கொடி! – பார்க்க நல்லாத்தான் இருக்குது- ஆனா பறக்கணுமே!?

கொடி! – பார்க்க நல்லாத்தான்  இருக்குது- ஆனா பறக்கணுமே!?

தனுஷின் முதல் இரட்டைவேடப்படம், இரண்டாவது அரசியல் படம் இந்த கொடி. பல அரசியல் படங்கள் வந்திருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் கொடி. இயக்குனர் படம் பார்ப்பவர்களை முதல் இரண்டு நிமிடத்திலேயே கதைக்குள் இழுத்து விடுகிறார். கட்சிக்காக உழைக்கும் வாய் பேசாத அடிமட்டத் தொண்டன் கருணாஸ், அவரின் மனைவி சரண்யா. இரட்டைக் குழந்தைகள் பிறக்க ஒருவனை எப்படியாவது அரசியல்வாதியாக்கி தன்னால் முடியாமல்போன அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படும் கருணாஸ்….ஒருகட்டத்தில் தன் மூத்த மகன் கொடியின் கண்முன்னே பாதரச ஆலை பிரச்சினைக்காக தீக்குளிக்கிறார்.

kodi rev oct 30

கணவனை இழந்த சரண்யா அரசியல் வேண்டாமென சொல்ல கொடி அரசியலே வாழ்க்கை என தொடர்கிறான். எதிர்க்கட்சியில் கொடி வயதை ஒத்த துர்காவும் அரசியலில் நல்ல பேச்சாளராகி தீப்பொறியாய் மிளிர்கிறாள். கொடியும் துர்காவும் வேறு வேறு கட்சிக்கு பாடுபட்டாலும் காதலால் இணைகிறார்கள். அதே வேளை கொடியின் தம்பி அரசியலே வேண்டாம் என்று கல்லூரியில் புரபசராக தொடர முட்டை விற்கும் பெண்ணுடனான இன்னொரு டிராக் காதல்.

முரட்டு வாலிபனான கொடி அரசியலில் நல்லவன். ஒரு கட்டத்தில் சில சொந்தக்கட்சி உறுப்பினர்களை எண்ணத்தை தாண்டி தனக்கு கொடி என பெயர் வாய்த்த கட்சி தலைவரின் (எஸ்ஏ சந்திரசேகர்) மனதைப்பிடிக்கிறார். இடைத்தேர்தலுக்கும் நிற்கிறார். எதிர்க்கட்சியில் துர்காவின் சாமார்த்திய சாணாக்கிய அரசியலால் அவளும் கொடிக்கு எதிராக தேர்தலில் நிற்க, இவர்களின் அரசியலைத்தாண்டி திருட்டுத்தனமாய் காதலும் வளர்கிறது. ஒரு கட்டத்தில் துர்கா தன் பதவிக்காக எதையும் செய்ய துணிகிறாள். அதற்குப்பின் கொடியின் தம்பி அன்பு என்ன செய்கிறான், கொடியை கொன்றவர்களை கண்டுப்பிடித்தானா என்பதை சொல்லும் மீதிப்படமே கொடி.

முதலில் இந்தப்படம் ஜனரஞ்சகப்படமல்ல. முதல்பாதியில் காதல், கொஞ்சம் காமெடி என நகர்ந்தாலும் இரண்டாவது பாதியின் தூறு சத அரசியல் காட்சிகளால் குழந்தைகள், தாய்மார்கள் எந்த அளவுக்கு இந்தப்படத்தை விரும்புவார்கள் என்பது கேள்விக்குறியே. ஆனால் நீண்ட வருடங்களுக்குப்பிறகு வரும் முழுக்க முழுக்க அரசியல் படம். சஸ்பென்ஸ், வஞ்சகம், போட்டி, ஈகோ, அன்பு, காதல் கூடவே இரண்டு பலமான டிவிஸ்ட் என எல்லாமே கலந்து இழுக்கும் படம்.

படத்தில் இரண்டு கேரக்டர்களுக்கும் நன்றாகவே வித்தியாசம் காட்டியிருக்கிறார் தனுஷ். தாடியுடன் கொடியாகவும், பயந்த சுபாவம் கொன்ட அன்புவாகவும் நன்றாகவே செய்திருக்கிறார். முந்தைய மூன்று படங்களின் தோல்விகளுக்குப் பின் யோசித்து இந்தக்கதையை தேர்ந்தெடுத்திருப்பார் என நினைத்தாலும் படம் இன்னும் கொஞ்சம் கமர்ஷியலாக இருந்திருக்கலாம் என ஆடியன்ஸ் நினைப்பது இயல்பு.

தீப்பொறி துர்காவாக திரிஷா, யப்பா…தனுஷுக்கு ஈடுகொடுக்கும் நடிப்பு. காதலில் திளைப்பதும், கொடிக்காக எதையும் செய்ய தயாராக இருந்தாலும் அரசியல் பதியவி என்கிற போது ருதரதாண்டவமாடிவிடுகிறாள். கீழ் மட்டத்திலிருந்து கட்சியில் முக்கிய பதவிக்கு வரும் பெண்ணாய் பல அரசியல் பெண் தலைவர்களை கண்முன் கொண்டுவருகிறாள். காதல் காட்சிகளில் தனுஷுடன் காட்டியிருக்கும் நெருக்கம் கொஞ்சம் நெளியவைத்தாலும் திரிஷாவுக்கு வருடங்கள் ஆக ஆக வயது குறைந்துக்கொண்டே வருவது ஆச்சர்யம். ஆனாலும் பொதுவாக அரசியல் படங்களில் காட்டும் ரஃப் அண்டு டஃப் மற்றும் செக்ஸி சமாச்சாரம் திரிஷாவிடம் மிஸ்ஸிங்.

சரண்யா வழக்கம்போல் மிடில்கிளாஸ் அம்மாவாக பாதிப்படத்தில் அழுதுக்கொண்டே, அரசியல் கட்சி தலைவராச எஸ்ஏ சந்திரசேகர் சிறப்பாகவே செய்திருக்கிறார். காளி வெங்கட் கொடியின் உயிர் நண்பராக நடித்து கைத்தட்டல்களை அள்ளுகிறார். சமீபத்து படங்களில் சொல்லுக்கொள்ளும்படியான குணச்சித்திர நடிப்பு இவருடையதே.

துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் முழுக்க முழுக்க அரசியல் படமாக எடுத்திருப்பதில் எந்தக்குறையும் இல்லை ஆனால் எல்லா ரசிகர்களை கவருமா என்பது சந்தேகமே. இசையில் சந்தோஷ் நாராயணன் இரண்டு பாடல்களில் மிளிர்கிறார். ஆனால் பின்னணி இசையில் சொல்லிக்கொள்ளும்படியான தீம் மியூசிக் இல்லை. சீரியசான அரசியல் காட்சிகளில் இசை பாராட்டும்படியாக இல்லை. சாதாரண கேமரா கோணங்கள், மிகச்சாதாரணமான ஒலிப்பதிவு படத்திற்கு மைனஸ்.

கொடி தமிழில் வந்த அரசியல் படங்களில் சிறப்பான ஒன்றாய் நிச்சயம் பறக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கமர்ஷியலாய் பாக்ஸ் ஆபீஸில் பறக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும். கொடி – தீபாவளிக்கு வந்த அரசியல் வெடி. ஆயிரம் வாலா இல்லையெனினும் நிச்சயம் வெடிக்கும் டபுள் டக்கர் லட்சுமி வெடி!!!

கோகுல்

error: Content is protected !!