கருணாநிதி ஆணைப்படி நானும் முதல்வரை பார்க்க முயற்சித்தேன்! – ஸ்டாலின்

சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக நாள்தோறும் விஐபிகள் படையெடுத்து வருவது அதிகரித்து விட்டது. அந்த வகையில் நேற்று இரவு 7.15 மணியளவில், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின் வந்தார். அவருடன், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் வந்திருந்தனர்.

mk stalin oct 9

ஆஸ்பத்திரி உள்ளே சென்ற அவர்கள், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழுவிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். மேலும், அங்கிருந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோரையும் சந்தித்து பேசினர்.பின்னர், இரவு 7.25 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், “தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது வெளியிடப்பட்ட மருத்துவ செய்திக் குறிப்பில், இன்னும் ஓரிரு நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி, மேலும் பல நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதே தலைவர் கருணாநிதி, முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல் நலத்துடன் திரும்பி பணிகளை தொடர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இன்று நாங்களும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி வந்தோம். ஆனால், அவரை சந்திக்கவில்லை. அதே நேரத்தில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டோம். அங்கிருந்த அமைச்சர்களையும் சந்தித்தோம். தலைவர் கருணாநிதியின் ஆணைப்படி, நானும், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்தித்து பேசினோம். முதல்-அமைச்சரின் உடல்நிலை தேறி வந்து கொண்டிருப்பதாக அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற தலைவர் கருணாநிதி சார்பிலும், தி.மு.க. சார்பிலும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக நேற்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் நேற்று ஆஸ்பத்திரிக்கு வந்து, டாக்டர்களிடம் முதல்-அமைச்சர் உடல் நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.இதேபோல தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் டாக்டர்கள், அமைச்சர்கள், அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.