தனுசு ராசி நேயர்களே – விமர்சனம் !

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம் !

நம்ம ரவிநாக் ஆந்தை ரிப்போர்ட்டரில் ஒரு முறை விரிவாக எழுதிய காதல் என்றால் என்ன? என்ற தத்து பித்துவில் ’பார்த்ததும் காதல், பழகிய பின் காதல், நட்பின் அடிப்படையில் காதல், திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்கு பின் காதல், கள்ளக்காதல், ஒரு தலைக் காதல் என பல வகை காதல் உண்டு என்று சொல்லி அனைத்தையும்  வெவரமா விளக்கி இருப்பார். அந்த விவரமான வரிசையில் இடம் பெறாத ஜோசியம் பார்த்து காதல், காதலுக்கு அப்பாலும் காதல் என்ற இரண்டு புது விஷயங்களை இன்றைய இளைஞ, இளைஞிகளின் போக்கை வைத்து சுவைபட விவரித்திருப்பதே ‘தனுசு ராசி நேயர்களே’ படம்.

அதாவது நாயகன் அர்ஜுன் (ஹரீஷ் கல்யாண்) சின்ன வயசாக இருக்கும் போதே அவனது அப்பா இறந்து போய் விடுகிறார். அதை அடுத்து அவன் அம்மாவுக்கு நடக்கும் தாலியறுப்பு சடங்கைப் பார்த்து அதிர்ந்து போய் தாத்தாவிடம் விபரம் கேட்கிறான். அதற்கு தாத்தா திருமண நேரத்தில் அப்பா ஜாதகத்தில் தோஷம் இருந்ததாகவும், அதற்கு உரிய பரிகாரம் செய்யாமல் திருமணம் செய்ததால்தான் இப்படி திடீர்னு செத்துட்டார் என்று தாத்தா சொல்லி அவனது மனதில் கடவுள் நம்பிக்கையையும் தாண்டி விதி மற்றும் ஜாதக நம்பிக்கையை விதைத்து விடுகிறார், அந்த விதை விஷ விருட்சமாகி நடமாடும் நவகிரகமாகி போகிறான். இச்சூழலில் அவனிடம் வேற்று மொழி பேசும் கன்னி ராசிப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர் ஒருவர் (பாண்டியராஜ்) சொல்லி விடுகிறார். அதை நம்பி தன் கண்ணில் படும் பெண்களிடம் எல்லாம் நீங்க என்ன ராசி? என்று அர்ஜுன் கேட்கத் தொடங்கி விடுவதால் தனி மரமாகவே வாழ்க்கை தொடர் கிறார். இச்சூழலில் நாயகி கே.ஆர்.விஜயா (டிகங்கனா சூர்யவன்ஷி) இவன் வாழ்க்கையில் ஏழரையாகக் குறுக்கிட்டு வாழ்க்கையை பங்கிட்டு, அதனால் குழம்பிட்டு ஏதேதோ சொல்லி பிரிந்தும் போய் விடுகிறார். அது ஏன்? அப்புறம் என்னாச்சு என்பதைத் தான் தனுசு ராசி நேயர்களே திரைப்படத்தின் கதை என்று சொன்னால் நம்போணும்.

படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் லவ்வர் பாயாக படம் முழுக்க தன் கேரக்டரை அனுபவித்து பிரமாதமாக நடித்திருக்கிறார். காதல், சென்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். நாயகி டிகங்கனா, சைல்ட் ஆர்டிஸ்டாக நடித்தே பல விருதுகள் வாங்கியவராச்சே. காதல், கவர்ச்சி ஆட்டம் என அனைத்திலும் டபுள் புரொமோசன் வாங்குகிறார். மற்றொரு ஹீரோயினான ரெபா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். பெரியார் & பிரியாணி பிரியராக முனீஸ்காந்த், ஜோதிடராக வரும் பாண்டியராஜன், மயில்சாமி ஆகியோர் ஓ.கே. ஆனால் பெரும்பாலான இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதுதான் சோகம்.

யோகிபாபுவும் இருக்கிறார். ஆனால் இதில் அவர் கதை சொல்லி மட்டுமே. ஜிப்ரான் இசை மோச மில்லை. பாடல்கள் தியேட்டரில் பார்க்கும் போது ரசிக்கவே வைக்கின்றன. பி.கே.வர்மா ஒளிப் பதிவால் படமே தனி கவனம் பெறுகிறது. வசனக்கர்த்தா பொன் பார்த்திபனால் ஒட்டு மொத்த படம் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறது. குறிப்பாக டிங்கனா தன் லட்சியம் முக்கியம் ஆனாலும் காதலை மறக்க முடியவில்லை என்று நீண்ட விளக்கம் சொல்லி பிரியும் போது தியேட்டரே மவுன அஞ்சலி செலுத்துகிறது.

மேலும் கிளைமாக்சில் தான் ஜோதிட பித்தனாக்கியதன் காரணத்தை அம்மாவின் மடியில் தலை யை  வைத்தப்படி கேட்டு தெளிவுப்பட்டு கொள்ளும் காட்சியும் சபாஷ் சொல்ல வைத்து விட்டது. இப்படி சில பல உண்மையான, நியாயமான, நாட்டு நடப்பான, பலமான விஷயங்களை மிகச் சரியாக கையாண்ட டைரக்டர் அடிக்கடி சரக்கு அடிக்கும் காட்சியை திணித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் இந்த தனுசு ராசி – சகல ராசிக்காரர்களுக்கும் பொழுதை போக்கும் படம்தான். அத்து டன் இதுதான் 2 கே லைப் ஸ்டைல் என்பதை பக்காவாக பதிவு செய்துள்ளார் புது இயக்குநர் சஞ்சய் பாரதி

மார்க் 3.25 / 5

error: Content is protected !!