ரிக்‌ஷாக்காரன் – ரிட்டர்ன்!

ரிக்‌ஷாக்காரன் – ரிட்டர்ன்!

1971-ம் ஆண்டில் குமரிக்கோட்டம், ரிக்‌ஷாக்காரன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள் ஆகிய 4 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இவற்றில் சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த “ரிக்‌ஷாக்காரன்” வரலாறு படைத்த படமாகும்.படித்த இளைஞன் ஒருவன், ரிக்‌ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான் படத்தின் மையக்கரு. நவரசங்களும் கொண்ட கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்ற வகையில் சத்யா மூவிஸ் கதை இலாகா உருவாக்க, திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் அமைத்தார். வசனத்தை ஆர்.கே.சண்முகம் எழுத, டைரக்‌ஷனை எம்.கிருஷ்ணன் கவனித்தார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். மற்றும், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், “சோ”, ஐசரி வேலன், பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, ஜெய குமாரி, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தனர். 29-5-1971-ல் வெளிவந்த “ரிக்‌ஷாக்காரன்” பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. சண்டைக்காட்சிகள், புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன.

இந்தப்படம் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் 142 நாட்களும், கிருஷ்ணாவில் 142 நாட்களும், சரவணாவில் 104 நாட்களும் ஓடியது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. 1971-ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக பாரத் விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.தான். ஆயினும், இந்த விருது கொடுக்கப்பட்டதை சிலர் விமர்சித்த காரணத்தால், “விருது எனக்கு வேண்டாம்” என்று எம்.ஜி.ஆர். திருப்பிக் கொடுத்தார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பழைய படங்களை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி டிஜிட்டலில் மாற்றி அதை மீண்டும் திரையிட்டு வருகின்றனர். அப்படி திரையிடப்பட்ட படங்கள் இப்போதும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அந்த வகையில் எம்ஜிஆர்., சிவாஜியின் பல படங்கள் டிஜிட்டல் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், மாட்டுக்காரன் வேலன் போன்ற படங்களை தொடர்ந்து இப்போது ‛ரிக்ஷாக்காரன்’ படமும் டிஜிட்டலில் உருவாகி வருகிறது.

ஆம்.. சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த ‘ரிக்‌ஷாக்காரன்’படத்தின் டிஜிட்டல் பதிப்பை வெளியிடுகின்றனர் ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் ‘பிலிம் விஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு.

“எம்.ஜி.ஆரின் படமானது வெளி வர போகிறது என்று தெரிந்தால் போதும், எப்படியாவது முதல் நாளுக்குரியடிக்கெட்டை நான் வாங்கி விடுவேன். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் தீவிர பக்தன் நான். அந்த வகையில் அவர் நடிப்பில்வெளியான ‘ரிக்‌ஷாக்காரன்’ இன்றளவும் என் மனதில் ஒன்றி இருக்கிறது. விரைவில் நாம் அனைவரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம்.

அந்த விழாவின் முதற் கட்டமாக இந்த ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி, எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருக்கிறோம். இந்த நவீன டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட ‘ரிக்‌ஷாக்காரன்’திரைப்படம், எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘குவாலிட்டி சினிமாவின்’ டி.கே. கிருஷ்ணகுமார்.

error: Content is protected !!