October 16, 2021

அந்தரத்தில் தொங்கியபடி உணவருந்தும் அசாதாரண உணவகம்!- வீடியோ

மேற்கத்திய கலாச்சார வரிசையில் அசாதாரண உணவகமாக சித்தரிக்கப்படும் ‘DINNER IN THE SKY’ உலகின் 60 நாடுகளில் பரவியுள்ளது. பெல்ஜியத்தில், 50-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், தலைநகர் ப்ரசல்ஸில் உள்ள இயற்கை எழில்சூழ்ந்த பூங்காவில், இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. கிரேன் உதவியுடன், தரையிலிருந்து கிட்டத்தட்ட 131 அடி உயரத்திற்கு கொண்டு செல்லப்படும் இந்த உணவகத் தளம், 20 பேர் வரை நாற்காலிகளில் அமர்ந்து உணவருந்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உணவுப் பரிமாறுபவர்களின் கனிவான உபசரிப்புடன் உணவு வகைகளை ருசித்து மகிழ, துணிச்சல்மிக்க பலரும் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். தரமும், உயரமும் அதிகம் என்பதால் விலையும் சற்றே அதிகமாக உள்ளது. அதாவது ஒரு நபருக்கு 320 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முன்னதாக தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன் முதலாக அசாதாரண உணவகத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை மலேசியாவையே சேரும். மலேசியாவில், கோலாலம்பூர் கோபுரத்தின் கார் நிறுத்தும் வளாகத்தில், இம்மாதம் 31ஆம் தேதி வரையில் இந்த இரவு நேர உணவக அனுபவத்தைப் பெற முடியும். ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணி, இரவு 8.30 மணி, இரவு 10.00 மணி ஆகிய மூன்று வேளைகளில் இரவு உணவு உண்ணும் வாய்ப்பையும் இரவு 11.30 மணிக்கும் நள்ளிரவு 12.30 மணிக்கும் இனிப்பு வகைகளை சுவைக்கும் வாய்ப்பையும் ‘டின்னர் இன் தி ஸ்கையில்’ பெற முடியும்.

கிரேனின் உதவியோடு, தரையிலிருந்து 50 மீட்டர் உயரத்திற்குக் கொண்டுச் செல்லப்படும் இந்த உணவகத் தளம், 5 மீட்டர் நீளத்தையும் 9 மீட்டர் அகலத்தையும் கொண்டுள்ளது. சுழலும் ஆற்றலுடன் பலத்த பாதுகாப்பு அம்சம் பொருந்திய 22 நாற்காலிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. அவை பார்ப்பதற்கு பந்தயக் காரின் இருக்கையைப் போன்று காட்சியளிக்கின்றன. கதவுகள், கண்ணாடிகள், கூரை போன்ற எதுவுமின்றி, வித்தியாசமான உலகில் இருப்பதைப் போன்ற தோரணையை இது ஏற்படுத்துகின்றது. உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற 10 அசாதாரண உணவகங்களின் தரவரிசையில் ‘டின்னர் இன் தி ஸ்கை’ உணவகமும் ஒன்று என ஃபோர்பெஸ்’ இதழ் அங்கீகரித்துள்ளது.

வழக்கமான உணவகச் சூழலில் காணப்படுவது போல சமையல்காரர் உட்பட பணியாளர்களும் அந்தரத்தில் இருந்தவாறு தங்களின் வாடிக்கையாளர்களை கவனித்துக்கொள்கின்றனர். ஆனால், இங்கு அமர்ந்து உணவு உண்ண நினைப்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய உணவை ‘ஆர்டர்’ செய்ய வேண்டும்.

சைவ, அசைவ வகை உணவுகள், பழங்கள், குளிர்பானங்கள் உட்பட நவீன ஐரோப்பிய பாணியில் அசத்தலான பல்வேறு உணவு வகைகளை இங்கே உண்ணும் வாய்ப்பைப் பெற முடிகின்றது. உள்நாட்டைச் சேர்ந்த பிரபலமான தங்கும் விடுதிகளின் சமையல்காரர்கள் உட்பட வெளிநாட்டு சமையல்காரர்களும் இந்த விருந்துக்காக உணவுகளை தயார் செய்கின்றனர்.

பார்ப்பதற்கு வண்ணமயமாகக் காட்சியளிக்கும் அந்த உணவுகள், சாதாரணமான உணவகங்களிலும் கிடைக்கும். ஆனால், முற்றிலும் மாறுபட்ட இந்தச் சூழலில் அமர்ந்து அவ்வுணவுகளைச் சுவைக்கும் அனுபவம் தனித்தன்மை வாய்ந்ததாகும். உயர் தர இரவு உணவு அனுபவத்தைப் பெற 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகின்றது. கோலாலம்பூர் கோபுரத்திற்கு மிக அருகில் இருந்தவாறு, தலைநகரின் எழிலை மேலிருந்து ரசிக்கும் போது, சற்றே பய உணர்வும் ஏற்படக்கூடும்.

அதனைத் தவிர்த்து, வாடிக்கையாளர்கள், ஆசுவாசப்படுத்தும் மனநிலையுடன் (‘ரிலெக்சிங்’) தங்களின் விருந்தை அனுபவிக்க ஏதுவாக ‘டின்னர் இன் தி ஸ்கையில்’ மேற்கத்திய இசைக் கச்சேரிகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, இங்கு அந்தரத்தில் நின்றுகொண்டு, ‘வயலின்’ வாசிக்கும் இசைக்கலைஞர், வாடிக்கையாளர்களை கவரக்கூடிய அம்சமாகவும் விளங்குகின்றார்.

கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘டின்னர் இன் தி ஸ்கை’, உலகமெங்கிலும் போற்றுதலுக்குரிய 40க்கும் மேற்பட்ட இடங்களில் 5,000க்கும் மேற்பட்ட விருந்தை முன்னடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் ‘2ஸ்பைசி எண்டர்டேய்ன்மன்ட்’ எனும் நிறுவனம் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளது. 22 பேர் ஒரே நேரத்தில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக்கூடிய இதில் ஒரு நாற்காலிக்கு 599 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. தரமும் உயரமும் அதிகம் என்பதால் விலையும் சற்றே அதிகமாக உள்ளது. ஆனால், மழை, இடி, புயல் காற்று என இயற்கை அதன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினால், ‘கிரேன்’ உடனடியாகக் கீழே இறக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு உட்புறத்தில் உணவுகள் பரிமாறப்படும். அதேவேளையில், எதிர்பாரா அச்சம்பவங்க ளுக்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித்தரப்படாது என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மலேசியாவில்தான் இந்த ‘டின்னர் இன் தி ஸ்கைக்கு’ அதிகளவிலான வரவேற்பு கிட்டியுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த விருந்து அறிமுகப்படுத்தப்பட்ட 48 மணி நேரத்திலேயே அதன் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டதாம். அதோடு, இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த விருந்துக்காக முன்கூட்டிய தங்களை பதிவு செய்துவிட்டு, கட்டணமும் செலுத்திவிட்டு, காத்திருக்கின்றனர் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த போது, மிகவும் வியப்பாக இருந்தது.

தனித்தன்மை வாய்ந்த இந்த இரவு விருந்துக்கு தங்களின் அன்பிற்குரியவர்களை அழைத்துச் செல்ல நினைப்பவர்கள் ஏராளம். ‘மெழுகுவர்த்தி விருந்து’ (candle light dinner), தண்ணீரில் மிதந்தவாறு கப்பலில் விருந்து, ஆகாயத்தில் பறந்துகொண்டே விமானத்தில் விருந்து என கொண்டாடப்பட்டு வந்த காலம் மாறி, தற்போது அந்தரத்தில் தொட்டில் கட்டித் தொங்குவது போலான விருந்தும் இந்த நவீனமயமாகியுள்ள உலகில் பிரபலம் அடைந்துவிட்டது. எது எப்படியிருப்பினும், அவசரம் என்றவுடனே இந்த டின்னர் இன் தி ஸ்கையிலிருந்து உடனடியாக கீழே இறங்கி வந்துவிட முடியாது. எனவே, மேலே விருந்துண்ண செல்லும் முன் நீங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=G8dlyekhLpg