கவலை & மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம்!

கவலை & மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம்!

இப்போதெல்லாம் நாம் பலரின் முகத்தையே பார்க்க முடிவதில்லை.. பெரும்பாலானோர் அது ஆணோ, பெண்ணோ பலரும் கையில் ஒரு போனை வைத்து அதையே உற்று நோக்கியபடிதான் அமர்ந்திருக்கிறார்கள்/நடக்கிறார்கள்/ வாழ்கிறார்கள். அதையும் மீறி தென்படும் எத்தனை முகங்களில், எத்தனை முகங்களில் சிரிப்பையோ, சிறு புன்னகையையோ பார்க்க முடிகிறது? ஒவ்வொருவர் முகங்களில் ஏதோ ஒரு இறுக்கம் இருப்பதை கவனித்துள்ளீர்களா?

stress jan 26

அவர்களை விடுங்கள்.. நீங்கள் ஒரு நாளில் எத்தனை தடவை மகிழ்ச்சியாக மனம் விட்டு/ வாய் விட்டு சிரிக்கிறீர்கள்? அதே சமய,எத்தனை முறை கோபம் / பதற்றம் / பயம்/ கவலை கொள்கிறீர்கள்? ‘இவ்வுலகில் எனக்கு எந்த பிரச்னையுமே இல்லை’ எனச் சொல்லும் யாராவது ஒருவரை இதுவரை நீங்கள் சந்தித்ததுண்டா? ஆக தொந்தரவுகள், ஏமாற்றங்கள், காலக்கெடுக்கள் என எல்லாம் கலந்ததாகவே உள்ளது நம் அன்றாட வாழ்க்கை. பள்ளி செல்லும் குழந்தைகளைக் கேட்டால் படிப்பு, ஆரோக்கியமற்ற குடும்பச் சூழல், இணக்கமில்லாத சக மாணவர்கள் போன்றவை பிரச்னை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். டீன் ஏஜ் குழந்தைகளோ, பாடத்திட்டப் பளுவுடன் அவர்களின் வயதுக்குரிய விஷயங்களான காதல், தோற்றம், புரிந்து கொள்ளாத பெற்றோர், ஆசிரியர், கேலி செய்யும் நண்பர்கள் என பல்வேறு விஷயங்கள் தினம் தினம் தாக்குவதாகச் சொல்கிறார்கள்.

வேலைக்குச் செல்வோரோ அதிக வேலைப்பளு, மோசமான சூழல், குறைந்த சம்பளம், நிரந்தரமற்ற வேலை, இணக்கமற்ற மேனேஜர், சக ஊழியர்கள், சலிப்பு தட்டும் வேலைத் தன்மை, விருப்பமில்லாத வேலையைப் பார்ப்பது என பல விஷயங்கள் பிரச்னை அளிப்பதாகக் கூறுகிறார்கள்.

வெளியில் செல்கிறவர்களுக்குத்தான் இவ்வளவு பிரச்னை என்றால், வீட்டிலேயே இருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு பிரச்னை இல்லையா என்ன? புகுந்த வீட்டினருடன் சுமுக உறவு இல்லாதது, அதனால் சண்டை சச்சரவுகள், குடிகார கணவன், அனுசரித்துப் போகாத கணவன், தொந்தரவு கொடுக்கும் பிள்ளைகள், வேலைக்காரி பிரச்னை எனப் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாகச் சொல்கிறார்கள்.

முதியோர்களோ நலிந்து வரும் உடல்நலம், பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை, வீட்டுச்சூழல், போதிய பணமின்மை, தனிமை, வெறுமை, கணவன்/மனைவியின் மரணம், எப்போதும் ‘சும்மா’வே இருக்க வேண்டிய நிர்பந்தம், தங்கள் கருத்தை யாரும் மதிப்பதில்லை என்ற உறுத்தல், கடைசி காலம் குறித்த பயம் போன்றவை தொந்தரவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். பிரச்னைகளின் காரணிகள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம்… ஆனால், அந்தப் பிரச்னை களைச் சமாளிக்க முடியாமல், நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தத்துக்கு ஆளாகாதவர்களை(Stress) பார்ப்பது மிக அரிது.

பெரும்பாலும் மனஅழுத்தம் என்றாலே அது மனதுக்கும் / உடலுக்கும் ஒவ்வாத விஷயங்களாலேயே ஏற்படும் என பலர் நம்புகின்றனர். அது தவறு. Eustress எனப்படும் மன அழுத்தமானது திருமணம், குழந்தைப் பிறப்பு, வேலை மாற்றம் என வாழ்வில் நல்ல தருணங்களில் ஏற்படக் கூடியது. Distress என்பது நெருங்கியவரின் மரணம், வேலை இழப்பு, காதல் தோல்வி எனப் பல விரும்பத்தகாத சம்பவங்களால் ஏற்படுவது. இக்காலத்தில் ஆரோக்கிய வாழ்வுக்குப் பெரிய சவாலாக இருக்கும் மன அழுத்தம், நம் உயிரைக் காப்பாற்றவே உருவானது என சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்தானே?

ஆதிகாலத்தில், மனிதன் காட்டில் நடமாடும் போது, ஒரு புலி அவன் முன் திடீரெனத் தோன்றினால், அவன் அதனை எதிர்த்து போரிட வேண்டும் (Fight) அல்லது ஓட வேண்டும் (Flight ). ஆபத்திலிருந்து காப்பாற்ற நம்மை தயார் நிலையில் வைப்பதற்காக உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. நம் நரம்பு மண்டலம் புலியை பார்த்தவுடனேயே, பலவிதமான ஹார்மோன்களை (Adrenaline – Cortisol) சுரக்கச் செய்கிறது. இவை அவசர நடவடிக்கை எடுக்க வசதியாக மனிதனுக்குள் சில மாற்றங்களை செய்கின்றன.

இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
தசைகள் இறுகும்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
மூச்சு இரைக்கும்.
புலன்கள் கூர்மையாகும்.

இந்த உடல் ரீதியான மாற்றங்கள் நம்முடைய வலிமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்டி, கவனத்தை அதிகரிக்கச் செய்து, ஆபத்திலிருந்து காப்பாற்றும். மன அழுத்தத்தினால் ஏற்படும் இவ்வகை மாற்றங் கள் உடலுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து (Physical threats மிருகங்கள்/திருடர்களின் தாக்குதல், இயற்கைப் பேரழிவு, விபத்து போன்ற நிகழ்வுகள்) ஒரு மனிதனைக் காப்பாற்றவே செயல்படுகின்றன. புலியிடமிருந்து தப்பித்தவுடன் மனஅழுத்தம் குறைந்து, உடல் பழைய நிலைக்கு திரும்பி விடும். இன்றைய காலகட்டத்திலோ நம் உயிருக்கு ஏற்படும் இவ்வகை அச்சுறுத்தல்கள் குறைந்து நவீன கால பிரச்னைகளான பணத்தேவை, தேர்வு, நச்சரிக்கும் கணவன்/மனைவி, வேலைப்பளு, அலுவலகப் பிரச்னை, பிடிக்காத திருமணம்/வேலை போன்றவை அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

பல நேரங்களில், உளவியல் அச்சுறுத்தல்களை (Psychological threats) ஏற்படுத்தும் காரணிகளை விட்டு ஒருவரால் தப்பிக்க இயலாது (திருமணம், தேர்வு போன்றவை…). இப்படி அன்றாடம் ஏற்படும் உளவியல் அச்சுறுத்தல்களால், மன அழுத்த ஹார்மோன்கள் தொடர்ந்து சுரந்து கொண்டி ருக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது. இப்படித் தொடர்ந்து ஏற்படும் ரசாயனம் மற்றும் நரம்பியல் மாற்றங்களால் பல்வேறு உடல் பாகங்கள் சேதம் அடைகின்றன. இது இன்னும் பல மோசமான விளைவுகளை உடலுக்கும் மனதுக்கும் ஏற்படுத்தும் என்பதையெல்லாம் ஏற்கெனவே கண்டறிந்து சொல்லிவிட்டார்கள்.

mana-azhuthathai-viratta-enna-seyya-vendum-1050x700

தற்போது இது போன்ற கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக ஆதாரங்களை விஞ்ஞானிகள் சமர்ப்பித்துள்ளனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புற்று நோய் பாதிப்பில்லாத ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்த அளவு மன உளைச்சல் அடைந்தவர்களை விட, மன உளைச்சலால் அதிக பாதிப்படைந்தவர்களுக்கு பல வகையான புற்று நோய்களால் ஏற்படும் உயிர் ஆபத்து மூன்று பங்கு அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

குடல், விந்துப்பை , கணையம் மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றில் உண்டாகும் புற்றுநோய் ஆபத்து இவர்களுக்கு அதிகமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இது குறித்த ஒரு திட்டவட்டமான காரண இணைப்பை உருவாக்க மேலும் அதிக ஆய்வு பணி தேவைப்படுகிறது என பிஎம்ஜே என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்

Related Posts

error: Content is protected !!