சிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி!

ஐ.என்.எக்ஸ்., மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ள நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில், சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது சிபிஐ அமைப்பிற்கு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தற்போது, ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கைதாகியுள்ள அவர், அந்த அலுவலகத்தில் தான் நேற்று (ஆக.21) இரவு விசாரிக்கபட்டார், அங்கேயே இரவு தங்க வைக்கப்பட்டார்.

.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், நேற்று(ஆக.,21) இரவு கைது செய்யப்பட்டார். டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் ஒத்துழைப்பு வழங்க வில்லை எனக்கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து,இன்று பிற்பகல், ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில், நீதிபதி அஜய்குமார் முன்னிலையில், சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதற்காக சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி ஆகியோர் கோர்ட்டிற்கு வந்தனர். சிதம்பரம் சார்பில், கபில்சிபல், அபிஷேக் சிங்வியும், சிபிஐ சார்பில் துஷார் மேத்தாவும் ஆஜரானார்கள். ஒத்துழைக்கவில்லை பின்னர், சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டதாவது: வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தியுள்ளோம். சிதம்பரம், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

பேசாமல் இருப்பது அவரது அடிப்படை உரிமையாக இருக்கலாம். ஆனால், வழக்கில் ஒத்துழைக் காமல் இருக்க முடியாது. சதியை வெளிக்கொண்டு வர காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம். விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தரவும் மறுக்கிறார்.

இதனால், குற்றப்பத்திரிகையில் அவரது பெயரை சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டது. குற்றப் பத்திரிகை யில்,சிதம்பரத்தின் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். காவலில் எடுத்து விசாரித்தால், மேலும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். பண மோசடிக்கு இது சரியான வழக்கு என டில்லி ஐகோர்ட் கூறியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான கூட்டுச்சதியில் சிதம்பரத்திற்கு பங்கு உள்ளது.இதனால், தான் அவருக்கு முன்ஜாமின் வழங்கப்படவில்லை என வாதிட்டார்.

சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்ட போது,’ சிதம்பரத்திற்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு இல்லை. இந்த வழக்கில், பாஸ்கர ராமன், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து விட்டதால், காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. சிபிஐ கூறுவது எல்லாம் வேதவாக்கு அல்ல. சம்மன் அளிக்கப்பட்ட போது எல்லாம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன் ஆஜரானார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. ஏற்கனவே கேட்ட கேள்விகளை தான் கேட்டனர். சிதம்பரத்திடம் 12 கேள்விகள் கேட்டுள்ளனர். அதனை தாக்கல் செய்ய வேண்டும். இதில், 6 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு விட்டது. இதற்குமேல் கேட்க சிபிஐயிடம் எந்த கேள்வியும் இல்லை. நண்பகல் 12 மணி வரை சிதம்பரத்திடம் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை.

காவலில் எடுத்து விசாரிக்க அரசு விரும்புகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜாமினில் உள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. தயாரிக்கவும் இல்லை. அனைத்து கேள்விகளும் கார்த்தி சிதம்பரம் தொடர்படையது. பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்கப் பட்டு விட்டது. தீர்ப்பு வழங்க டில்லி ஐகோர்ட் எட்டு மாதங்கள் எடுத்து கொண்டது. வழக்குப்பதிவு செய்த கட்டத்திலேயே விசாரணை நடத்தியிருக்கலாம். சிதம்பரம் மவுனம் காத்து வருகிறார் என்ற சிபிஐயின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கப்பட்டு விட்டது. பணம் கொடுத்ததாக கூறியுள்ளனர். யார் கொடுத்தது? யாரிடம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து சிபிஐயிடம் கேட்க வேண்டும் .

சிதம்பரத்திடம், சிபிஐ, கேள்விகளை எதிர்பார்க்கிறதா அல்லது பதிலை எதிர்பார்க்கிறதா? இந்த வழக்கு ஆதாரங்கள் அடிப்படையில் நடக்கவில்லை. வேறு எதற்காகவோ நடக்கிறது.வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் சிபிஐ, இத்தனை நாள் அதனை வைத்து என்ன செய்தார்கள் என்றார்.

பின்னர் அபிஷேக் சிங்வி வாதிட்டதாவது: முதலீடு குறித்து வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் தான் முடிவு எடுத்தது.அதற்கு சிதம்பரம் ஒப்புதல் மட்டும் தான் அளித்தார். அந்த வாரிய அதிகாரிகள் 6 பேர் கைது செய்யப்படவில்லை. ஜாமினில் உள்ளனர். இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் மற்றும் டைரியின் அடிப்படையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திராணியின் வாக்குமூலம் குறித்து கேள்வி எழுப்பவில்லை. சிபிஐயின் வாதங்களை அடிப்படையிலேயே எதிர்க்கிறேன். 7 மாதம் கழித்து இடைக்கால முன்ஜாமினை ரத்து செய்தது ஏன்? இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கே?சிபிஐ விரும்பும் பதில்களை அளிக்காததற்காக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறக்கூடாது. சம்மன் அனுப்பிய போது, சிதம்பரம் ஆஜரானார். இதில் ஒத்துழைக்கவில்லை என எதை கூற முடியும். சிதம்பரம் உண்மையுடன் நடந்து கொள்கிறார். தப்பி செல்லவில்லை.

அன்னிய முதலீடு பெற்றுதர அழைத்து வந்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சிபிஐக்கு சிதம்பரத்தின் பதில் தேவையில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் பதில்கள் தான் தேவைப்படுகிறது. கேட்ட கேள்விகளுக்கு சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

பின்னர் எதற்கு காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். சிதம்பரத்திடம், நீதிபதியே தேவையான கேள்விகளை கேட்கலாம். இதற்கு சிதம்பரத்தை பேச அனுமதிக்க வேண்டும் என்றார். எதிர்ப்பு தொடர்ந்து, நீதிபதியிடம் சிதம்பரம், கோர்ட்டில் பேச அனுமதி கேட்டார்.

இதற்கு சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து அவர் வாதிடுகையில் ; விசாரணை நடத்துவது எங்களின் கடமை. தேசத்திற்கு ஆற்றும் பணி. சிதம்பரத்திடம் மேலும் விசாரணை நடத்த கோர்ட்டின் அனுமதி கேட்கிறோம்.

கோர்ட்டில் எப்படி கேள்விகளை கேட்க முடியும். முன்னாள் அமைச்சர் என்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ சிதம்பரத்திற்கு சலுகை அளிக்கக்கூடாது. அவரை காவலில் எடுத்து விசாரிப்பதில் உறுதியாக உள்ளோம் என்றார். வெளிநாட்டு கணக்கு இல்லை பின்னர் சிதம்பரம் அளித்த விளக்கம்: சிபிஐ தாக்கல் செய்த கேள்வி பதிலை நீதிபதி பார்க்க வேண்டும்.

அதில், நான் பதிலளிக்காத கேள்வி எதுவும் இல்லை. அதிகாரிகள், எனக்கு வெளிநாட்டு வங்கி கணக்கு உள்ளதா என கேட்டனர். நான் இல்லை என பதில் அளித்தேன். எனது மகனுக்கு வெளிநாட்டு வங்கிகணக்கு உள்ளதா என கேட்டனர்.

உள்ளது என பதில் அளித்தேன். வெளிநாட்டு வங்கிக்கணக்கு துவக்க, கார்த்தி ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றுள்ளார் எனக்கூறினார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டதாக கூறிய சிதம்பரத்தின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அனைத்து வாதங்களையும் பார்க்கும் போது, காவல் தேவைப்படுகிறது எனக்கூறினார். குடும்பத்தினர் தினமும் சிதம்பரத்தை 30 நிமிடம் சந்திக்கவும் அனுமதி வழங்கினார். மீண்டும் வரும் ஆக., 27(திங்கட்கிழமை) ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.தொடர்ந்து சிதம்பரத்தை ஒரு வெள்ளை நிற காரில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.