உடன்பிறப்பே.. அவிய்ங்க அப்படித்தான்.. ஆனாலும் நாம ஜெயிக்கறோம்! – கருணாநிதி கடிதாசு!

உடன்பிறப்பே.. அவிய்ங்க அப்படித்தான்.. ஆனாலும் நாம ஜெயிக்கறோம்! – கருணாநிதி கடிதாசு!

“அ.தி.மு.க.வினரின் தேர்தல் கால அணுகுமுறை உனக்கொன்றும் புதியதல்ல. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தாராளமான கறுப்புப் பண விநியோகம் – காவல் துறையினரின் வெளிப்படையான ஆதரவு – மாநிலத் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை தவறிய நடவடிக்கை – மாநில நிர்வாகத்தின் மறைமுக ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் அ.தி.மு.க. வினர் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள்” என்று கருணாநிதி சுட்டிக் காட்டியுள்ளார்.

karuna sep 27

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகள் கடைசியாக அறிவிக்கப்பட்டு விட்டன. அதாவது தேர்தல் தேதிகளை, மாநிலத் தேர்தல் ஆணையர், 25-9-2016 அன்றிரவு அறிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கல் எப்போது தெரியுமா? 26-9-2016 முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாமாம். அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா? தோழமைக் கட்சிகளையெல்லாம் அழைத்துப் பேச வேண்டாமா? எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள், எங்கெங்கே என்பது பற்றியெல்லாம் பேசுவதற்கு நேரம் அவகாசம் வேண்டாமா? வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் அக்டோபர் 3. வேட்பு மனு திரும்பப் பெறுவது அக்டோபர் 6. அதற்கும் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளுக்கும் இடையே எத்தனை நாட்கள் தெரியுமா? 11 நாட்கள் மட்டுமே?

இன்று வரும், நாளை வரும் என்று பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் தேதியை அறிவிக்க ஏன் இந்தத் தாமதம்? வேண்டுமென்றே மாநில தேர்தல் ஆணையம் செய்த தாமதம், எதற்கும் நேரம் தராமல் திடீரென்று அறிவித்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்க ஆளும் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து திட்டமிட்டு செய்யப்பட்ட தாமதம்!

இப்போது மட்டுமல்ல; 2014ஆம் ஆண்டிலேயே; கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் பதவி உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் 2014. செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட 28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்து இடைத் தேர்தல் பற்றிய அந்தச் செய்தி அப்போது நாளேடுகளில் வெளிவந்தது.

அப்போதே நான் விடுத்த அறிக்கையில், தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய 28ஆம் தேதி முதல் துவக்கம் என்று 29ஆம் தேதிய நாளேடுகளில் வெளிவருகின்ற இந்த ஒன்றே இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறும் என்பதற்குத் தக்க உதாரணமாகும். அது மாத்திரமல்ல; எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை எப்போது அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், எப்போது அறிவிப்பார்கள் என்பதற்கே நேரம் கொடுக்காமல், இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன்.

தற்போது, தேர்தல் அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரத்திலேயே அ.தி.மு.க. தனது வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்திருக்கிறது. எனவே அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்களையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகு, மற்ற எதிர்க்கட்சிகளுக் கெல்லாம் நேரம் கொடுக்காமல் தேர்தல் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்டிருப்பதில் இருந்தே, அ.தி.மு.க. அரசின் விருப்பத்திற்கு ஏற்ப, அதோடு இணைந்தேதான் மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதே தவிர, தன்னுடைய சுதந்திரமான சுயாட்சி நிலையை விட்டுக்கொடுத்து, நடுநிலை பிறழ்ந்து நடந்து கொள்கிறது என்பது தொடக்க அறிவிப்பிலேயே ஊர்ஜிதமாகி விட்டது; முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்குக் கட்டியம் கூறிவிட்டது.

இன்னும் சொல்லப்போனால், 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடைபெற்ற போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. ஜனநாயக நெறிமுறைகளுக்குப் புறம்பாக எப்படியெல்லாம் நடந்து கொண்டது என்பதை பல உதாரணங்களின் மூலமாக அப்போதே நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன். பல கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை தேர்தல் தேதியை வெளியிட்ட பிறகு, அறிவித்த விதிமுறை மீறல்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு உள்நோக்கத்துடன் மாறுதல், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் வழங்காமல் தேதி அறிவிக்கப்பட்ட கொடுமை ஆகியவற்றைக் கண்டிக்கின்ற வகையில், அப்போது நடைபெற்ற உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதில்லை என்றே முடிவு செய்து அறிவித்தது.

அப்போது செய்த அதே பாணியில் இப்போதும் பல்வேறு இடங்களில் குறிப்பாக திருவாரூர் நகராட்சி ஆணை யராக இதுவரை பணியாற்றி வந்த நாராயணன் என்பவரை இப்போது வலுக்கட்டாயமாக விடுப்பில் அனுப்பியிருக்கிறார்கள். சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகி பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்த அறிக்கையிலேயே, “உள்ளாட்சித் தேர்தல்களை கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சி தொழிற் சங்கங்களில் இருக்கும் சத்துணவு அமைப்பாளர்களைக் குறி வைத்து வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்கின்றனர்; தங்களுக்குச் சாதகமாக ஆளுங்கட்சி ஊழியர்களை பணி அமர்த்துகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தி.மு.க. தொழிற்சங்க அமைப்பாளர் ஒருவரை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்துள்ளனர்” என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் 2011ஆம் ஆண்டு, உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் எப்படி நடைபெற்றன என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை நினைவுபடுத்துகிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் வரை நடைபெற்று, தீர்ப்பு கூறப்பட்டது. எரமலூர் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ரமா என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மீராதேவி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தனக்கு 473 வாக்குகள் கிடைத்ததாகவும், ரமாவுக்கு 468 வாக்குகள் தான் கிடைத்தன என்றும், முடிவினை அறிவிப்பதற்கு முன்பு ரமாவின் கணவர் ரமேஷ் மற்றும் இருவர் தகராறு செய்ததின் விளைவாக ரமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் டி. முருகேசன், ஜனார்த்தனராஜா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், “ஓட்டு எண்ணிக்கையின் போது ஏதாவது வன்முறைச் சம்பவம் நடந்தால், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தேர்தல் அதிகாரி தெரிவிக்க வேண்டும், ஆனால் தேர்தல் அதிகாரி அவ்வாறு தெரிவிக்கவில்லை; போட்டியிடுபவர்களிடம் எழுத்துப் பூர்வமாக புகார் பெற்ற பின்தான் மீண்டும் ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியும். ஆனால் மனுதாரரிடமிருந்தோ, ரமாவிடமிருந்தோ புகார் வரவில்லை. விதிமுறைகளைத் தேர்தல் அதிகாரி பின்பற்றவில்லை. மீண்டும் ஓட்டு எண்ணிக்கைக்கு தானாகவே அவர் முடிவெடுத்துள்ளார். விதிமுறைகளுக்கு முரணாக மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டதை ஏற்க முடியாது. எனவே பஞ்சாயத்து தலைவராக ரமா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது சட்ட விரோமானது, அது ரத்து செய்யப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்கள் என்றால், உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் அ.தி.மு.க. ஆட்சியில் எப்படி நடத்தப்பட்டன என்பதற்கு இந்த ஒரு சான்று போதாதா?

இன்னொரு உதாரணம் கூறட்டுமா? திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில், ஜி. நடுப்பட்டி ஊராட்சியில் 1 மற்றும் 4வது வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்தத் தொகுதியில் பெண்களுக்குப் பதிலாக ஆண்களைத் தேர்வு செய்து, சான்றிதழும் கொடுத்த பிறகு, அந்த இரண்டு வார்டுகளும் பெண்களுக்கானவை என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்து, சான்றிதழ் பெற்றவர்களை அழைத்து அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டதோடு, வெற்றி பெற்றவர்களின் மனைவியர் அங்கே வெற்றி பெற்றதாக புதிய சான்றிதழ்களை வழங்கினார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் எப்படி உள்ளாட்சி மன்றத் தேர்தல்? அதேநேரத்தில், உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் கழக ஆட்சியில் எப்படி நடைபெற்றன என்றும் கூறுகிறேன்.

1989ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் 1990ஆம் ஆண்டு இறுதியில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் நடைபெற்ற ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த அந்த ஆட்சியினர் முன்வரவே இல்லை.

1996ஆம் ஆண்டு, கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 6இல், “அடுத்து உங்களால் அமைக்கப்படும் தி.மு.கழக அரசு, புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று உறுதி கூறுவதோடு, அது வெறும் அறிவிப்பாக இருந்து விடாமல், நிச்சயமாக நடைமுறைப் படுத்தப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம்”” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அவ்வாறு அறிவித்ததற்கிணங்க தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1996ஆம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 12 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான வேட்பு மனு செப்டம்பர் 3ந்தேதி முதல் 10ந்தேதி வரை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்ற மூன்றடுக்கு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான அதிகார பூர்வமான தேர்தல் அட்டவணையை 31-8-1996 அன்று தேர்தல் ஆணையாளர் வெளியிட்டார்.

இந்தத் தேர்தலில் முக்கியமான அம்சம் என்ன வென்றால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது தான். மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இப்படியே ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் என்ற அளவிற்கு தொகுதிகள் பிரிக்கப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட்டன.

1997-98 முதல் மாநில வரி வருவாயிலிருந்து எட்டு விழுக்காடு நிதி உள்ளாட்சி அமைப்பு களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது. இதன்படி 97-98இல் 612 கோடியே 57 இலட்ச ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப் பட்டதற்கு மாறாக 2000-2001இல் 1036 கோடியே 42 இலட்சம் ரூபாயாக உயர்த் தப்பட்டு வழங்கப்பட்டது. மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு, 2007-2008இல் உள்ளாட்சி அமைப்பு களுக்கு மாநில அரசின் சொந்த வரி வருவாயிலிருந்து பகிர்ந்தளிக்கப்படும் நிதி எட்டு விழுக்காடு என்பதிலிருந்து ஒன்பது சதவிகிதமாகவும், 2009-2010இல் 9.5 சதவிகி தமாகவும், 2010-2011ஆம் ஆண்டில் பத்து சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டது.

2016-2017ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பத்தி 107இல், மாநிலத்தின் சொந்த வரி வருவாயிலிருந்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4,995.66 கோடி ரூபாயும், 3,617.55 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டும் சேர்ந்தால் 8613.21 ரூபாயாகும். 2016-2017ஆம் ஆண்டுக்கான மாநிலத்தின் சொந்த வருவாய் 1,00,415.83 கோடியில் இது 8.58 சதவிகிதம்தான்! உள்ளாட்சி அமைப்புகளுக்கு கழக ஆட்சியில் 10 சதவிகிதம் ஒதுக்கியதற்கு மாறாக, தற்போது இந்த ஆட்சியில் 8.58 சதவிகிதம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான இத்தகைய நிதிப் பகிர்விலிருந்தே, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளில் அ.தி.மு.க. அரசுக்கு எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளது என்பதை அறியலாம்.

இன்னும் சொல்லப்போனால் தி.மு. கழக ஆட்சியில், 2010-2011ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கைப்படி மாநிலத்தின் சொந்த வருவாய் 46,639.20 கோடி ரூபாயாக இருந்த போது உள்ளாட்சி அமைப்புகளுக்காக 7,701 கோடி ரூபாய் அதாவது 16.51 சதவிகித அளவுக்கு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2016-2017ஆம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் 1,00,415.83 கோடியாக இருக்கும்போது, உள்ளாட்சி அமைப்பு களுக்காக 8.58 சதவிகித அளவுக்குத்தான் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்ற நோக்கில், கழக ஆட்சியில், அவற்றிற்குத் தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்கி வழங்கினோம்.

தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் எப்படி நடைபெறப் போகின்றன என்பதற்கு முன்னோட்டமாக ஒரு செய்தி. புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணிக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு மக்கள் விரும்பும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்த உடனேயே அ.தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் பணப் பட்டுவாடா மற்றும் பிரியாணி அளிப்பதைத் தொடங்கி விட்டனர். இதை மாநிலத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்திட, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும்” என்று பா.ஜ.க. இளைஞர் அணித் தலைவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார் என்றால், பணப் பட்டுவாடா – பிரியாணித் திருவிழாதான் அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் அ.தி.மு.க.வினரால் அச்சம் நாணம் சிறிதுமின்றி நடத்தப்பட இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்,

அ.தி.மு.க.வினரின் தேர்தல் கால அணுகுமுறை உனக்கொன்றும் புதியதல்ல. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தாராளமான கறுப்புப் பண விநியோகம் – காவல் துறையினரின் வெளிப்படையான ஆதரவு – மாநிலத் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை தவறிய நடவடிக்கை – மாநில நிர்வாகத்தின் மறைமுக ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் அ.தி.மு.க. வினர் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு, கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்யவும், ஜனநாயகத்தை வென்றெடுக்கவும், அறம் – ஆர்வம் ஆகியவை துணை கொண்டு, அயராமலும் எதற்கும் அஞ்சாமலும் பாடுபடுவாய் எனும் நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு
“ என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்

error: Content is protected !!