June 26, 2022

தேவராட்டம் – திரை விமர்சனம்!

உலகில் உள்ள பெண்களில் மூன்றில் இரண்டு பெண் தங்கள் வாழ்நாளில் உடலளவில் அல்லது மனதளவிலான பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்றொரு செய்தியை அண்மையில் கூட அறிந்திருக்கலாம். அதை தெரியாதவர்கள் அன்றாடம் கைக்கு வரும் நாளிதழ்களைப் புரட்டி னால் பக்கத்துக்கு இரண்டு பெண் வன்கொடுமைச் செய்டி இடம் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். இவ்வளவு ஏன் கடந்த பத்து நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பெறும் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மீதான குற்றச்சாட்டையே எடுத்துக் கொள்ளுங்களேன்.

ஆனால் இது போன்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 2016- ஆண்டு விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்ட 15,638 வழக்குகளில், 11,024 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், 4,119 வழக்குகளில் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர் கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் எத்தனை பேர் அறிவீர்கள்.. குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில் 94% வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது 2011 முதல் 2016 வரையில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,934 வழக்குகளில் 108 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் இது மேலும் குறைவாக வெறும் 1.6 சதவிதமாக இருக்கிறது. இதில் பெரும்பான்மை வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கை முறை யாக நடத்தாததுதான் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதெல்லாம் பலருக்கு தெரிந்த விஷயம்தான் என்று பலர் அசால்டாக பேசி விட்டு போய் விடும் சூழலில் இது போன்று பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவோரை எப்படி தண்டிக்க வேண்டும் என்று தன் பாணியில் ஒரு சினிமா-வாக எடுத்துக் காட்டி மிரட்டி இருக்கிறார் முத்தையா.

கதை என்னவென்றுக் கேட்டால் மதுரை டிஸ்ட்ரிக்கில் பெற்றோரை இழந்த நிலையில் ஏகப்பட்ட அக்காமார்கள் ஆதரவில் படித்து வழக்கறிஞர் (நம்போணும்) ஆனவர் வெற்றி (கௌதம் கார்த்தி) . அதே டிஸ்ட்ரிக்கில் கொடும்பாவி கணேசன் (ஃபெப்சி விஜயன்)என்ற பெயர் வைத்துக் கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை கொஞ்சமும் யோசிக்காமல் சதக்., சதக் என்று கொன்று விடும் மனு சன்(?). இந்த கொடும்பாவி கணேசனின் மகன் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு பெண் விவகாரத்தில் தலையிட நேர்ந்த போது, கணேசனின் மகனை வக்கீல் வெற்றி மதுரை எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்டில் வைத்து கொலை செய்து விடுகிறான்.அதற்கு பழிவாங்கத் துடிக்கும் கணேசன், வெற்றியின் சகோதரியையும் (வினோதினி) அவரது கணவரையும் (போஸ் வெங்கட்) கொன்றுவிடுகிறான். பிறகு என்ன நடக்கும்.. அதேதான்.அநியாயத்தைக் கண்டால் தட்டிக்கேட்கும் ஓர் இளைஞன், கொடூரமான வில்லனின் வழியில் குறுக்கிட்டால் என்ன நடக்கும் என்பதை உங்கள் வீட்டு வாண்டு கூட சொல்லி விடும்.

ஆனால், இதைத் படமாகிய விதத்தில் ஆரம்பத்தில் தனிக் கவனம் பெறுகிறார் கொம்பன்இயக்குநர் முத்தையா. தென்னகத்தின் தனிப் பெருமையை பரைச்சாற்றும் அழகர் விழாவின் காட்சிகளைக் காட்டி கவர்ந்து விடுகிறார்.அதே சமயம் போகப் போக தனது முந்தைய படங்களில் ஜஸ்ட் லைக் தட், தான் விரும்பும் ஒரு குறிப்பிட்ட ஜாதி சார்பை சுட்டிக்காட்டிய முத்தையா, இந்தப் படத்தில் ஏகப்பட்ட காட்சிகளிலும், வீடுகளில் மாட்டியிருக்கும் புகைப் படங்களிலும், கோயில் சிலைகள்  மூலமும் ஓப்பனாக குரல் கொடுத்து களமாடியிருக்கிறார். குறிப்பாக பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, ஜீவா ஆகியோரையும்கூட விட்டுவைக்கவில்லை. இந்த லிஸ்டில் நல்லகண்ணு படம் ஏன்? ன்னு விசாரிச்சா அவர் ‘அந்த ஜாதியாம்’. இதெல்லாம் டூ மச் முத்தையா!

மேலும் .‘நான் விட்டுக்கொடுத்துப் போறவன் இல்லை; வெட்டிப்புட்டுப் போறவன்’, ‘வெட்டுகுத்து எங்களுக்கு வென்னீர் வைக்கிறது மாதிரி’, ‘எதிர நின்னாலே விடமாட்டேன், எதிர்த்து நின்னா விட்டுறுவனா’, ‘மண்ணைத் தொட்டவனை விட்றலாம்; பொண்ணைத் தொட்டவன விடமாட்டேன்’ – எனப் படம் நெடுக வீர வசனத்தை அள்ளித் தெளித்தப்படியே இருக்கிறார்கள் .

இதற்கு காரணமாக படத்தில் முடிவில்.“பெண்கள் பொக்கிஷங்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்களைத் துன்புறுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல; கருவறுக்கப்பட வேண்டியவர்கள்” என்ற வாய்ஸ் ஓவர் மெசேஜூம் சொல்லி அனுப்புகிறார்கள். உண்மைதானே?!

ஆக..ஆரம்பத்தில் சொன்னது போல் மூன்றிலொரு பெண் பாதிக்கப்படும் போது அதை கணக்கியல் ரீதியாக மட்டும் அணுகும் இக்கால போக்குக்கு தேவையான படம்தான் தேவராட்டம்.

மார்க் 3 / 5