October 5, 2022

சசிகலா இனி முன்னாள் சகோதரி! – திவாகரன் ஆவேசப் பேட்டி!

ஜெ. தோழியும் சிறைவாசியுமான சசிகலாவின் குடும்பத்தில் அவரது சகோதரர் திவாகரனுக்கும், டி.டி.வி. தினகர னுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை நெருங்கி உள்ளது.ஆர். கே. நகர் தேர்தலில் வெற்ரி அடைந்த பின்னர் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியது குறித்து எங்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசிக்கவில்லை. மேலும் தினகரன் தன்னிச்சையாகவே செயல்படுகிறார் என்று திவாகரன் பரபரப்பு குற்றச் சாட்டு கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “தற்போது திவாகரன் உடல்நலக்குறைவால் உளறிக் கொண்டு இருக்கிறார். இதை யாரும் பெரிது படுத்த வேண்டாம்” என்று தினகரன் கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே மோதல் விஸ்வரூபமெடுத்ததால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த மாதம் 29-ந் தேதி மன்னார்குடியில் திவாகரன் ‘அம்மா அணி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். தன் புதிய கட்சிக்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்க போவதாகவும், சென்னை, மன்னார் குடியில் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் என்று தெரிவித்தார். திடீரென்று உருவான திவாகரனின் புது கட்சி அறிவிப்பு குறித்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது.. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா தனது வக்கீல் செந்தூர் பாண்டியன் மூலம் திவாகரனுக்கு ஒரு நோட்டீசை அனுப்பினார். அதில் சசிகலா பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்றும் எனது அக்கா, என் உடன்பிறந்த சகோதரி எனும் உரிமையை கோரி சசிகலாவை பற்றி ஊடகங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அம்மா அணி தலைமை ஒருங்கி ணைப்பார் திவாகரன் மன்னார்குடியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் புதுக் கட்சி அலுவலத்தில் அம்மா அணிக்கு என்று வைக்கப்பட்டிருந்த பலகையில் வைக்கப்பட்டிருந்த சசிகலா படத்தை எடுத்துவிட்டனர். கட்சி அலுவலகத்திலும் சசிகலா படம் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது,“புரட்சித் தலைவி அம்மாவின் குறிக்கோள் வீணாகிவிடக் கூடாது. எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா பெயரில் தமிழகம் முழுவதும் கட்சி, மன்றம் எனப் பலர் தொடங்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கம். எங்கள் அம்மா அணியில் உள்ள சில தொண்டர்கள் சசிகலாவின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி விளம்பரம் செய்து வந்தனர். இப்போது அவர்களே புரிந்துகொண்டிருப்பர். இனி எங்கள் அணியில் சசிகலாவின் பெயர் புகைப்படங்கள் இருக்காது. எங்களுக்கு அண்ணா, தலைவர், அம்மா பெயர் மட்டும் போதும் அதை வைத்து நாங்கள் எங்களின் அணியை நிலை நிறுத்துவோம்.

எனக்கு மன நலம் சரியில்லை என்று என் மீது உள்ள ஆதங்கத்தில் தினகரன் கூறி உள்ளார். யாரும் பிறக்கும்போது பதவியுடன் பிறப்பதில்லை. எனக்கு மனநிலை சரியில்லை என்று சொல்வது கையாலாகாதத்தனம்; மனநிலை சரியில்லாத எனக்கு ஏன் நோட்டீஸ் கொடுத்தார்கள்.. தினகரன், தான்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று பகல் கனவு கண்டு மனநோய்க்கு ஆளாகிவிட்டார். அவர்களைப்போல் இல்லாமல் எங்களின் முதல் பிரச்னை காவிரி. அதற்குத் தொடர்ந்து போராடுவோம் குரல் கொடுப்போம்.

இதே அம்மா ஜெயலலிதா உயிரை காப்பாற்றியது யார் என்பது பழைய ஆட்களுக்கு தெரியும். போலீசால் திட்டமிட்டு தாக்கப் பட்டபோது என் நெஞ்சில் சாய்து கிடந்தார் ஜெயலலிதா. அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு அவரது உயிரை காப்பாற்றியது இந்த திவாகரன்.

சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி. தினகரன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார். முன்னதாக சசிகலா, ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இடையே மறைமுகமா கவும் நேரடியாகவும் பிரச்னையை ஏற்படுத்தினார். இப்போது எனக்கும் என் முன்னாள் சகோதரி சசிகலாவுக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தி என் வாயிலிருந்தே சசிகலாவை பற்றி அவதூறாகப் பேச வைத்து அவரின் புகழுக்கு என் மூலம் களங்கம் விளைவிக்க நினைகிறார். நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். இனி சசிகலாவிடம் பேசமாட்டேன். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். அரசியல் ரீதியாக மட்டுமே அவரைப் பற்றிப் பேசுவேன். இன்னும் தேர்தல் காலங்களில் கடுமையாக விமர்சனம் செய்வேன் மற்றபடி தனிப்பட்ட முறையில் அவரைச் சந்திக்கப்போவதுமில்லை அவரைப் பற்றிப் பேசப்போவதுமில்லை.

இதே சசிகலா எங்களுடன் இருந்ததால் மன்னார்குடி மாஃபியா என்று சொல்லுவார்கள். இனி அந்த அவப்பெயர் எங்களுக்கு வராது. சசிகலாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. எனக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளது. அம்மா அணி என்ற பெயரில் தொடர்ந்து செயல்படுவோம். கூட்டணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வோம்”என்று தெரிவித்தார்