பொலிட்டிக்கல் த்ரில்லரான ‘ராங்கி’ ஏன் லேட் ஆச்சு? – டைரக்டர் சரவணன்!

பொலிட்டிக்கல் த்ரில்லரான ‘ராங்கி’ ஏன் லேட் ஆச்சு? – டைரக்டர் சரவணன்!

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் த்ரிஷா நடிக்கும் ராங்கி படம் வரும் 30ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டு கால திரைப் பயணத்தை சமீபத்தில் த்ரிஷா நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது ஆக்சன் ரோலில் அவர் கலக்கியுள்ள படமே ‘ராங்கி’. பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் சரவணன் டைரக்ட் செய்திருக்கிறார். த்ரிஷா, அனஸ்வரா ராஜன், ஜான்மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கபிலன் பாடல்கள் எழுதியிருக்கிறார். ராங்கி படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர். இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியது.

இது குறித்து இயக்குநர் சரவணன்-னிடம் பேச்சுக் கொடுத்த போது, “இப்படத்தில் த்ரிஷா, ஜர்னலிஸ்ட்டாக நடித்திருக்கிறார். அவருடைய அக்கா மகளுக்கு ஒரு சிக்கல் என்பதால் அதைச் சரிசெய்யப் போராடுகிறார். ஒருகட்டத்தில் அந்தச் சிக்கல் வெறொரு பரிணாமம் எடுத்து உலக அளவிலான சிக்கலாக மாறுகிறது அதை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படம். “இந்தக் கதையை எழுதி முடித்த பிறகுதான் நடிகர்கள் குறித்து யோசிக்க ஆரம்பித்தேன். இதற்கான விவாதம் நடந்த போதெல்லாம் மற்ற அனைவரையும் விட த்ரிஷாவின் நினைவுதான் அடிக்கடி வந்தது. ஒரு தனி ஆளாக படத்தைத் தாங்கக் கூடிய திறமை அவருக்கு மட்டுமே உள்ளது என்று நினைத்தோம். அதற்கேற்ப த்ரிஷா தனது ஆன்மாவைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

“எனது குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒற்றை வரியில் என்னிடம் சொன்ன கதைதான் ‘ராங்கி’யாக உருவெடுத்துள்ளது. அவர் காதலை மையப்படுத்தி சொன்ன கதையில் அரசியலை கலந்திருக்கிறேன். இது லிபியாவில் நடக்க வேண்டிய கதை. அப்படித்தான் அமைச்சிருந்தோம். அங்கே அரசியல் கொதிநிலையில் இருப்பதால் உஸ்பெக்கிஸ்தான் போய் படம் எடுத்தோம். ‘ராங்கி’ அனைவர் மனதையும் கண்டிப்பாக கவர்வாள், ராங்கி என்றால் திமிர்பிடித்தவள் என்று சொல்வார்கள். தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்பவர்களை இப்படிச் சொல்வார்கள்.இந்தப்படத்தில் த்ரிஷாவின் பாத்திரம் அப்படிப்பட்டதுதான்.அதனால் இந்தப் பெயரை வைத்திருக்கிறோம்.

இந்தப்படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. தணிக்கைச் சான்று பெறுவதில் தாமதமானதால் வெளியீடும் தாமதமாகிப் போச்சு. அதற்குக் காரணம், இந்தப் படத்தில் அமெரிக்கா, லிபியா ஆகிய நாடுகள் கதையில் இடம்பெற்றிருந்தன. அவற்றோடு, அமெரிக்காவின் எஃப் பி ஐ நிறுவனம், இந்தியாவின் ரா நிறுவனம் ஆகியன பற்றிய காட்சிகள் இருந்தன. இவற்றையெல்லாம் நீக்க வேண்டும் என்று தணிக்கையில் கூறினார்கள். அதனால் பல காட்சிகளை அமைதிப்படுத்திவிட்டோம். ஆனாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அது தடையாக இருக்காது. அக்கா மகளைக் காக்கப்போராடும் கதை என்கிற அளவில் படம் சுவாரசியமாகப் போகும்.

தமிழில் இப்படியொரு அரசியல் பேசும் பொலிட்டிக்கல் த்ரில்லர் வந்திருக்கிறதா நினைவில்லை. தமிழ் சினிமாவில் விபத்து என்ற பகுதியை எதிர்பாராத கணங்களை நுணுக்கமாக ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் கொண்டு வந்தேன். அது மாதிரி ‘ராங்கி’யிலும் தமிழ் சினிமா கண்டிராத களத்தில் அமைத்திருக்கிறேன். படம் பார்க்கும்போது பார்வையாளர்களால் இதை நிச்சயம் உணர முடியும் .. எப்படியோ பல தடைகளைத் தாண்டி இப்போது திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப்படம் உங்கள் கண்டிப்பாக பிடிக்கும்” என்று உறுதிபட தெரிவித்தார்.

error: Content is protected !!