குழந்தைகளை குழந்தைளாக இருக்க விடுகிறோமா?

குழந்தைகளை குழந்தைளாக இருக்க விடுகிறோமா?

ம காலத்தின் மிகப்பெரிய பிரச்சினை குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் இருப்பதுதான்.. அதற்கு மிக முக்கியமான காரணம் சமூக வலைதளங்களில் கிடைக்கிற புகழ்தான்..அதைப் பார்த்து சூடு போட்டுக் கொள்கிற பலருமுண்டு.. ஒரு குழந்தையோ , டீன் ஏஜ் பையனோ/ பெண்ணோ பொருள் புரியாமல் , வாழ்வோடு அந்தக் கலையை இணைத்துப் பார்க்காமல் வயதுக்கு மீறிச் செய்கிற போலச்செய்தல்களை மட்டும் வைத்து தன்னை மிகப்பெரிய ஆளுமையாகக் கருதிக் கொள்வது மாதிரியான அசட்டுத்தனம் எதுவுமில்லை..!

வயதுக்குப் பொருத்தமில்லாமல் கேள்விப்பட்டதை , படித்ததை, சொல்லித் தருவதை மட்டுமே வைத்து ‘போலச் செய்கிற ‘ குழந்தைகளை / டீன் ஏஜ் பிள்ளைகளை அவர்களின் தகுதிக்கு மீறி கொண்டாடுகிறவர்கள் மிக மோசமான பிழையைச் செய்கிறார்கள்..ஊக்கப்படுத்துவது வேறு..சம்பந்தமே இல்லாமல் ஏத்தி விட்டுக் கெடுப்பது வேறு..

நான் ஆறு வயதிலிருந்து வாசிக்க ஆரம்பித்தவன்தான்..எட்டு வயதிலிருந்தே மேடைகளில் பேசிக் கொண்டிருப்பவன்தான்..ஆனால் அன்றைய உளறல்களின் , மடத்தனமான புரிதல்களின் அபத்தத்தை இந்த வயதில் புரிந்து கொள்ள முடிகிறது..எங்கள் காலத்தில் இந்த அளவுக்கு ஏத்தி விட்டு நாசமாக்குகிற பெற்றோர்களோ , சமூகச் சூழலோ இல்லை..மிக முக்கியமாக இருபது வயதிலேயே மிகச் சிறந்த குருநாதர் வாய்த்தார்..அதனால் என் ஆர்வக் கோளாறுகளை விலகி நின்று பார்த்து ஒவ்வொன்றாய் உதற முடிந்தது..

விளையாட்டு மட்டும்தான் இளம் வயதிலேயே சாதிப்பதற்கானது..ஆஜித் மாதிரி சூப்பர் சிங்கர் பில்டப் கொடுத்து ஏத்தி விட்ட பலர் பின்னர் வாய்ப்புகளின்றி உளவியல் சிக்கல்களில் மாட்டிக் கொண்டதை பிக்பாஸ் நிகழ்வில் பார்த்தோம்.. இலக்கியம் மாதிரி அறிவுச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை நாற்பது வயதில்தான் ஒருவனுக்கு வாழ்வைப் புரிந்து கொள்கிற பக்குவமே வரும்..சிலருக்கு அபூர்வமாக முப்பதுகளின் மத்தியில் வரலாம்..அதற்கு முன்னால் நிகழ்பவை எல்லாம் மழலை உளறல்களே..அவை பழக்க தோஷத்தாலோ , ஒன்றின் மீதான நம் அதீதமான ப்ரியத்தாலோ நிகழ்பவை..அவை நிஜமான தரிசனங்கள் அல்ல..போலச் செய்தலால் உருவாகும் இந்த மயக்கத்தை சம்பந்தப்பட்ட டீன் ஏஜ் பிள்ளைகள் உணர வேண்டும் / ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , அறிவு ஜீவிகள் அதனை அவர்களுக்கு பக்குவத்தோடு உணர்த்த வேண்டும்

இந்த கவனம் குழந்தைகளுக்கும் , பெற்றோர்களுக்கும் மட்டுமல்ல ; சமூகத்தில் பொறுப்போடு இயங்கிக் கொண்டிருக்கிற ஆசிரியர்களுக்கும் , இலக்கியவாதிகளுக்கும் கூட இருக்க வேண்டும்.. அந்தந்த பருவத்தில் அதற்குரிய மனநிலையோடு சந்தோஷமாக வாழ்வதைத் தவிர மிகப்பெரிய சாதனை எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொள்வதுதான் மிக முக்கியமான வாழ்க்கை தரிசனம் என்று நான் கருதுகிறேன்..

செடியோ , மரமோ எல்லாமே விதைகளில் தான் ஒளிந்திருக்கிறது..செடிகள் தம்மை மரமாகக் கருதிக் கொள்வது செடிகளுக்கே நல்லதில்லை..ஒரு சூறாவளியை மரத்தைப் போல் செடியால் தாண்டி வர முடியாது..

மானசீகன்

error: Content is protected !!