January 31, 2023

ஹாக்கி கனவு கொண்ட பெயரிலேயே மணி என்னும் ஒருவன், திருமணத்திற்கு பிறகு தனது கனவை தொடர முடியாமல், வெறுப்பான வாழ்கை வாழுகிறான். அவனுக்கு (ஓ மை கடவுளே ரிலீஸ் ஆகி ஹிட் அடித்ததால்) கால இயந்திரம் பற்றி தெரிந்தவுடன், கடந்த காலத்திற்கு சென்று தன் வாழ்கையை மாற்றலாம் என முடிவு செய்கிறான். அதன் பிறகு அவன் தேர்தெடுக்கும் வாழ்கை, அவனுக்கு இன்பம் தருகிறதா, துன்பம் தருகிறதா என்பதே கதை.ஆனால் சிரிப்பாண்டி என்ற பெயரில் உருவ கேலி , பெண்களுக்கு வாழ்க்கை பாடம் எடுப்பது, மனநலம் பாதித்தோரை மட்டுமில்லாமல் மாற்றுத் திறனாளிகளையும்  கலாய்ப்பது எல்லாம் சட்டப்படி தப்பு என்று தெரிந்தும் தொடர்ந்து அதை மட்டுமே செய்யும் இந்த லொள்ளருக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் ஊன்று கோலுடன் நடந்து போகும் ஒரு மாற்றுத் திறனாளி கேரக்டரைப் பார்த்து ‘சைட் ஸ்டாண்ட்’ என்று சொல்லும் இவருக்கு கால் உடைந்து கம்பு ஊன நடக்க சாபமிடும் பார்வையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டால் நலம்.

கால இயந்திரத்தை பற்றி வரும் படங்களின், கால இயந்திரத்தை பற்றிய அடிப்படை தகவல்களை கொடுத்துவிட்டு, அதன் பிறகு கதையின் ஊடே பயணிப்பது என்பது தான் அடிப்படை விதி. இந்த டிக்கிலோனாவில் அதிக சிரத்தை எடுத்துகொள்ளாமல், கதைக்கு கால இயந்திரத்தின் தேவை எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு தகவல்களை மட்டும் தெளிவாக கொடுத்தது சிறப்பான ஒன்று. கால இயந்திரம் படத்தில் இடம்பெற்றாலும், படம் அதனை சுற்றி அமையவில்லை. கதாநாயகன், அவனுடைய காதல் வாழ்கை, அதில் ஒரு மாறுதலை ஏற்படுத்தும் கால இயந்திரம் என்ற வழியை தேர்ந்தெடுத்தது நல்ல முயற்சி. இதனால் அறிவியல் கேள்வி, பதில்களை படத்தில் புகுத்த தேவையில்லை. .

ஆரம்பித்த படத்தின் இண்டெவெல் வரை இருந்த ஆர்வம், இரண்டாவது பாதியில் இல்லை. அதற்கு காரணம் ஒரு சில கதை நகர்வுகள் முதல் பாதியிலும், இரண்டாவது பாதியிலும் ஒரே மாதிரியாக வரும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், கால இயந்திரத்தை பயன்படுத்துவதால், மணி என்னும் தனி மனிதன் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்களே படத்தின் கதை.

முதல் பாதியில் கால இயந்திரத்தை பயன்படுத்தும் போதும், அதனால் ஏற்படும் மாற்றங்களை பார்க்கும் போது, நாம் முதல் தடவை இந்த காட்சிகளை பார்ப்பதால், அது சுவாரஸ்யம் தருகிறது. அதே நேரத்தில் அதே மாதிரியான காட்சிகள் இரண்டாம் பாதியில் வரும் போது, அது அவ்வளவாக நம்மிடம் ஈர்ப்பு ஏற்படுத்துவதில்லை. அதுமட்டுமில்லாம், படம் எப்படி முடிய போகிறது, என இரண்டாம் பாதி ஆரம்பித்த உடனே தெரிந்துவிடுவதால், கதையின் முடிவை நோக்கி மனம் செல்கிறது.

இந்த சந்தானம் கூட வடிவேலு மாதிரி நிறைய ஒல்லியாகி விட்டார் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இரண்டு கொழுக் மொழுக் நாயகிகள் படத்தை பார்க்க வைக்க உதவுகிறார்கள். ஆனந்த்ராஜ் முனீஷ்காந்த் ஒன்லைனரில் சிரிக்க வைக்கிறார்கள். க்ளைமாக்ஸ் முன்னாடி வரும் ஹாஸ்பிடல் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. படம் முழுக்க இந்த காமெடி இருந்திருந்தால் ஒரு அட்டகாசமான காமெடி படமாக இருந்திருக்கலாம். அக்கரைக்கு இக்கரை பச்சை, உனக்கு இருக்கும் வாழ்க்கையை ஒழுங்காக வாழு, என கருத்து சொல்ல முயன்றதால் படம் சீரியஸ்ஸாக போய் விடுகிறது.

ஒளிப்பதிவு டெக்னாலஜி எல்லாம் 2027. ஐ காட்டியதில் நன்றாக உழைத்துள்ளார்கள். யுவனின் இசை ஆறுதல்

மொத்தத்தில் இயக்குனர் கார்த்திக் யோகி உடைய திரைக்கதை புதியதாக யோசித்திருந்தாலும் ஈர்ப்பதாக இல்லை. சந்தானத்திற்கு மீண்டும் ஒரு ஆவரேஜ் படம் அவ்வளவே

மார்க் 2.5/5