தீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ!

தமிழகத்தில் தற்போது 500 கிராமங்களில் சாதியத் தீண்டாமை நடைமுறையில் இருப்பதோடு, அந்தக் கிராமங்களையும் அவை அமைந்துள்ள மாவட்டங்களையும் பட்டியலிட்டுக் கொடுத்து இருக்கிறது ஓர் ஆர்.டி.ஐ. தகவல். ‘இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்’ (Social Awareness Society for Youths) என்கிற மனித உரிமை இயக்க தலைவர் பாண்டியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘ தமிழகத்தில் சாதி ரீதியான வன்கொடுமைகள் இன்னும் நடக்கிறதெனில் எத்தனை கிராமங்களில் நடக்கிறது? அவை எந்தெந்த பகுதிகள்? எந்த மாவட்டத்தில் அதிக சாதியத் தீண்டாமை இருக்கிறது? போன்ற தகவல்களை கேட்டிருந்த போதுதான் மேற்படி பதில் வந்திருந் தது. இந்நிலையில்தான் ஆகஸ்ட் 20ஆம் தேதி குப்பனின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் உடலை எடுத்துச் சென்றபோது, அப்பகுதி ஆணவ சாதியினர் `கீழ்சாதி காரங்க உடல எங்க குடியிருப்பு வழியா எடுத்துட்டுபோககூடாது` என்று தடை விதித்திருக்கின்றனர். சுடு காட்டிற்குச் செல்ல அந்த ஒரு வழி மட்டுமே இருந்த நிலையில், செய்வதறியாமல் தவித்த தலித் மக்கள் அந்த பகுதியிலிருந்த ஒரு மேம்பாலத்தின் வழியாக உடலைத் தொட்டில் கட்டி கீழே இறக்கி அதன் பிறகு சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று உடலை அடக்கம் செய்துள்ள வீடியோ பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. .

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனிப் பகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். தமிழக-ஆந்திர மாநில எல்லையில் உள்ள இந்தப் பகுதியில் சுடுகாட்டுக்குத் தேவையான போதிய இட வசதி இல்லை. இயற்கையாக மரணிப்பவரின் சடலங்களை மட்டுமே அங்குள்ள இடத்தில் புதைக்கிறார்கள். விபத்து போன்ற அகால மரணமடைந்தோரின் உடல்களை ஊருக்கு வெளியே எரியூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஊருக்குள்ளேயே எரிமேடை இல்லாத காரணத்தினால் பாலாற்றங்கரைக்கு சடலங்களைச் சுமந்துவந்து தகனம் செய்கிறார்கள்.

இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றைக் கடப்பதற்காக அந்தப் பகுதியில் பாலம் கட்டப்பட்டது. அப்போதும், சிரமப்பட்டே பாலத்தை ஒட்டியுள்ள பாதையை சுடுகாட்டுக்குப் பயன்படுத்தி வந்தனர். பாலத்தின் இரு புறங்களிலும் பல ஏக்கரில் விவசாய நிலங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் சிலர், தங்கள் நிலங்களின் வழியாக சடலங்களை தூக்கிச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இருத்தரப்பிலும் தகராறு ஏற்பட்டதால் நிலத்தின் உரிமையாளர்கள் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டுப் பாதையை வேலி அமைத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பட்டியலின மக்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த நாராயணபுரம் காலனியைச் சேர்ந்த குப்பன் (55) என்பவரின் உடலை எரியூட்டுவதற்காக உறவினர்கள் பாலாற்றங்கரைக்கு சுமந்து சென்றனர். விவசாய நிலத்தின் உரிமையாளர்களிடம் வழி கேட்டுள்ளனர். அவர்கள் வழிவிடவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, சுமார் 20 அடி உயரமுள்ள பாலத்தின் உச்சியிலிருந்து சடலம் இருந்த பாடையை கயிறுகட்டி பாலாற்றுக்குள் இறக்கினர். தயாராக ஆற்றுக்குள் இருந்த சிலர் பாடையைப் பத்திரமாக பிடித்துச் சுமந்து சென்று தகனம் செய்தனர். இந்தச் சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிர்ந்தனர்.

இதனிடையே சவ ஊர்வலத்திலும் பட்டியலின மக்களிடம் தீண்டாமை காட்டப்படுவதாகப் புகார் எழுந்ததையடுத்து, விவகாரம் பெரிதாகி சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து, வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்தின் உத்தரவின்பேரில் வாணியம்பாடி தாசில்தார் முருகன் தலைமை யிலான வருவாய்த் துறையினர் நாராயணபுரம் காலனி மக்களைச் சந்தித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, அந்த காலனியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனந்தோப்பு என்ற பகுதியில் சடலங்களை எரியூட்டுவதற்காக 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுக்கால பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதால் பட்டியலின சமூக மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதே சமயம், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. சவ ஊர்வலத்தில் தீண்டாமை பாகுபாடு காட்டப்பட்டதா என்ற புகாருக்கு வரும் 26-ம் தேதிக்குள் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரத்துக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கலெக்டர் சண்முக சுந்தரம், “ஆந்திர எல்லையில் உள்ள தமிழக பகுதியில்தான் ஆதிதிராவிட மக்கள் சடலங்களை புதைப்பார்கள். விபத்தில் அல்லது விஷம் குடித்து உயிரிழப்போரின் உடல்களை அந்தப் பகுதியில் எரிப்பதில்லை.

குறிப்பிட்ட நதிக் கரையோரம் அந்த உடல்களை எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நதிக் கரையில் உள்ள இரண்டு வழிகளை ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஒரு வழி சக்கரவர்த்தி என்பவருடைய நிலத்தின் வழியாகவும், மற்றொரு வழி யுவராஜ் என்பவருடைய நிலத்தின் வழியாகவும் சடலங்களை கொண்டு செல்கிறார்கள். நிலத்தின் உரிமையாளர்கள் இருவருமே ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்த ஒரு நிகழ்வில்தான் அவர்கள் வழிவிடவில்லை. தாசில்தார் மற்றும் ஆதிதிராவிட நல அலுவலரை அங்கு அனுப்பி எரிதகன மேடை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். சுடுகாட்டுப் பாதையை யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. பட்டா நிலத்தில்தான் பாதை செல்கிறது. நிலத்தின் உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தித் தான் அணுகு சாலை அமைக்க முடியும்” என்றார்.