October 16, 2021

திமுக தலைவர் தேர்தல்; பொதுக்குழு வரும் 28 -ம் தேதி கூடுகிறது!

தமிழகத்தின் தனி பெரும் சக்தியாக விளங்கும் திமுகவில் தலைவர், பொருளாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆக.28 அன்று கூடுகிறது என பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் தலைவர் பதவி காலியாக உள்ளது. ஏற்கெனவே திமுக தலைவர் ஓய்வில் இருந்த ஒன்றரை ஆண்டுகளும் ஸ்டாலின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார். அத்துடன் ஸ்டாலின் பொருளாளராகவும் இருந்ததால் அந்தப்பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து அவர் வகித்து வந்த தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் தலைவர் ஆவார் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

ஆனாலும் திமுகவில் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு பொதுக்குழு மூலமாக தேர்வு நடக்கும். இதையொட்டி திமுகவில் காலியாக உள்ள தலைவர் பதவிக்கு தேர்வு நடத்த வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழு கூடுகிறது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். தற்போது ஸ்டாலின் வகித்துவரும் பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

அச்சமயம் தலைவர் மற்றும் பொருளாளர் பதவி தேர்தலும், தணிக்கைக் குழு அறிக்கையும் வைக்கப்பட உள்ளது.