மிஸ்டர் கூல் தோனி டென்ஷன் ஆனதால் அபராதம்!

விளையாட்டுகளில் அதிக வியாபார நோக்கம் கொண்ட போட்டிகளில் ஒன்று ஐபிஎல். இந்தனிடையே ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நடுவரிடம் வாக்குவாதம் செய்த மிஸ்டர் கூல் என்று பெயரெடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்பூரில் நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப்ப பெற்றது.

இந்த போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தை ஜடேஜா ஆப்-சைடில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 2-வது பந்து நோபாலாக வீசப்பட்டதால், அதில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். ப்ரீஹிட்டாக வீசப்பட்ட அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் சேர்த்தார். யார்கராக வீசப்பட்ட 3-வது பந்தில் தோனி க்ளீன் போல்டாகி 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சான்ட்னர் 4-வது பந்தை எதிர்கொண்டார். இந்த பந்து பேட்ஸ்மேனின் தோள்பட்டைக்கு மேல் சென்றது அதற்கு ஸ்ட்ரெய்ட் அம்பயர் , நோ-பால் அளித்தார். ஆனால், ஸ்டிரைட் அம்பயர் நோபாலை ரத்து செய்தார் லெக்அம்பயர். நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு, இறுதியில் நோபால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இதில் 2 ரன்கள் மட்டுமே சான்ட்னர் எடுத்தார்.

ஆனால், இந்த தோள்பட்டைக்கு மேலே பந்துவீசப்பட்டும் நோபால் தராததால், மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, மைதானத்துக்குள் வந்து நோ-பாலை ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களிடம் தோனி வாதிட்டார். உடன் பென் ஸ்டோக்ஸும் பேச, அந்த இடத்தில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு முன் தோனி இதுபோல் உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்கள் பார்த்து இல்லை என்பதால் புதிதாக இருந்தது. ஆனால், நடுவர்கள் நோ-பால் தர மறுத்துவிட்டதால், தோனி கோபத்துடன் வெளியேறினார்.

கிரிக்கெட்டில் மிகவும் ஒழுக்கமான கேப்டன், ஸ்பிரிட் ஆப் தி கேம் எனும் வார்த்தைக்கு உதாரணமாக தோனி திகழ்கிறார் என்று பாராட்டப்பட்டு வந்தது, நடுவரின் தீர்ப்பை எப்போதும் மதிக்கும் தோனி, அதற்கு மாறாக இதற்கு முன் நடந்த போட்டிகளில் வாதிட்டது இல்லை. முதல் முறையாக தோனி ஆட்டமிழந்தபின், களத்துக்குள் வந்து நடுவர்களிடம் வாதிட்டது விவாதப்பொருளாகி இருக்கிறது.

சிஎஸ்கே கேப்டன் தோனி, நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தது ஐபிஎல் விதிமுறைகளின்படி லெவல்-2 குற்றமாகும். கிரிக்கெட்டின் விளையாட்டின் தார்மீக ஒழுக்கத்தை மீறியதாகும். ஆதலால், போட்டியின் ஊதியத்தில் இருந்து தோனிக்கு 50 சதவீதம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டது.