October 5, 2022

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு’ உருவான நாள் – நவம்பர் 1

இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவு நாளின்று . ஆம்.. சுதந்திரம் வாங்கி எட்டாண்டுகள் வரை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி “மெட்ராஸ் பிரசிடென்சி’யாகத்தான் செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு நவ., முதல் தேதி மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய மெட்ராஸ் ஸ்டேட் உருவானது. தொடக்கத்தில் மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. பின்னர்தான் தற்போதைய பெயர்கள் இடப்பட்டன. 1968ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது.

map nov 1

முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் மதராசைத் தலைமையிடமாகக் கொண்டு, ஆந்திரப்பிரிவினையைக் கோரினார். 1952 அக்., 14ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். ஆந்திரத்தலைவர்கள் பிரகாசம், சாம்பமூர்த்தி ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். “மதராஸ் மனதே’ என்ற கோஷத்துடன் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவை, ம.பொ.சிவஞானம் சந்தித்தார். அப்போது பிரகாசம் ம.பொ.சி.,யிடம் “ராமுலுவின் உயிரைக்காக்க உதவுங்கள்’ எனக்கோரிக்கை விடுத்தார். ஆனால் மெட்ராசை விட்டு விட்டு ஆந்திராவை மட்டும் பிரிக்கக் கோரினால் தாமும் தமிழரசுக் கழகமும் உதவுவதாக மா.பொ.சி., உறுதியாகத் தெரிவித்து விட்டார்.

“ஆந்திர அரசு தற்காலிகமாக சென்னையில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்; விசால ஆந்திரம் அமையும் போது, ஹைதராபாத் கிடைத்து விட்டால் அங்கு போய்விடுவோம். நீங்கள் சம்மதித்தால் மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்’ என்று அவர்கள் தந்திரமாகக் கேட்ட போதும், ம.பொ.சி., தன் நிலையில் இருந்து பின்வாங்கவில்லை.1952, டிச., 15ல் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தின் போதே உயிர் துறந்தார். ஆந்திராவில் கலவரம் வெடித்து, மூன்று நாட்கள் நீடித்தது.

இதன் பிறகு நேரு ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க சம்மதித்து வெளியிட்ட தன் அறிக்கையில், “சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமல்லாத, தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும். தலைநகர் பின்னர் அறிவிக்கப்படும்’ எனக் குறிப்பிட்டார்.சித்தூர் மாவட்டத்தின் தென் பகுதிகள் தமிழகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழரசுக் கழகம் வலியுறுத்தி வந்தது. இதனால், ஆந்திராவுடன் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியது.

“கூவத்தை அடிப்படையாகக் கொண்டு, தென்சென்னை தமிழகத்தின் தலைநகராகவும், வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும் செயல்படலாம். அல்லது சென்னை நகரம் இரு மாநிலங்களுக்கும் பொதுநகராக இருக்க வேண்டும்’, என்ற கோரிக்கையை பிரகாசம் வலுவாக முன்வைத்தார். அப்போது சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மேனாக இருந்த ம.பொ.சி., இதற்குச் சம்மதிக்காததோடு, கடும் எதிர்ப்பையும் தெரிவித்தார். “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் துவக்கினார். அப்போதைய மேயர் செங்கல்வராயனின் உதவியுடனும், முதல்வர் ராஜாஜியின் ஆதரவுடனும் திருவல்லிக்கேணி கடற்கரையில், எஸ்.எஸ்.,கரையாளர், பக்தவத்சலம், ராஜாஜி, ஈ.வே.ரா., போன்ற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார்.

இவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, “ஆந்திர தலைநகர் ஆந்திராவுக்குள்ளேயே இருக்கும்’ என நேரு அறிவித்தார்.ம.பொ.சி., ஆல்டர்மேனாக இருந்த போதுதான் ஆங்கிலேயேர்கள் சென்னை மாநகராட்சிக்கு வடிவமைத்திருந்த கொடியை மாற்றி மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்களுடன் கூடிய தற்போதைய இலச்சினையைப் பொறித்தார். மாநகராட்சியின் வரவு செலவுக்கணக்கை முதன்முதலில் தமிழிலேயே தாக்கல் செய்தார்.

“மதராஸ் மனதே’ கோஷத்தை முன்வைத்து பொட்டிஸ்ரீராமுலு நடத்திய மிஷன் மெட்ராஸ் படுதோல்வி அடையக்காரணம் ம.பொ.சி.,யும், ராஜாஜியும்தான். ராஜாஜிக்கு எதிராக தெலுங்கர்கள் “ராஜாஜி சாவாலி; ஆந்திர ராஷ்ட்ரம் ராவாலி’ எனக் கோஷம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

” உரிமைக்கு எல்லை வேங்கடம்(திருப்பதி); உறவுக்கு எல்லை இமயம்’ என ம.பொ.சி., எல்லைப் போராட்டம் திருப்பதியை மீட்டுத்தர இயலாவிட்டாலும் திருத்தணியைத் தக்கவைக்க உதவியது .முதலில், 1953ல் குர்நூலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. 1956ல் தெலங்கானா ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட பின்னரே, ஹைதராபாத் தலைநகராக மாற்றப்பட்டது நினைவுகூறத்தக்கது..

மேலும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் தமிழகம் பயனடைந்ததை விட இழந்ததே அதிகமாகும். கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி உள்ளிட்ட தலைவர்களின் தொடர் போராட்டத்தால் தமிழகத்துடன் இணைக்கப் பட்டது என்றாலும், தமிழர்கள் வாழும் பல பகுதிகள் ஆந்திரா மற்றும் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

தமிழர்கள் அதிகம் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டதால் தான் முல்லைப் பெரியாறு தீராத சிக்கலாக மாறியிருக்கிறது. அதேபோல், வடாற்காடு மாவட்டத்தின் பெரும்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட பகுதிகளில் தான் அதிக எண்ணிக்கையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. கே. வினாயகம், ம.பொ.சி. உள்ளிட்ட தலைவர்கள் வட எல்லை மீட்புக் குழு அமைத்து போராடியிருக்காவிட்டால் தமிழகத்தின் மேலும் பல பகுதிகள் ஆந்திரத்திற்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும். தலைநகர் சென்னை கூட நமக்கு சொந்தமாக இருந்திருக்குமா? என்பது சந்தேகம் தான். தமிழகத்தின் நிலப்பகுதியை பாதுகாப்பதற்காக போராடிய தலைவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் எதற்காக போராடினார்களோ, அதை சாதிக்க நாம் பாடுபட வேண்டும்.

அத்துடன் தமிழ்நாடு என தனி மாநிலத்துக்கு பெயர் இட வேண்டும் என கோரி நிஜமாலுமே உண்ணாவிரதம் -அதுவும் 60 நாட்கள் இருந்து உயிரையே விட்ட விருதுநகர் சங்கரலிங்கம் அவர்களையும் ஒவ்வொருவரும் நினைவு கூற வேண்டியது அவசியம்.