மாறன் – விமர்சனம்!

மாறன் – விமர்சனம்!

த்யஜித்ரே சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது : சினிமா என்பது கூர்வாள் -அதை சவரக் கத்தி போல் உபயோகிக்கக் கூடாது. ஆனால் நம் துர்ரதிர்ஷடம் கூர்வாளுக்கும், சவர கத்திக்குமான வித்தியாசமே தெரியாத இயக்குநர் மற்றும் நடிகர்களை அதிகம் உருவாக்கி கொண்டிப்பதுதான். கொஞ்சம் காதல், சென்டிமென்ட், திடீர் திருப்பம்,  தக்கணூண்டு நகைச்சுவை, தலையை ஆட்ட வைக்கும் பாடல்கள், ஒன்றிரண்டு சண்டைகள் இப்படி நிறைய இருந்தால் அது படம். அதுதான் சினிமா என்கிற எண்ணம்தான், அடுத்தடுத்து சினிமாவை நோக்கி வரும் அத்தனை இளைஞர்கள் மனதிலும் மிக ஆழமாக பதிந்திருக்கும் எண்ணம். கூடவே நாயகனுக்கு நேரும் அநீதியை அவனே கண்டுணர்ந்து காளியாட்டம் ஆடுவது என்ற ஃபார்முலா..- இப்படி சில குறுகிய எண்ணங்களால் நம் தமிழ் சினிமா தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் போக்கும் நடக்கிறது.. அப்படி செய்து கொண்ட படம்தான் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் (நல்ல வேளையாக) ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கும் படம்.‘மாறன்’.இந்த படம் ஒரு யோக்கியமான பத்திரிகையாளன் வாழ்வில் நடக்கும் துன்பியல் சம்பவங்கள் என்று சொன்னாலே போதும் – மேற்கொண்டு விமர்சனத்தைக் கூட படிக்காமல் வேறு ரிப்போர்ட்டிங் பக்கம் போய் விடுவீர்கள்..ஆனால் இதையும் சில கோடி முதலீட்டில் தயாரிக்க ஒரு புரொடக்‌ஷன் கம்பெனியும் அதையும் சில கோடி கொடுத்து வாங்கி வெளியிட ஒரு ஓடிடி தளமிருக்கும் வரை இந்த தமிழ் சினிமா உருப்பட வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது .

போகட்டும்.. இந்த மாறன் படக் கதை என்னவென்று கேட்டால் ரொம்ப யோக்கியமான பத்திரிகையாளராக இருந்ததால் கொலை செய்யப்பட்டவரின் மகனான ஹீரோ தனுஷூம் ரொம்ப நல்ல ஊடகவாசியாக வாழ்ந்து வருகிறார். அந்த தனுஷ் முன்னாள் அமைச்சர் (சமுத்திரகனி) ஒருவர் தேர்தலில் வெற்றி பெற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊழல் செய்வதை கண்டறிந்து அம்பலப்படுத்துகிறார். அதை அடுத்து தனுஷ் ஆசைத் தங்கையான ஸ்மிருதி வெங்கட் கடத்தப்பட்டு உயிரோடு எரித்து கொலை செய்யப்படுகிறார். தனுஷுக்கு சமுத்திரக்கனி மேல் சந்தேகம் ஏற்பட அவரே துப்பு துலக்கும் போது.நடக்கும் ட்விட்ஸ்தான் மாறன் படம்..

கோலிவுட்டை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை போய் விட்ட தனுஷ் இந்த படம் முழுக்க உப்புக்கு சப்பாணி லெவலில் எல்லா காட்சிகளையும் அளவாகச் செய்து கடந்து போய் விடுகிறார். வழக்கமான ஹீரோயினாக வரும் மாளவிகா மோகன் இப்படத்துக்கு பிறகு “ பபிள்கம் மாளவிகா” என்று பெயரெடுக்க ஆசைப்பட்டு விட்டார் போலும்.. தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் வழக்கமான தங்க ரோல்தான் என்றாலும் ஒட்டு மொத்த படத்தில் டாப் மார்க் வாங்குகிறார் . அரசியல்வாதி சமுத்திரக்கனி, தாய்மாமா ஆடுகளம் நரேன், தந்தை ராம்கி ஆகியோர் தங்கள் பங்களிப்பை நிறைவாகச் செய்திருகிறார்கள். அமீர் கேரக்டர் ஸ்மைலியை வரவைக்கிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார். சில இடங்களில் மட்டும் பின்னணி இசை ஓ கே ரகம். விவேக் ஆனந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு பர்பெக்ட்

இயக்குநர் தன் ஆரம்பக் கால படங்களில் காட்டிய அக்கறையை இந்த மாறன் மீது காட்டாததால் டோட்டல் வேஸ்ட் லிஸ்டில் இணைய வாய்ப்பிருக்கிறது.. ஆனால் சுதாரிக்கலாம்.. அவ்வளவுதான் சொல்ல முடியும்

மொத்தத்தில் மாறன் – ஏமாற்றிப்புட்டான்

மார்க் 2 / 5
error: Content is protected !!