December 8, 2022

“அக்கா குருவி” படத்தை ஓட வைக்கவில்லை என்றால்…? – மிருகம் டைரகடர் சாமி எச்சரிக்கை!

யக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்க 8 பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி. புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய Children of Heaven என்ற மாபெரும் வெற்றிபெற்ற பெர்ஸியன் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் தான் அக்கா குருவி. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படகுழுவினர்கள் பேசியதன் தொகுப்பு இதோ:

இயக்குனர் அமீர் பேசியது:

இந்த விழாவிற்கு நான் வந்ததன் காரணம் சாமி என்கின்ற படைப்பாளியை விட சாமி இயக்கியுள்ள படைப்பிற்காக வருவது தான் என்னுடைய முதல் நோக்கம். “Children of Heaven” என்ற திரைப்படம், உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட ஒரு திரைப்படம். மஜித் மஜிதி என்ற இயக்குனர் உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமாவையும் தன் காலடியில் கொண்டு வந்து புரட்சி செய்த ஒரு இயக்குனர். Children of Heaven படத்தை பார்க்காதவர்கள் சினிமாவில் இல்லை. அனைவரும் பார்த்திருப்பார்கள்.

இந்த படத்தை பற்றி இசைஞானி இளையராஜா இது போன்ற படங்களை ஏன் இங்கு எடுப்பதில்லை என்று ஒரு கேள்வியை கேட்டார். அதில் சில சிக்கல்கள் உள்ளது, இது போன்ற நிறைய திரைப்படங்கள் உள்ளது. அதை எல்லாம் இயக்க வேண்டுமென்றால், இயக்குனரே கதை, வசனம், திரைக்கதை, போன்று என்னவெல்லாம் உள்ளதோ அது அனைத்தையும் பார்ப்பவராக இருக்க வேண்டும். அப்போது தான் தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தர தயாராகவுள்ளனர். இல்லை கதை வேறு ஒருவருடையது, இயக்கம் மட்டும் தான் நான் என்று சொன்னால், அதற்கு நான் எழுத்தாளரை வைத்தே இயக்கிவிடுவோமே தனியாக இயக்குனர்கள் எதற்கு? என்று இது போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

குறிப்பாக முதல் படம் இயக்கும் ஒரு இயக்குனருக்கு அந்த படம் வெற்றி அடைந்துவிட்டது என்று சொன்னால் அவர் அடுத்து எடுக்கும் படம் ரீமேக் படமாக இருந்தால் அதை யாரும் விரும்புவதில்லை. பத்திரிகையாளர்களே கேலிக்குரிய ஒரு விஷயமாக கிண்டலடித்து விடுகிறார்கள். ஆனால், அண்டை மாநிலமான தெலுங்கு, பிற மாநிலமான ஹிந்தி மொழி படங்கள் பெரிய ஹிட் மாஸ் ஹிட் என்று செய்தி வந்தால், அதே படத்தை இங்குள்ள ஒரு பெரிய ஹீரோவை வைத்து ரீமேக் செய்தால், அந்த படத்திற்கு கிடைக்கும் ஆதரவு, விளம்பரம், வரவேற்பு அனைத்தும் அதிகமாக இருக்கும். ஆனால், இது போன்ற கலைப் படங்களை இயக்குவது கத்தி மீது நடப்பது போல் இருக்கும். அந்த படத்தின் தரம் குறையாமல் நம் மண்ணின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு இயக்க வேண்டும். அதே படத்தை இயக்கி தோல்வியடைந்து விட்டால் இயக்குனர் பெரும் விமர்சனத்திற்கு ஆளாவார்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எனக்கு இது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. பெயர் குறிப்பிடாமல் சொன்னால் தெலுங்கு மொழியில் சில்வர் ஜூபிலி வாங்கிய ஒரு படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அந்த இயக்குனர் காட்சி மாறாமல் அப்படியே இயக்கியுள்ளார். ஆனால், அந்த படத்திற்கு பத்திரிகையில், இயக்குனர் மிக சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் என்று எழுதியுள்ளனர். காட்சி மாறாமல் எடுத்த ரீமேக் படத்திற்கு கிடைத்த விமர்சனம் தான் இது. இது போன்ற விமர்சனங்களுக்கிடையில் இயக்குனர்கள் சிக்கிக் கொள்கிறோம் என்பதே நிதர்சனம்.

இளையராஜா கேட்ட கேள்வி நியாயமான கேள்வி, இது சாமிக்கு மட்டுமல்ல பல இயக்குனர்களுக்கும் தோன்றியிருக்கும் எனக்கும் தோன்றியது. இந்த படத்தை இயக்குகிறோம் என்று சொன்னால் பருத்திவீரன் என்ற சொந்த ஊர் கதையை இயக்கிவிட்டோம். ராம் என்று சொந்த கதையை இயக்கிவிட்டோம். அது போன்ற படத்தை இயக்கிவிட்டு ஒரு ரீமேக் கதையை இயக்குவதா? என்று வியாபார ரீதியாக பயம் வருகிறது. இதை இயக்கினால் மார்க்கெட் இறங்கிவிடுமோ? மக்கள் மத்தியில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கேள்விகள் எழுகிறது. இங்கு கலர் சட்டை போட்டுக் கொண்டு விமர்சனம் செய்ய நிறைய பேர் உள்ளனர். அவர்களிடம் யார் சிக்குவது? பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? என்று பல சிரமங்கள் உள்ளது.

Children of Heaven போன்று 20க்கும் மேற்பட்ட படங்கள் ரீமேக் செய்வதற்கு தயாராக உள்ளது. ஆனால், இது போன்ற அச்சுறுத்தல்கள் தான் அதை தடுக்கிறது. ஆனால், அந்த வகையில், மனம் திருந்திய மைந்தனாக சாமி இருக்கிறார். அவரின் முந்தைய படங்கள் சர்ச்சைக்குரிய படங்களாக இருந்ததால் அவர் இந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் சரியான பாதையை தேர்ந்தெடுத்தாரா என்பதை விட அவர் சரியான படத்தை தேர்வுசெய்துள்ளார் என்பதே மறுக்க முடியாத உண்மை.

இந்த படத்தை பார்த்துவிட்டு யாரும் குறை கூறவே முடியாது. இந்த படத்தை அவர் எவ்வளவு குறைவாக எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் கூட அந்த படத்தின் தரம் குறையாது. ஏனென்றால், அந்த கதையின் கரு அப்படி. ஆனால் அவர் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளேன். கிளைமாக்ஸ் காட்சியில் சிறிய மாற்றம் செய்துள்ளேன் என்று தெரிவித்தார். அது கேட்பதற்கு நன்றாக இருந்தது. பார்ப்பதற்கும் நன்றாக தான் இருக்கும். மிக முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வணீக ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்பது தான். இந்த படத்தில் பணியாற்றிய குழந்தைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குனர் இரா.பார்த்திபன் பேசியது,

நான் ‘உள்ளே வெளியே’ என்று ஒரு படத்தை இயக்கினேன் அதற்கு காரணம் நான் இயக்கிய ‘சுகமான சுமைகள்’ படம் தான். நான் அதை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்பதற்காக மிகவும் ஒழுக்கமாக இயக்கினேன். ஆனால், அதை என் குடும்பம் மட்டுமே பார்த்தது. அந்த படத்தால் நான் 75 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தேன். அது நான் சம்பாதித்த பணம் இல்லை. சம்பாதிக்க போகும் பணத்தையும் சேர்த்து போடப்பட்ட பணம். அந்த பொருளாதார பிரச்சனை.. நம் வாழ்க்கையிலேயே விளையாட ஆரம்பித்து விட்டது. எனக்கு தெரிந்து ரஹ்மான் சார் சொல்வது போல் இரண்டு பாதை உள்ளது. ஒன்று காதல் மற்றொன்று வெறுப்பு. அதில் நாம் தேர்தெடுக்க வேண்டியது காதலை தான் என்பார். அது போல, தேர்ந்தெடுத்தலே மிக முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்.
அது போல் இயக்குனர் சாமி தேர்ந்தேடுத்தது CHILDREN OF HEAVEN.

நான் ஒத்த செருப்பு படத்தை இயக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேனோ, அது வெளியாகி ஓடிடி தளத்திற்கு சென்றவுடன் உலக பெருமையெல்லாம் கிடைத்தது. இப்போது கூட அமீர், நீங்கள் உங்கள் படத்தை வியாபாரம் செய்துவிட்டீர்களா என்று கேட்டார். யாரும் இது வரை என் வீட்டின் பக்கம் அல்ல தெருவின் பக்கம் கூட வரவில்லை என்று சொன்னேன். இந்த மாற்றங்கள் எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இரவின் நிழல் படம் உள்ளே வெளியே படத்தை போன்றிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், எவ்வளவு காலம் தான் இந்த பொருளாதார சிக்கல்களை சமைப்பது என்று தெரியவில்லை. இயக்குனர் சாமிக்கு திடம் மிகவும் முக்கியமான ஒன்று. நான் முந்தைய காலத்தில் பல படங்களின் மூலம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால், நிறைவை தரும் படம் ‘இரவின் நிழல்’ மட்டும் தான். பாக்யராஜ் சார் படத்தை பார்த்தார். அந்த பாராட்டு என்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது. அது போன்ற சந்தோஷத்தை சாமி உணருவார். இந்த படம் வெற்றியடையும் என்றார்.

ஒளிப்பதிவாளர் உத்பல் வி நாயனார் பேசியது,

நான் கேரள மாநிலத்தை சேர்ந்தவன். எனக்கு கேமராவுக்கு பின்னாடி நிற்பது தான் சுலபம். கேமரா முன்னாடி கொஞ்சம் பிரச்சனை தான். எனக்கு நிறைய பேச தெரியாது. நான் இது வரை கன்னடம், தமிழ், தெலுங்கு, கொங்கணி, மலையாளம் என 80 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அதில் முதல் பட வாய்ப்பு தமிழில் தான் கிடைத்தது. என்னை வாழ வைத்தது தமிழ் தான். பார்த்திபன் சாருடன் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் எனக்கு முக்கியமாக இருவர் உதவி செய்தனர். என்னுடைய கலரிஸ்ட் முத்துராஜ் மற்றும் ஹெலிகேம் ஜெகன் ஜெயராம். முத்துராஜ் சார் தேசிய விருதை பெற்றவர். சரத்குமார் சார் நடித்த “சாமுண்டி” தான் என்னுடைய முதல் படம்.

நடிகர் ஆதி பேசியது,

இந்த படத்தின் காட்சிகள் மிகவும் அழகாக இருந்தது. வழக்கமாக நாம் பார்க்கும் படங்கள் ஹீரோவை சுற்றி மட்டுமே இருக்கும். அது போன்ற படங்கள் நமக்கு பழகிவிட்டன. அதற்கு நடுவில் ஒரு கிராமத்தில் இருக்கும் வீட்டில் இரு குழந்தைகளை பற்றிய கதையை சொல்லும் போது எனக்கு அது மிக சுவாரஸ்யமாக இருந்தது. சாமி என் முதல் பட இயக்குனர். “மிருகம்” தான் என்னுடைய முதல் படம். மிருகம் படத்தின் படப்பிடிப்பின் போது இவரை பார்த்தால் சிறிது பயம். அவர் பேசும் தோரணையே கொஞ்சம் கடுமையாக தான் இருக்கும். ஆனால், அவருடன் பழக பழக தான் எனக்கு அவரை பற்றி புரிந்தது. அவருக்கு சினிமாவை தவிர வேறு ஏதும் தெரியாது. சில பேர் உள்ளே அழுக்கை வைத்துக் கொண்டு வெளியில் அழகாக தெரிவார்கள். ஆனால், இயக்குனர் சாமி வெளியில் கொஞ்சம் முரட்டு தனமாக தெரிந்தாலும் அவரின் உள்ளம் அழகு. இவர் என் அண்ணன் மாதிரி எனக்கு ஆதி என பெயர் வைத்தது இவர் தான். படக்குழு அனைவர்க்கும் வாழ்த்துக்கள். இளையராஜா இசை இதுபோன்ற படங்களுக்கு எப்படி இருக்கும் என்று ட்ரைலர் பார்க்கும் போதே தெரிகிறது. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள், .

இயக்குனர் சாமி பேசியது,

இந்த படத்தை நான் இயக்கியதற்கு ஒரு காரணம் உள்ளது. நான் பொறியாளன் என்றாலும் இலக்கியம் பயின்றேன். பார்த்திபன் சார், சேரன் சார் இவர்களிடம் பணியாற்றும்போது நான் சத்ய ஜித் ரே போன்று படம் இயக்கத்தான் வந்தேன். அதற்காக பாரதியாரின் புத்தகங்கள் 20 படித்தபின் எனது ஸ்கிரிப்ட்டை எழுதினேன். அதன்பின் “உயிர்” எனும் படத்தை பாசிட்டிவாக தான் எழுதி கதை சொல்ல போனேன். சென்ற அனைத்து இடத்திலும் நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது, என்னுடன் உதவியாளராக இருந்த ஒருவர் “சார் ஸ்கிரிப்ட்டை நெகட்டிவாக மாற்றலாம்” என்று கூறினார். நானும் சரி என்று அண்ணி கதாபாத்திரத்தை நெகட்டிவாக மாற்றிய பின் ஐந்து தயாரிப்பாளர்கள் படத்தை எடுக்க முன் வந்தனர். அதன் பின்னரே உயிர் வந்தது. உயிர் படத்தை போல் அடுத்த படத்தை எடுக்க வேண்டாம் என முடிவு செய்து “சதம்” என தந்தை மகனை பற்றிய ஒரு கதை. ஆனால், அது தொடரவில்லை. அதன் பின்னரே “மிருகம்” படத்தை இயக்கினேன். அதாவது கதையை தேர்ந்தெடுக்கும் சூழலில் நான் இல்லை. அமீர் ,பார்த்திபன் எல்லாம் அவர்களுக்கான கதையை தேர்ந்தெடுக்கும் இடத்தில் உள்ளார்கள்.

நேற்று பார்த்திபனின் “இரவின் நிழல்” படத்தை பார்த்தேன். அப்போது என்னிடம் 75 ஸ்கிரிப்ட் உள்ளது என்றார். நான் என்னிடம் 150 கதைகள் உள்ளது. என் அலமாரி முழுவதும் கதை தான் இருக்கிறது என்றேன். ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் நான் நான்கு அல்லது ஐந்து கதைகளை கூறுகிறேன். அவர்கள் தான் கதையை தேர்ந்தெடுக்கிறார்கள் நான் இல்லை. அதனால் தான் “மிருகம்” இயக்கும் சூழல் உருவானது. அதற்கு பின் “சரித்திரம்” என ஒரு ஆவணப்படம் இயக்கினேன். அது சிலம்பத்தை பற்றிய ஒரு ஆவணப்படம். மினி பாகுபலி போன்ற ஒரு படைப்பு அது. அதை ஒரு 11 ரீல்ஸ் எடுத்தோம். அதற்காக நிறைய படிக்க வேண்டியிருந்தது. பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இரண்டு வருடம் கழித்து எடுத்த படம். அதுவும் சரியாக வரவில்லை.

அதன்பின், வயிற்று பிழைப்பிற்காக “சிந்து சமவெளி” படத்தை இயக்கினேன். அது பிழைப்பையே கெடுத்துவிட்டது. அடுத்தது கங்காரு படம் இயக்கினேன். என் பசங்களுக்கு நான் எப்போதும் படங்கள் போட்டு காட்டுவது உண்டு. அப்போது என் மகள் கேட்டாள்-, அப்பா நீங்கள் எப்போதும் அனிமேஷன் படத்தை தான் காட்டுகிறீர்கள். சின்ன குழந்தைகள் நடித்த படங்கள் ஏதும் இல்லையா என்று கேட்டால். நானும் ஏன் இல்லை என்று “CHILDREN OF HEAVEN” படத்தை போட்டு காண்பித்தேன். அப்போது என் அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மொழி புரியாவிட்டாலும் கூட படத்தை பார்த்து அழுது விட்டார். அவர் தான் “இது போன்ற படங்களை யாரும் இயக்க மாட்டார்களா’ என்று கேட்டார். நானும் சரி நான் எடுத்து விடுகிறேன் என்று மஜித் மஜிதி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஆரம்பிக்கப்பட்ட படம் இது. அதற்கு முக்கிய காரணம் என் தயாரிப்பாளர்கள் தான். எட்டு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஷூவை ஹீரோவாக கொண்ட ஒரு கதையை இயக்க உதவியதற்கு மிக்க நன்றி.

நான் சிந்து சமவெளி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நீங்கள் இந்த படத்தை ஓட வைத்தால் நான் இது போன்ற படங்களை மட்டும் தான் இயக்குவேன். இல்லையென்றால், என்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு வேறு விதமான படைப்பை கொடுப்பேன் என்று கூறினேன். நீங்கள் அந்த படத்தை ஓட வைக்கவில்லை. அதனால் நான் இந்த படத்திற்கு மாறி விட்டேன். நீங்கள் “அக்கா குருவி” படத்தை ஓட வைக்கவில்லை என்றால் நான் மீண்டும் உயிர், மிருகம் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு சர்ச்சை படத்தை தான் இயக்குவேன். அது எனக்கு கவலை இல்லை உங்களுக்கு தான் கஷ்டம்.

நான் நல்ல படங்கள் இயக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் என்ன மாதிரியான படத்தை இயக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இளையராஜா சார்,
ஓரிஜினலை விட நீ எடுத்த படம் படம் சிறப்பாக இருக்கிறது என்றார் , துணிச்சலாக திரையரங்கில் வெளியிடுகிறோம் அனைவரும் ஆதரவு தாருங்கள்,.

தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியபோது,

“அக்கா குருவி” இந்த படம் CHILDREN OF HEAVEN படத்தை அதிகார பூர்வ ரீமேக்கை சாமி எடுக்கிறார் என்று சொன்னதும் எனக்கு சிறிது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அரசியலுக்கு சுப்ரமணிய சாமி என்றால் சினிமாவிற்கு இந்த சாமி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் CD க்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலம் அது. அப்போது மக்கள் திரையரங்கிற்கு வரவேண்டும் என்றால், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்களை இயக்க வேண்டும். இல்லையென்றால், சாமியை போன்று சர்ச்சையான படங்களை எடுத்தால் தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று கூறுவார்கள்.

இப்படத்தை நானும் பார்த்துவிட்டேன் மிக சிறப்பாக உள்ளது. படத்தை ரீமேக் என்று மாற்றங்கள் செய்து சொதப்பாமல், படத்தின் தன்மை கலையாமல் இயக்கியிருக்கிறார். உண்மையை சொன்னால் CHILDREN OF HEAVEN படத்தை விட இந்த படம் ஒரு படி மேல் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு படத்தை தேர்வு செய்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்திற்கு துணிந்து பணம் போட்ட அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

அனைவரும் பான் இந்தியா படம் என கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் திரையரங்கு சங்க உரிமையாளர் அண்ணண் சுப்ரமணியம் கூட, சிறு படங்களுக்கு யாரும் திரையரங்கிற்கு வரப்போவதில்லை என்று சொன்னார். அதை பற்றி எந்த பயமும் தேவையில்லை. ஏனென்றால், அந்தந்த மண்ணிற்கு அதற்கான ஒரு தன்மை உண்டு. நம் உணர்வோடு படம் பார்க்கும் போது இந்த படத்தை திருப்பி திருப்பி பார்ப்போம். அனைவரும் இந்த படத்தை கொண்டாட வேண்டும். சாமி அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் நன்றி, என்றார்.