டி.டி.வி. தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம்! – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

டி.டி.வி. தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம்! – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

தமிழக அரசியலில் தனி ஒருவன் என்ற பெயரெடுத்துள்ள   டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை  இடைத் தேர்தலில் அ.ம.மு.க.விற்கு ஒரு பொது சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக இப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 15-ந் தேதியன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்ததுடன், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் வழக்கின் மீதான விசாரணையை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. தினகரன் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி, தங்கள் தரப்புக்கு பொதுச்சின்னமான குக்கர் சின்னம் ஒதுக்கத்தான் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும், வேட்பு மனு தாக்கல் நிறைவடையவுள்ளதால் இதுகுறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி, கோர்ட்டில் ஆஜராகி இருந்த தேர்தல் கமிஷன் அதிகாரி யிடம் ஏற்கனவே உத்தரவிட்டபடி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஹோலி விடுமுறை இருந்ததால் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று பதிலளிக்கப்பட்டது. இதற்கு தலைமை நீதிபதி, கோர்ட்டுக்குத்தான் விடுமுறை. உங்களுக்கு என்ன? பொதுச்சின்னம் அடங்கிய பட்டியலை கூட கொண்டு வரவில்லை. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டு இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி, காலை இந்த வழக்கில் விசாரணையை துவங்கிய தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் , தினகரன் தனிநபர் அல்ல, அவருக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. கட்சியை பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. தினகரனுக்கு பொதுவான சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும். தனியாக கட்சியை பதிவு செய்தால், இரட்டை இலை சின்னத்தை கோருவதற்கான தகுதியை விட்டுக் கொடுக்க நேரிடும் என வாதிட்டார்.

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் அல்லது பொதுவான ஒரு சின்னம் ஒதுக்க ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பதிவு செய்யாத ஒரு கட்சிக்கு பொது சின்னம் எப்படி வழங்க முடியும்? என வாதிடப்பட்டது. அ.ம.மு.க.வுக்கு பொதுவான ஒரு சின்னத்தை ஏன் ஒதுக்கக் கூடாது? -தேர்தல் ஆணையத்திற்கு தலைமை நீதிபதி கேள்வி விடுத்தார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தினகரனின் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுப்பு தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை  இடைத் தேர்தலில் பொது சின்னத்தை வழங்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல் வாழ்வு கேள்விக் குறியாகி விடும் என்றும்  நீதிபதி கூறினார்.

error: Content is protected !!