September 18, 2021

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆசைதான்.. ! – தினேஷ் கார்த்திக் பேட்டி

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் நேற்றைய இறுதிப் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி  வெற்றிக் கோப்பையை  கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் 8 பந்தில் 29 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். தினேஷ் கார்த்திக்கின் இந்தப் பேட்டிங் இந்திய அளவில் அவருக்கு பாராட்டுகளைக் குவித்துவருகிறது.

இந்நிலையில்  சென்னை  சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் தினேஷ் கார்த்திக், “ தற்போதைய சூழலில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் இருக்கிறோம். இது நல்ல விஷயம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இது சுலபமான விஷயம் அல்ல. ஆனால், ஐ.பி.எல்., டி.என்.பி.எல். உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் அணியில் வாய்ப்பைப் பெறலாம்.  ‘இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையான போட்டி இருக்கும்போது, கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவது அவசியம். இந்திய அணியில் விளையாடினாலும் எனக்கு தமிழில் பேசவே பிடிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். சென்னை அணியில் இடம் கிடைக்காதது எனக்கு வருத்தமளிக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டி தனிப்பட்ட முறையில் எனது மிகச் சிறந்த இன்னிங்ஸ். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பினேன். அதுபோல் நடந்துவிட்டது’ என்று தெரிவித்தார்.

மேலும்  தோனியைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் முதலிடம் வகிக்கும் (சிறந்த பினிஷிங்) பல்கலைக் கழகத்தில் நான் இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன், என்னுடன் அவரை ஒப்பிடுவது நியாயமாகாது. தோனியின் பயணம் முற்றிலும் வித்தியாசமானது, என்னுடைய பயணம் வேறு வகைப்பட்டது. அவர் பிரமாதமான ஒரு நபர், அவர் மிகவும் அமைதியானவர், கூச்ச சுபாவம் உள்ளவர், இன்று அவர் இளைஞர்களுக்கு உதவுவதை உரத்த குரலில் பேசி வருகிறார். எனவே ஒப்பீடு என்பது என்னைப் பொறுத்தவரை நியாயமற்றது, நான் கூறியது போல் நான் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில் தோனி முதலிடம் வகிப்பவர். நான் எந்த இடத்தில் இருக்கிறேனோ அதில் இருப்பதையே மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்.

இப்போதைய சூழலில் அனைவரது கவனமும் என் மீது குவிந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, இத்தனை காலமாக நான் செய்த நல்ல கர்மா, நல்ல விஷயங்கள் என்னை அந்த சிக்ஸரை அடிக்க உதவியது. அந்த ஷாட் சிக்ஸருக்குச் சென்றது, அதாவது 2மிமீ கூடுதலாகச் சென்று 6-ஆக மாறியது. எனக்கு வார்த்தை வரவில்லை. இந்த ஆட்டத்தில் நாம் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, உள்நாட்டு கிரிக்கெட்டில் அவ்வளவு எளிதில் கவனம் நம் மீது விழாது, திடீரென இவ்வளவு கவனம் என் மீது திரும்பியிருப்பது பற்றி நல்லதாகவே உணர்கிறேன். இது இன்னும் சிறப்பான ஒன்றுக்கான ஆரம்பமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

வரும் ஐபிஎல் தொடர் (கொல்கத்தா கேப்டன்) எனக்கு மிக மிக முக்கியமானது, இந்திய கிரிக்கெட் இன்று இந்த நிலைமையில் இருக்கிறது என்றால் அதற்கு ஐபிஎல் ஒரு காரணம், சிறந்த வீரர்களுடன் மோத வேண்டும், எனக்குத் தனிப்பட்ட முறையில் இது முக்கியத் தொடர். கேப்டன் பொறுப்பு குறித்து எனக்கு உற்சாகமாக உள்ளது,   கேப்டன்சி யைத் தழுவ இது சிறந்த தருணமாகக் கருதுகிறேன், அணியில் (கொல்கத்தா) சிறந்த பந்து வீச்சு உள்ளது, பயிற்சியாளர்களுடன் அமர்ந்து நான் எந்த டவுனில் பேட் செய்ய வேண்டியிருக்கும் என்பதை விவாதிக்க வேண்டும்.

எனக்கு தனிப்பட்ட முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆசைதான்.. ஆனால் விளையாடில் இது  நடக்க வாய்ப்பில்லை.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்தத் தொடரில் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டு வருவார்கள், இந்த ஐபிஎல் தொடர் அருமையானதாகும்.”