புயல் வரப் போகுது.. மழை வரப் போகுது! -புயலும், மழையும் ஒண்ணா வரப் போகுது!

புயல் வரப் போகுது.. மழை வரப் போகுது! -புயலும், மழையும் ஒண்ணா வரப் போகுது!

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்யுமா? பெய்யாதா? என்ற ஏக்கத்தில் தமிழக மக்கள் இருக்கின்றனர். 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வறட்சி இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் வேறு பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதேபோல் 100 ஆண்டில் இல்லாத சோதனை ஒன்றை நாம் கடந்த ஆண்டிலேயே சந்தித்தோம். அந்த அளவுக்கு பேய் மழை கொட்டித் தீர்த்தது. வீடுகளை சூழ்ந்திருந்த வெள்ளத்தில் சிக்கி, மக்கள் தவியாய் தவித்தனர். அன்றைக்கு மழை இதோடு நிற்காதா? என்று எண்ணிய மக்கள், இன்றைக்கு மழை பெய்யாதா? என்று ஏங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

weather nov 30

இந்நிலையில் சென்னைக்கு தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது சென்னையில் இருந்து 1,070 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 1,030 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகர தொடங்கும்.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும்.சென்னை நோக்கி வரும் இந்த புயல் 2-ந்தேதி காலை சென்னை-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் பெரும்பாலான இடங்களில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை (வியாழக்கிழமை), நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

மேலும் கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். சில நேரங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.எனவே இன்று இரவு முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். அதே போல் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதே சமயம் திருச்சி, சேலம், கோவை, தர்மபுரி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

error: Content is protected !!