December 8, 2021

பிரசவத்தின் போது குழந்தையின் தலை தனியாக வந்ததா? – முழு விபரம்!

காஞ்சிபுரம் அருகே, செவிலியர்கள் பிரசவம் பார்க்கும்போது, குழந்தையின் தலை தனியாக வந்து விட்டதாக ஒரு செய்தியை பரபரப்பாக சிலர் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இதையும் நீட் ஆதரவுக் கான வாதத்துக்கு சிலர் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தச் செய்தியில் உண்மை வேறாக இருக்கும் என்பது என் அனுபவத்தில் கிடைத்த அறிவு. அதனால்தான் நானும் உணர்ச்சி வசப்பட்டு அதைப் பற்றி எழுதாமல், டாக்டர் ரேவதியை இதுகுறித்து பதிவு எழுதுமாறு வேண்டினேன். அவர் விசாரித்து எழுதிய பதிவு கீழே.


*
குழந்தையின் தலை மட்டும் துண்டாகிப் பிறந்ததென செய்தியை சமீபமாகப் பார்த்திருப்பீர்கள்; படித்துமிருப்பீர்கள் ! நான் அந்தப் புகைப்படத்தைப் பகிரவில்லை. பீதிகளைக் கிளப்ப வேண்டாம் என்று. அதுபற்றிய விவரங்களை அங்கே பணியாற்றியவர்கள் மூலம் நன்றாக விசாரித்து, தகவல் தெரிந்துகொண்டபிறகே விவரங்கள் அறிந்து பகிர்கிறேன்.

அது இறந்தே பிறந்த குழந்தை. பிரசவ தேதிக்கு ஒருமாதம் முன்னரே வலி எடுத்து குறைமாதத்தில், குறை எடையுடன் இருந்த அந்தக் குழந்தையின் துடிப்பும் இயக்கமும் இரண்டு நாட்கள் முன்னரே நின்றிருந்ததையும், முந்தைய நாட்களில் பனிக்குட நீர் கசிவையும் இருபது வயதே நிரம்பிய அந்தத் தாய் கவனிக்கவும் சொல்லவும் தவறி இருக்கிறார். அந்த வயதும் அறியாமையும் தவறு சொல்வதற்கில்லை.

Upgraded Primary health centres – அதாவது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுழற்சி முறையில் மருத்துவர்கள் உண்டு; அதுவே 24 மணிநேர பிரசவ சேவை மையங்களில் (24hrs delivery care centres) இதற்கென நன்கு சிறப்புப் பயிற்சி பெற்ற செவிலியர்கள் பிரசவம் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமே செய்திருக்கிறது. தேவைகள் ஏற்படின் on callsஇல் மருத்துவர்களை அழைத்துக் கொள்ளலாம்.

இந்த வகையில் பொதுவாக பிரச்சினைக்குரிய தேதியை நெருங்கும் கர்ப்பிணிகள் கடைசி நேரத்தில் வந்து நின்று சிக்கலில் மாட்டுவதைத் தவிர்க்கவே High risk pregnancies என கர்ப்பிணிகளை வகை பிரித்துள்ளுனர் —
* உயரம் குறைவான முதல் கர்ப்பம் சுமக்கும் கர்ப்பிணிகள்
* 18,19 வயதிற்குட்பட்ட, 30 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள்
* ஏற்கனவே சிசேரியன் அறுவை சிகிச்சை ஆன கர்ப்பிணிகள்
* குழந்தை அமர்ந்திருத்தல் , குறுக்கிலிருத்தல்
* இரத்த சோகை உள்ள கர்ப்பிணிகள்
* ஆர் ஹெச் நெகட்டிவ் இரத்த வகையுள்ள கர்ப்பிணிகள்
* இருதய வியாதியுள்ள கர்ப்பிணிகள்
* சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிகள்
…..

இதுபோல இன்னும் பிற சிக்கல்கள் உள்ள கர்ப்பிணிகளை பிரசவ தேதிக்கு முன்பாகவே மருத்துவ மனைகளில் அனுமதித்து, இரண்டாம் மூன்றாம் நிலை மகப்பேறு மையங்களில் முன்அனுமதி பெற்று அவர்களைப் பரிந்துரை கடிதங்களோடு 108 வாகனத்தில் அனுப்பி வைக்கிறோம்.

இதையெல்லாமும் கடந்து எங்களது அறிவுரைகளையோ கிராம சுகாதார செவிலியர்களின் ஆலோசனைகளையோ புறக்கணித்து சிலர் அம்மா வீட்டிற்கோ விருந்தினராகவோ எங்காவது சென்று விடுவதும், இரத்த சோகையைக் கடைசி வரை சரிசெய்து கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளாமலும், சிக்கலில் மாட்டிக்கொண்டு கடைசி நேரத்தில் எங்காவது ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேண்ட் அப் ஆவதும் சமயங்களில் ஆங்காங்கே நடப்பதும் உண்டு.

இந்தப் பெண்ணைப் பொறுத்தவரை குறைமாத, குறைஎடைக்கு காரணம் ரத்தசோகை அல்லது நஞ்சுக்கொடியில் ரத்தம் பற்றாக்குறை – இவற்றில் ஏதாவதொன்று இருந்திருக்கலாம் என யூகிக்கிறேன். பொதுவாக இதுமாதிரியான தொந்தரவுகள் மிகச்சிறு வயது – அதாவது adolescent pregnanciesஇல் வரக்கூடிய எதிர்பார்க்கக் கூடிய ஒரு பிரச்சினைகளாகும். இந்தப் பெண்ணின் வயதையும் கணக்கில் எடுத்துப் பார்த்தல் நலம். (அடுத்த குழந்தை குறை எடை குறைமாதமாகப் பிறக்காமலிருக்க வேண்டி மட்டுமே இந்தக் கருத்தைப் பகிர்கிறேன்)

இதில் தவறு எங்கேனும் இருந்திருக்கக் கூடுமாயின் … அந்தக் குழந்தை இறந்துவிட்டதாக முன்பே அறியாததும் பகிராததும் ஒன்றுதான்.

இதற்கும் காரணமுண்டு.
இதுமாதிரி நேரங்களில் கருப்பை சுருங்கி விரியும் சத்தம் uterine contractions , குழந்தையின் இதயத் துடிப்பென fetal heart sound தவறுதலாக உணரப்பட்டுவிடும் சந்தர்ப்பங்களுண்டு.
பனிக்குட நீரின் வாடை, இரத்தம் கலந்த நிறம், இவையும் கருப்பையிலேயே இறந்து அழுகும் நிலையில் உள்ள (macerated baby) குழந்தையை உணர்த்திவிடும். ஆனால் இதெல்லாம் வெகு அபூர்வமாக நிகழும் நிகழ்வென்பதால் அனுபவமுள்ள மருத்துவர்கள் செவிலியர்களுக்குமே கூட சிரமமாக இருக்கும்.

தானாக expel ஆகி வெளியே வரும் குழந்தையின் தலையைத் தொட்டதும், ரத்த ஓட்டம் இல்லாத தலை மிக எளிதாக வந்துவிட்டிருக்கிறது.

நிலையை யூகிக்க முடிக்கிற‌ எனக்குமேகூட தலையில்லாத சிசுவின் உடலைப் பார்க்கையில் பகீர் என்கையில், அறியாத மக்கள் இந்தச் செய்தியில் பதறுவதில் தவறேதும் இல்லைதான். என்றாலும் மீடியாக்கள் விஷயமறியாத மக்களுக்கு உண்மைத் தகவல்களை அதற்கான அதிகாரிகள் மூலமாகக் கேட்டறிந்து பரிமாற மனமுவந்து முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத் துறை சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. வட இந்திய அதிகாரிகள் வந்தாலுமே மூக்கில் விரல் வைத்து அதிசயிக்கும் அளவுக்கு மிகச்சிறப்பாக இயங்குகிறது. எந்தப் பிரச்சினையையும் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டுதான் கண்காணிக்கிறது தமிழகச் சுகாதாரத் துறை.

அப்படி இருக்கையில், தாய் / சேய் இறப்பு அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. உலக அளவில் உற்றுநோக்கப்படும் விஷயம் இது. ஒவ்வொரு டெத் ஆடிட் மீட்டிங்கும் அனல் பறக்கும் விவாதங் களோடு அலசி ஆராயும். ஒருவேளை தவறு யார்மீதேனும் இருப்பது தெரிந்தால் தவறிழைத்தவர் கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைகள் பாயும். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்காகவும் குடும்பத்தினருக்காகவும் மிகவும் வருந்துகிறேன். அந்தப் பெண் உடல்நலம் தேறி வரவும் தகுந்த இடைவெளியில் அடுத்த முறை நல்லவிதமாக பிரசவித்து மழலைச்செல்வம் பெற்று மகிழ்வோடு வாழவும் மனதார வாழ்த்துகிறேன் !

அரசின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைப்போம்… தவறான தகவல்களைப் பரப்பாதிருப்போம்
(இந்த விஷயம்தான் என்றில்லை; பொதுவாக தகவல்தொடர்பு வளர்ந்து விட்டது என்பதற்காகவே தவறான தகவல்களைப் பகிர்ந்து மக்களை எந்நேரமும் பதட்டத்தில் வைத்திருக்க நினைக்காதிருப்போம்)!!

இதைப் பகிரலாமா வேண்டாமா என்கிற பெரும் தயக்கத்துடன் இருந்தேன். Shahjahan R அண்ணாவும் சொன்னதால் ஒரு புரிதலுக்காக மட்டுமே பகிர்ந்திருக்கிறேன்; யாருக்குமான தனிப்பட்ட சார்போ எதிர்ப்போ இல்லை…

ஒவ்வொன்றாக எல்லாவற்றிலும் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வது வாழ்க்கையையே சூன்யமாக்கிவிடும்.

ஷாஜஹான் with  Dr. ரேவதி