டெல்லியில் திமுக அலுவலகம் திறந்தாச்சு!- ஆனா என்ன பிரயோஜனம்?

தென் இந்தியாவைச் சேர்ந்த கட்சிகளில் டெல்லியில் அலுவலகம் அமைத்தக் கட்சி என்ற பெருமையை அடைந்து விட்டது திமுக.  மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அத்துடன், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் களைச் சந்தித்தார். நேற்று (01/04/2022) டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்திருந்தார். இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்கில் கட்டப்பட்டுள்ள புதிய திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். ஆனால் இந்த அலுவலகத்தால் எந்த வகையிலும் பயனில்லை என்றும் சொல்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் 7 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில், 2013- ஆம் ஆண்டே தி.மு.க.விற்கு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் டிசம்பரில் கட்டி முடிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பாஜகவின் தேசிய தலைமை அலுவலகம் உள்ள இடத்தின் அருகே திமுகவின் ‘அண்ணா- கலைஞர்’ அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அறிவாலயத்தின் தோற்றத்தில், இந்த ‘அண்ணா- கலைஞர்’ அறிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 11,000 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. ‘அண்ணா- கலைஞர்’ அறிவாலயத்திற்கு வெளியே 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் அண்ணா, கலைஞரின் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. முதல் தளத்தில் கட்சிப் பணிகளை மேற்கொள்ள அலுவலகங்கள், 11 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 2வது தளத்தில் கட்சியின் ஒட்டுமொத்த வேலைகளை மேற்கொள்வதற்காக நவீன வசதியுடன் தனித்தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. 3வது தளத்தில் கட்சியின் தலைவர், நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் தங்குவதற்கான பிரத்யேக அறைகள் உள்ளன.

இந்நிலையில், டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில், சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா ஆகியோர் குத்து விளக்கேற்றினர். மேலும், அகிலேஷ் யாதவ், ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வைகோ, டி.ராஜா, திருமாவளவன், அமர் பட்நாயக் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். Karunanidhi-A life புத்தகத்தை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக்கொண்டார். அதேபோல், A Dravidian Journey புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே டெல்லியில் திமுக தொண்டர்கள் சொல்லும்படியாக இல்லை.இங்கு நடைபெறும் தேர்தல்களிலும் தேவையான அளவு நடவடிக்கைகள் இருப்பதில்லை. மேலும், திமுக எம்.பி.,க்களுக்கான அலுவலகம் தற்போது நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியில் அதிமுக அலுவலகமாக இருந்தது. கூட்டத் தொடர்களின் போது இந்த அலுவலகம் எம்.பிக்கள் வந்து செல்லும் முக்கிய இடமாக இருக்கும். இதையே திமுக முறையாக பயன்படுத்துவது இல்லை எனப் புகார் உள்ளது. இதனால், டெல்லியில் இன்று திறக்கப்படும் புதிய கட்டிடத்தால் ஒரு பிரயோஜமும் இல்லை என்றொரு முணுமுணுப்பும் கேட்கிறது