April 13, 2021

விவசாயிகள் போராட்டம் : டெல்லி போலீஸ் அனுமதி!

தொடர் போராட்டத்துக்குப் பின்னர் டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் வெளிமாநிலங்களில் இருந்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசு விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த முடிவு ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராகக் காவல்துறை சார்பில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப் பட்டுள்ளன. ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி வருவதைத் தடுக்கப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிலும் ‘டெல்லி சலோ’ போராட்டம் நேற்று (நவ.26) தொடங்கிய நிலையில், பஞ்சாப் விவசாயிகள் டிராக்டர் வாகனங்களில் வந்து திரளாகக் கலந்துகொண்டனர். ஹரியாணாவின் ஷாம்பு எல்லைப் பகுதிக்கு வந்தபோது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். போலீஸ் தடுப்புகளை காகர் ஆற்றில் வீசினர். அப்போது, விவசாயிகளின் குழுவைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் போலீஸார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். விவசாயிகள் மீது தடியடிப் பிரயோகமும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது. சோனிப்பேட் பகுதியில் குழுமி இருந்த விவசாயிகள் மீது தண்ணீர் பீரங்கிகள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டது. எனினும் எத்தனை நாட்கள் ஆனாலும் டெல்லிக்கு செல்வதில் உறுதியாக உள்ளனர். பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்களை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். டிராக்டர்களின் வடிவமைப்பைச் சிறிது மாற்றி, ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், தண்ணீர், கம்பளி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்திருந்தனர். சாலையோரம் சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு விவசாயிகளை அனுமதிக்கும்படியும் அவர்கள் அங்கே தங்கியிருக்கும் பொழுது விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது.திக்கிரி எல்லையில் பேச்சு வார்த்தை நடக்கும்பொழுது டெல்லியில் உள்ள புராரி நிரங்காரி மைதானத்தில் வெளி இடங்களில் இருந்து வரும் விவசாயிகள் தங்கி இருக்கலாம் என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டிற்கு முன்னர் டெல்லி நோக்கி வந்துகொண்டு உள்ள முக்கிய விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொலைபேசி மூலம் திக்கிரி எல்லையில் இருந்து விவசாயி களின் பிரதிநிதிகள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் சம்மதத்தைப் பெற்றனர். அதேநேரத்தில் டெல்லியில் உள்ள விவசாயிகளின் சங்கத் தலைவர்கள் புராரி மைதானத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு விவசாயிகள் தங்குவதற்கான வசதிகளை பார்வையிட்டனர். அதன்பிறகு விவசாயிகளை டெல்லியில் உள்ள புராரி நிரங்காரி மைதானத்துக்குள் வர அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது.

அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திக்கிரி எல்லையிலும் சிங்பு எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த விவசாயிகளின் டிராக்டர்கள் கார்கள் வாகனங்கள் எல்லாம் புராரி மைதானத்தை நோக்கி வரிசை வரிசையாக செல்லத் தொடங்கின. டெல்லி சலோ பேரணியில் பங்குகொள்ள நடந்து வந்த விவசாயிகளும் நிரங்காரி மைதானத்தை நோக்கி நடந்து சென்றனர்.

எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாங்கள் டெல்லியில் தங்க தயாராக வந்திருக்கிறோம். மத்திய அரசு தனது விவசாயிகள் விரோத சட்டங்களை வாபஸ் பெறும் வரை டெல்லியில் தங்கி இருப்போம் என்று ராம்சந்தர் கூறினார். டெல்லி நகருக்குள் விவசாயிகள் அணிவகுத்துச் செல்லும் காட்சியை திக்கிரி எல்லையில் காணொளி காட்சி மூலம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு கமிட்டி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.