ஆபீஸ் போறவங்களில் 40 சதவீதம் பேருக்கு டயாபட்டீஸ் நோய்!
உலக அளவில் இன்றைய நிலவரப்படி டயாபட்டீஸ் என்ன்னும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது. அதாவது, 6. 5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2035-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10. 9 கோடியைத் தாண்டக்கூடும் என்கின்றன பல ஆய்வுகள். அப்படிப் பார்த்தால் நம்மில், 5 ல் ஒருவர் நீரிழிவு நோயாளியாக இருப்பார் என்று முன்னரே எச்சரிக்கை வந்து விட்டது..
இதனிடையே இன்று (நவம்பர் 14) சர்வதேச ‘நீரிழிவு நோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது கணைய நீரை (Insulin) இணைந்து கண்டுபிடித்தவரும் அதை முதன் முதலில் மனிதர்களுக்குப் பயன்படுத்தியவருமான சர் பிரட்ரிக் பேண்டிங் (Sir Frederick Banting) என்பவரின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் நாள் சர்வதேச நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி சென்னையில் நீரிழிவு நோயாளிகள் குறித்த ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் நம்ம சிங்கார சென்னையைப் பொறுத்தவரை அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஊழியர்களில் 40 சதவீதம் பேர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் 2ஆவது ரக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நீரிழிவு நோயைக் கண்டறிய ‘எச்பி.ஏ.சி’ என்ற பரிசோதனை மூலம் 3 மாத காலம் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கண்டறிய முடியும். மன அழுத்தம் காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. 2ஆவது ரக நீரிழிவு நோய்க்கு மன அழுத்தமே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால்தான் அலுவலகங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச அளவில் 199 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 2040ஆம் ஆண்டில் இது 313 மில்லியனாக இருக்கும் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் உள்ளோருக்கு 10 சதவிகிதம் கூடுதலாக மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நோயால் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படுவதும், குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதும் அதிகரித்துவருகிறது. அத்துடன் நீரிழிவினால் கண் மற்றும் சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய் கண் விழித்திரையை அழித்துப் பார்வையை பறிக்கிறது. இந்தியாவில் இத்தகைய நோயினால் 21.7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயைத் தொடக்க காலத்திலேயே கண்டுபிடித்தால் கண்பார்வை பறிபோவதைத் தடுக்க முடியும். உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சிகரெட் பிடிப்பது, ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்களும் நீரிழிவினால் ஏற்படுகின்றன. எனவே உடல் பரிசோதனை அவசியம் என்றும் டாக்டர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்.