டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு இடமில்லை!
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலக தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் 75வது குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தன்று தலைநகர் புதுடெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். குடியரசு தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரை உள்ள ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு உள்பட பல்வேறு மாநிலங்களின் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்தாண்டு புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தாலும் குடியரசு தின விழாவுக்கு பிரமாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிபுணர் குழு செய்து வருகிறது. இந்நிலையில் மேற்குவங்கத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘குடியரசு தினவிழாவில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இது தவிர, நாடு முழுவதும் மொத்தமுள்ள 30 மாநிலங்களில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.தென்மாநிலங்களை பொறுத்தவரை பாஜ ஆளும் கர்நாடகாவை தவிர தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய அனைத்து மாநிலங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டிருப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/l33BpS3WXc
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 17, 2022
இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.