திருந்தாலும், அவருக்குப் பிடிக்காமல் இருந்தாலும் அவரை பின்தொடர்வது, அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வது, மறைந்திருந்துப் பார்ப்பது, வேறொரு பெயரில் சமூக வலைத்தளங்களில் பின் தொடர்வது, மறைந்திருந்து புகைப்படம் எடுப்பது என நடத்தைகள் தான் Stalking எனப்படுகிறது. இதனால் என்னப்பா பிரச்சனை என சிலர் நினைக்கலாம். சினிமாவில் வருவது போல் ‘ஹேப்பிங் என்டிங்’ ல்லாம் நிஜத்தில் நடப்பதில்லை, ‘ட்ரேஜிக் என்டிங்’ தான். இந்த நடத்தை தான் முகத்தில் ஆசிட் அடிப்பது, பெரும் காயம் ஏற்படுத்துவது, சமூக வலைத்தளங்களில் மார்ஃபிங் செய்த படத்தை வெளியிடுவதாக மிரட்டுவது, கொலை செய்வது என பல கொடூர செயல்களுக்கு வித்திடுகிறது. முதலிலேயே தடுத்தால் இது போல் கொடூரமான முடிவிலிருந்து தப்பிக்கலாம்.

நீண்ட காலம் stalking செய்பவர்கள் தான் வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதனால் தான் ஆரம்பத்திலேயே நிறுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. முக்கியமாக முன்னாள் காதலர், முன்னாள் இணையர்கள் தான் அதிக வன்முறையில் ஈடுபடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சில பெண்களும் இதில் ஈடுபடுவதாக தரவுகள் சொல்கின்றன. அது போல stalking சம்பந்தமான வன்முறையில் ஈடுபடும் நபர்களில் 10 லிருந்து 25 % பேர் பெண்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது.

சமுதாயத்தில் நிலவும் தவறான கற்பிதம் போக, பொதுவாக stalking ங்கில் ஈடுபடும் ஆண்களுக்கு சைக்கோபத் டைப் ஆளுமை (நார்சிஸ்டிக் ஆளுமையும் ஆன்டி சோசியல் ஆளுமையும் சேர்ந்து) இருக்கிறது எனத் தரவுகள் சொல்கின்றன. சில பேருக்கு மட்டும் Erotomania எனச் சொல்லக்கூடிய ஒரு வகை மனநோய் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதாவது ஒருதலைக்காதலை இருதலைக்காதல் தான் என அவர்களின் மனது தவறாக தீவிரமாக நம்பும், ‘ஜீலி கணபதி’ எனும் படத்தில் சரிதா ஜெயராம் மீது கொண்டிருக்கும் காதல் போல. இங்கு ஆஸ்திரேலியாவில் குற்றப்பிரிவில் ‘Stalking branch’ எனத் தனி பிரிவே இருக்கிறது. அதிலேயே கூட cyber stalking எனத் தனி பிரிவு இருப்பது போல் தெரிகிறது.

போன வருடம் அக்டோபர் 13 ஆம் தேதி அன்று சத்யா எனும் இளம் பெண் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது அவரை ஏழு மாதங்களாக தொடர்ந்து வந்த சதீஷ் என்பவன் திடீரென செயின்ட் தாமஸ் ஸ்டேசன் ரயில் ட்ரேக்கில் தள்ளிவிட்டுவிட்டான். அந்தப் பெண் பரிதாபமாக இறந்து போனார். அதனால் உடனே அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்துக் கொண்டார் என செய்தி சொல்கிறது. இது போல எத்தனையோ சம்பவங்கள். தரவுகள் சொல்கின்றன, இந்தியாவில், மற்ற மாநிலங்களை ஒப்பீடும் போது stalking கம்ளையன்ட்கள் தமிழ் நாட்டில் மிக் குறைவு தானாம் ( 2021ல் இங்கு வெறும் 41 கேஸ்கள் மட்டும் தான் ரிப்போர்ட் செய்யப்பட்டிருக்கின்றன, மாஹாரஸட்ராவில் 2131, தெலுங்கானாவில் 1265, ஆந்திரா 1185, கேரளாவில் 393, கர்நாடாகாவில் 178)

இது பெருமைப்படக் கூடிய விசயமா? இல்லை, எதனால்? இது எதை சொல்கின்றது என்றால், இங்கு இது போல எதுவும் நடந்தால் வெளியே சொன்னால் தனக்குத் தான் கேவலம் என்று ரிப்போர்ட் செய்வதில்லை, இது பெரிய குற்றம் மற்றும் ஆபத்தானது எனத் தெரியவில்லை, போதிய விழிப்புணர்வு இல்லை: இவை தான் காரணம். யாராவது உங்களை stalking செய்வதாக நீங்கள் உணர்ந்தால் தமிழகத்தில் 181, 1091 எனும் அவசர எண்களுக்கு அழைக்கலாம். அல்லது ‘காவல் உதவி’ ‘காவலன்’ போன்ற செல் போன் ஆப் களை உபயோகிக்கலாம். முதலிலேயே இதைத் தடுப்பதால் உங்களை பேராபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.

கீர்த்தி