என் பிறந்த நாள் கொண்டாட்டம் கேன்சல் – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக பொதுச்செயலாளரும், எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச் சூழலில் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முக்கால் நூற்றாண்டு காரணமாக இந்த இனத்திற்கும் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கத்திற்கும் பெருந் தொண்டாற்றிய அவர் உடல்நலிவுற்றிருக்கும் நிலையில் மார்ச் 1-ஆம் நாள் எனது பிறந்தநாளைக் கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே கழக முன்ணணியினர், நிர்வாகிகள் , தொண்டர்கள் மற்றும் என் மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1-ஆம் நாள் என்னை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வர வேண்டாம் என பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

அவர் நலம் பெற அனைவரும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.