September 20, 2021

டெல்லி ;தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டண வசூலிப்பைத் தடுக்க புதிய திட்டம்!

நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க புதிய திட்டம் ஒன்றை டெல்லி அரசு பரிந்துரைத்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனைகள் மருந்துகள் மற்றும் பிற நுகர் பொருட்களின் கொள்முதல் விலையில் 50 சதவீதம் வரை மட்டுமே லாப வரம்பு நிர்ணயிக்க அனுமதிக்கப்படும்.டில்லி அரசின் இந்த புதிய திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் பொதுமக்கள் பார்வைக்கு 30 நாட்கள் வைக்கப்படும். அந்த ஆலோசனைகள் குறித்த கருத்துகள், எதிர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் முன்வைக்கலாம். அதன் அடிப்படையில் டெல்லி மருத்துவமனைகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலை வருகின்ற போது காப்பாற்றிய மருத்துவரை கடவுளை வணங்குவதை போல் வணக்கு வது தான் நம்மை போன்ற சாதாரண மனிதர்களின் இயல்பு காரணம் நம்மால் பசியாற உணவு கொடுக்க முடியும் வெயிலில் ஒதுங்க நிழல் கொடுக்க முடியும் மானத்தை மறைக்க ஆடை கொடுக்க முடியும் ஆனால் ஊசலாடி கொண்டிருக்கும் உயிரை காப்பாற்றி கொண்டு வர இயலுமா? வலியால் துடிப்பவனை வலி மறக்க செய்ய முடியுமா? நிச்சயம் ஆகாது அது ஒரு மருத்துவரால் தான் முடியும் அதனால் தான் சமூகத்தில் மிக உயரிய அந்தஸ்தில் அவர்களை வைத்து பார்க்கிறோம்

ஆனால் கடவுளின் தூதர்களான மருத்துவர்கள் இன்று தங்களது பொறுப்பையும் தகுதி தாரதரத்தையும் மக்களின் நம்பக தன்மையும் உணர்ந்து நடக்கிறார்களா? இல்லை என்று சொல்வதற்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கிறது ஆனால் அது தான் உண்மை பல மருத்துவர்கள் தங்களது தொழிலை மற்றவர்களின் ஆபத்தான நேரத்தில் பணம் பறிக்கும் கருவியாகவே பார்க்கிறார்கள் இதற்கு விதி விலக்காக சில மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்க வில்லை ஆனால் இவர்களது எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது.

அரசாங்க மருத்துவ மனைகள் சவக்கிடங்குகளாக காட்சியளிக்கும் இந்த நாட்டில் பல தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர ஓட்டல்களாக மின்னுகிறது ஒரு கண் அறுவை சிகிச்சைக்கு ஒரு தனியார் மருத்துவமனை விலை பட்டியலை தருகிறது பத்தாயிரம் ரூபாய், அறுபதாயிரம் ரூபாய், ஒன்னேகால் லட்ச்ச ரூபாய் என்பது அந்த பட்டியலில் உள்ள விலை விபரம் இது மூன்று விதமான நோய்களுக்கான சிகிச்சை கட்டணமாக இருக்குமென்று யாரவது நினைத்தால் அவர்கள் முழுமையான அப்பாவிகள் ஒரே நோய்க்கு தரும் மூன்று விதமான கட்டண விபரம் தான் இது அப்படி என்றால் பணத்தை பொறுத்து தான் எங்கள் சிகிச்சையின் தரம் இருக்கும் என்பதே பொருளாகும்..இதை எல்லாம் கண்டும் காணாத போக்கில் தன் ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறது மத்திய. மாநில அரசுகள்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ‘‘தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் மருந்துகளை அதிக விலையில் விற்பதாகவும் வந்த புகார்களை விசாரிக்க டெல்லி அரசு கடந்த 2017 டிசம்பர் மாதம் 9 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த அறிக்கையில் இத்தகைய புகார்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் டில்லி அரசு புதிய ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளது.

அதன் விவரம் இதோ:

தனியார் மருத்துவமனைகளில் விற்கப்படும் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள அத்தியாவசிய மருந்துகளை தவிர பிற மருந்துகள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களின் கொள்முதல் விலையை விட கூடுதலாக 50 சதவீதம் வரை மட்டுமே லாப வரம்பு இருக்க வேண்டும்.

செயற்கை உறுப்புகளுக்கு அதன் கொள்முதல் விலையை விட 35 சதவீதம் கூடுதலாக லாப வரம்பு நிர்ணயிக்கலாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் நோயாளி இறந்துவிட்டால் அவர்களுக்கான கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். நோயாளி அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் இறந்துவிட்டால் 20 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

நோயாளிகள் ஒரு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அந்த இரண்டாம் அறுவை சிகிச்சைக்கான செலவில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

மருத்துவமனையில் நோயாளி இறந்துவிட்டால் சிகிச்சைக்கான கட்டணத்தை கட்டவில்லை என கூறி உடலை ஒப்படைக்க மறுக்க கூடாது. உடனடியாக அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இறந்தவர்களின் கவுரவத்தை காக்க இந்த விதி பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த விதிமுறைகளை மீறும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.