December 4, 2022

நான் அனுப்பியது வெறும் கடிதமல்ல : உணர்வு – ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கடிதாசு!

தங்களுக்கு அனுப்பி இருக்கும் படிவங்களில் உள்ளது வெறும் கையெழுத்துக்கள் அல்ல- மாறாக மதசார்பின்மை, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட இந்தியா வின் அடையாளங்களை பாதுகாக்க எப்போதும் போராடிக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் விருப்பமும் உணர்வுகளும் என்று 2 கோடி கையெழுத்துகள் குறித்து குடியரசுத்தலைவருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் சார்பாக வேண்டாம் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி என தமிழகம் முழுதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதில் 2 கோடியே 10 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு அது குடியரசுத்தலைவரிடம் திமுக தோழமை கட்சிகளின் மக்களவை எம்பிக்களால் வழங்கப்பட்டது. அதனுடன் திமுக தலைவரின் கடிதமும் அளிக்கப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடித விவரம்:

‘ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சங்ககால தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனார், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ‘எல்லா ஊரும் எம் ஊர். எல்லா மக்களும் எம் உறவினரே’ என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தந்தார்.

சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக- இந்தியாவின் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக இன்றைக்கு மக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள். நாட்டைப் பிளவுபடுத்தும் குடியுரிமை சட்ட திருத்தம்-2019, தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ஆண்கள்- பெண்கள்- ஏன் குழந்தைகள் ஆகியோரின் காட்டூத் தீ போன்ற தீவிரப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ‘புனிதமற்ற மூன்றும்’ அரசியல் சட்டம் அளித்துள்ள மாண்புகளுக்கும் மதிப்பு மிக்க உரிமைகளுக்கும் முரணானது. அரசியல் சட்ட முகவுரையில் கூறப்பட்டுள்ள மதசார்பின்மை மற்றும் அடிப்படை அம்சங்களுக்கு எதிரானது.

இதனால் ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாநில சட்டமன்றங்களில் இந்த குடியுரிமை சட்ட திருத்தம்-2019, என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு – இதற்கு முன்பு எப்போதும் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை நாட்டில் நிலவி, இந்த மூன்றின் மீதும் கடுமையான வெறுப்பணர்வு மக்கள் மனதில் ஏற்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.

மதத்தை குடியுரிமையுடன் இணைத்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் நம் நாட்டின் மதசார்பின்மை மற்றும் அடிப்படை நம்பிக்கைகளுக்கு எதிரானது. நாட்டின் குறிப்பிட்ட ஒரு மதத்தினர் – குறிப்பாக இந்திய இஸ்லாமியர்கள் மனதில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்த இந்த குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக குடிமக்களின் பெற்றோர் குறித்த பிறந்த ஊர், பிறந்த தேதி ஆகிய கேள்விகள் அடங்கிய என்.பி.ஆர் மற்றும் என்.சி.ஆரின் ‘புதிய படிவம்’ (New Format) பல்லாண்டு காலமாக மத நல்லிணக்கத்துடனும், சகோதரத்துவத்துடனும் அமைதியாக- ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மதரீதியாக துன்புறுத்தலுக்கு (Persecution) உள்ளானவர்களை பாதுகாக்கவே இந்த சட்டம் என்று மத்திய அரசு உரக்கப் பேசினாலும், இலங்கையில் தாங்கமுடியாத கொடுமைகள், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் ஆகிய துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியா வந்துள்ள இலங்கை தமிழர்களுக்காக ஏன் மத்திய அரசின் இதயம் துடிக்கவில்லை?

நம் நாட்டில் இரட்டைக்குடியுரிமைக்கு சட்டப்படி வழியில்லாத நிலையில், இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை தற்போதைய குடியுரிமை சட்டத்திருத்தத்தில் விலக்கி வைத்திருப்பது அப்பட்டமான பாகுபாடு மட்டுமல்ல- அல்லல்படும் ஈழத் தமிழர்களின் மீது மத்திய அரசுக்குள்ள அக்கறையின்மை மற்றும் பாராமுகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

‘குடியுரிமை சட்ட திருத்தம் நம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது’ என்ற புகழ்பெற்ற சட்ட வல்லுநர்கள் கூறிய கருத்துக்கள் எல்லாம் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் என உறுதியாக நான் நம்புகிறேன். இந்த சட்டம் மதசார்பின்மைக்கு எதிரானது மட்டுமல்ல- அரசியல் சட்டத்தில் ‘அறிவுசார்ந்த வகைப்பாடு’ (Reasonable Classification) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் எந்த திருத்தத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதையும் மீறி- ஒருதலைப்பட்சமாகவும், அநியாயமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘மதரீதியாக துன்புறுத்தலுக்கு ‘ உள்ளானவர்களுக்காகவே இந்த சட்டம் என்பது நோக்கம் என்றால், இஸ்லாமியர்களை புறக்கணித்திருப்பதன் மூலம், அந்த நோக்கம் அடியோடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஏன் மூன்று அண்டை நாடுகளுக்கு மட்டும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு, இலங்கை மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை.

இது ‘சமத்துவம்’ (Equality) என்ற நம் அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவை வெளிப்படையாக மீறியிருக்கிறது. இது அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை நாடற்றவர்களாக்கி- அவர்களின் வாழ்வுரிமை மற்றும் தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் ஆபத்து மிகுந்தது.

எந்த சட்ட விதி முறைகளையும் கடைப்பிடிக்காமல் இலட்சக்கணக்கான இந்தியர்களை ‘தடுப்பு முகாம்களில்’ சிறை வைக்க மத்திய அரசு தடுப்பு முகாம்களை கட்டியுள்ளது. இன்னும் கட்டி வருகிறது. ஆகவே குடியுரிமை சட்ட திருத்தம் 2019 அரசியல் சட்டப்பிரிவுகள் 14 மற்றும் 21 ஆகியவற்றையும், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் பிரகடனங்கள், இரு நாடுகளுக்கு இடையிலான சட்டங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றை மீறியிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர்., என்.சி.ஆர். ஆகியவை நாட்டில் வரலாறு காணாத குழப்பத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட கருத்து ஆகாது என்று எண்ணுகிறேன்.

தங்களின் எதிர்காலம்- தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று எண்ணற்றோர் தூக்கமில்லாத இரவுகளை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே தேச நலன், மக்கள் நலன் கருதியும், இந்தியர்கள் அனைவருக்கும் அமைதியான வாழ்வினை அளிக்கவும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.

கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நமது அரசியல் சட்டம் மத்திய- மாநில அரசுகளின் உறவுகளை மிக அழகாக வரையறுத்துக் கூறியுள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சிகள் நடக்கும் நேரங்களில் எல்லாம் மாநில உரிமைகளை பாதுகாக்க திமுக கழகம் காலம் காலமாக முன்னனியில் நின்று போராடி- கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாத்து வருகிறது.

ஆனால் கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது கூட்டாட்சி தத்துவம் மிக மோசமான அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. ஆகவே நாட்டின் தலைவராக இருக்கும் மேதகு குடியரசுத் தலைவரின் கீழ் மத்திய அரசு செயல்படுவதால், இந்த தருணத்தில் மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்கு நிச்சயம் தலையிடுவார் என்று திமுக நம்புகிறது.

இந்த தருணத்தில், “கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி’ என்ற திருக்குறளை நினைவுபடுத்துவது சாலப் பொருத்தமானது என்று கருதுகிறேன். இந்த குறளின் அர்த்தம் என்னவென்றால், ‘அறச்செயல், ஈகைக்குணம், நேர்மை, குடிமக்களை காத்தல்’ ஆகிய நான்கும் உடைய அரசன் வேந்தர்க்கு விளக்கு என்பதாகும்.

மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ள மத்திய அரசு, எதேச்சதிகாரத்தில் ஈடுபடுவதையும், சர்வாதிகார மனப்பான்மையை கைவிட்டு, மதத்தின் அடிப்படையிலோ அல்லது மொழியின் அடிப்படையிலோ மக்களை பிரித்துப் பார்க்காமல்- இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான அரசாக பெருந்தன்மையுடன் செயல்பட வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகமும் பிற கட்சிகளும் மாட்சிமை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து- அந்த வழக்கு விசாரணையில் இருந்தாலும், இந்த பயங்கரமான சட்டத்திற்கு எதிரான மக்களின் ஆதங்கத்தையும், ஆவேசத்தையும் பார்த்துக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைதியாக இருக்க இயலாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு எங்களது முதல் பொறுப்பை நாங்கள் துறக்க முடியாது. ஆகவே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, குறைகளை, கவலைகளை மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு வெளிப்படுத்த திமுக, திக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் 2.2.2020 முதல் 8.2.2020 வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இந்த இயக்கம் மகத்தான வெற்றி பெற்று- இரண்டு கோடி பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். அந்த கையெழுத்துகள் அடங்கிய படிவங்களை மேதகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் முன்பு சமர்ப்பிக்கிறோம். ‘குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, என்.பி.ஆர், என்.சி.ஆர்’ ஆகியவற்றை ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சரவைக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்குவார் என்று நம்புகிறோம்.

குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள படிவங்களில் உள்ளது வெறும் கையெழுத்துக்கள் அல்ல- மாறாக மதசார்பின்மை, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அடையாளங்களை பாதுகாக்க எப்போதும் போராடிக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் விருப்பமும் உணர்வுகளும் இந்த கையெழுத்துக்களில் எதிரொலிக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்’.

இவ்வாறு ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.