பொறுமையைச் சோதிக்காதீங்க- அதிமுக தலைமைக்கு பூங்குன்றன் அட்வைஸ்

பொறுமையைச் சோதிக்காதீங்க- அதிமுக தலைமைக்கு பூங்குன்றன் அட்வைஸ்

திமுக ஒரு இராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி என அடுத்தவர் சொல்லக் கேட்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இன்று ராணுவக் கட்டுப்பாடு தளர்வதைக் கண்டு அழுகைதான் வருகிறது. எதிர்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதில் அப்படி என்ன குழப்பம்? நிர்வாகிகள் முன்கூட்டியே கலந்து பேசிக் கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டாமா? கூட்டத்தை கூட்டி விட்டு முடிவு எடுக்க நினைப்பது, இருட்டில் தீப்பெட்டியை தேடுவது போன்று கஷ்டமாக இருக்குமல்லவா…!

ஆளுங்கட்சி, தொண்டர்களை அமைதி காக்க வைக்கும். எதிர்க்கட்சி, தொண்டர்களை எதிர்த்துப் பேச வைக்கும். அமைதியாக இருக்கும் தொண்டர்களை வேதனைப்படுத்துவது என்பது தேன் கூட்டில் கை வைப்பதற்குச் சமம்.

நீங்கள் யாரை அறிவித்தாலும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவத்தின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் OPS அவர்கள் எதிர்கட்சித் தலைவர் ஆகலாம். இல்லை சூழ்நிலை EPS அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றால் அவர் எதிர்கட்சித் தலைவர் ஆகலாம். உண்மை நிலைமை என்னவென்பது எங்களுக்குத் தெரியாது. உங்களுக்கே தெரியும். ஏனென்றால் இது கட்சி. தனி மனித வெறுப்புகளுக்கு இதில் இடமில்லை. கட்சிக்கு எது நல்லதோ அதைச் செய்யுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் பிடிவாதம் பிடிப்பது, உங்களை நம்பியிருக்கும் தொண்டர்களை உங்களிடமிருந்து பிரித்துவிடும். இதில் ஐயம் வேண்டாம்.

உங்களுக்குள் ஒரு இணக்கமான முடிவு எட்டப்படவில்லையா? கவலை வேண்டாம். இரு பெரும் சமுதாயங்களைச் சேர்ந்த நீங்கள் முதல்வர் பொறுப்பை அலங்கரித்துவிட்டீர்கள். எனவே, தர்மபுரி மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர், மரியாதைக்குரிய பாலக்கோடு K P அன்பழகன் அவர்களைப் பாராட்டும் விதமாக, அவரை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள். அவரும் அனுபவம் வாய்ந்தவர்தான். இன்னொரு மிகப்பெரிய சமூகத்திற்கு வாய்ப்பளித்த பெருமை உங்களைச் சேரும். அப்படி செய்தீர்கள் என்றால் மூன்று மிகப்பெரிய சமுதாயங்களை மகிழ்வுப்படுத்திவிடலாம். ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்குங்கள். ஏன், முன்னாள் சபாநாயகர் திரு தனபால் அவர்களுக்கே கூடக் கொடுக்கலாம். மற்றொரு மிகப்பெரிய சமுதாயமும் மகிழ்வு பெற்றுவிடும். மற்றவற்றை நீங்கள் எளிதில் சரி செய்து கொள்ளலாம்.

என் சிற்றறிவுக்கு எட்டிய யோசனை. அனுபவம் வாய்ந்த நீங்கள் இருவரும் இருவரும் இணைந்து கட்சியைப் பலப்படுத்துங்கள். அதுவே இன்றைய தேவை. இனியாவது நிர்வாகிகளுக்குள் பேசி முடிக்காமல் கூட்டத்திற்கு வந்து தொண்டர்களை வேதனைப்படுத்தாதீங்க… பிளீஸ். அப்படி நடந்தால் பலர் மனம் வெறுத்து வெளியில் போய்விடுவார்கள் என்பது நிதர்சனம். கவனத்தில் கொள்ளுங்கள்.

தன் நலம் முக்கியமில்லை, கட்சியின் நலனே இன்று முக்கியம். இணைந்து செயல்பட்டால் பலம் என்று நான் சொன்னதை நீங்கள் அலட்சியப்படுத்தினீர்கள். இப்போதாவது கேளுங்கள். ஒற்றுமையே உயர்வைத் தரும். உங்களுக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை. உங்கள் அனுபவமே எனது வயது. நல்லதொரு முடிவெடுங்கள். வாழ்த்துச் சொல்லி வழி நடக்க தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். தொண்டர்களின் பொறுமையை சோதிக்காதீங்க….

ஜெ பூங்குன்றன் சங்கரலிங்கம்

Related Posts

error: Content is protected !!