ஜாலியன் வாலாபாக் படுகொலை : நூறாண்டு நிறைவான நிலையில் பிரிட்டன் வருத்தம்!

மிகச் சரியாக நூறாண்டுக்கு முன்னால் இதே ஏப்ரல் மாசம் நடந்த கொடூர செயலான ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கடும் அடக்குமுறை நிலவியது. கடந்த 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்னும் மைதானத்தில் ஆயிரக் கணக்கா னோர் கலந்துக் கொண்ட ஒரு கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்துக் கொண்டனர். அது குறித்து கொஞ்சம் விரிவாக சொல்வதானால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி பஞ்சாபில் மிக முக்கியமான பாய்சாகி எனப்படும் திருவிழா தினமாகும். இது விவசாயி களுக்கு முக்கியமானதாகும்; அறுவடை தொடங்குகிறது என்று அறிவிக்கும் காலமாகும். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைத்து பிரிவினரும் இணைந்து கொண்டாடக்கூடிய நாள் அது.

அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாக் தோட்டத்தில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று மாலை 4.30 மணிக்கு மக்கள் குடும்பம் குடும்பமாகக் கூடினார்கள். சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்துப் பிரிவினரும் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் அங்கு இருந்தனர். அந்த திருவிழா, தலைவர்களை விடுதலை செய் என்று கோருவதற்கான பொதுக் கூட்டமாக மாறியது.

தடையை மீறி கூடிய அந்தக் கூட்டத்தைக் கலைக்க, ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டயர் ​(RE​G​I​N​U​LD​ DW​Y​ER)​தலைமையில் சிப்பாய்கள் துப்பாக்கிகளில் ரவையை நிரப்பி வந்தனர். ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த மக்களை சுட்டுத் தள்ளுமாறு டயர் உத்தரவிட்டார். பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் சிப்பாய்கள் நிரப்பிவந்த குண்டுகள் தீர்ந்துவிட்டன.

1,650 தடவை சுட்டதாக விசாரணையில் தெரியவந்தது. 370 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 1100 பேர் காயமடைந்ததாகவும் விசாரணையின்போது அரசுத் தரப்பில் கூறப்பட்டது. தேசிய காங்கிரஸ் விசாரித்து வெளியிட்ட அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000 என்றும், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1500 என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதில் அனைத்து மதத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.

இந்த சம்பவம் உலகை உலுக்கியது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த அன்றைய பிரமுகர்கள் வின்சன்ட் சர்ச்சில் போன்றவர்கள் இதைக் கண்டித்தனர். ரவீந்திரநாத் தாகூர் இந்த கொடுமையை கண்டித்தது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசு அவருக்கு வழங்கிய அத்தனை கெளரவ பட்டங்களையும் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

உலகெங்கும் பரபரப்பை உண்டாக்கிய அந்த சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மற்றும் பிரதமர் தெரசா மே ஆகியோர் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டது.

வரும் 13 ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்து நூறாண்டுகள் முடிவடைய உள்ளது. அதை ஒட்டி இன்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே அந்நாட்டு பாராளுமன்றத்தில் , ‘ஜாலி யன் வாலா பாக் படுகொலை குறித்து நாங்கள் வருத்தம் அடைந்துள்ள்ளோம். இதனால் பாதிக்கப் பட்டோருக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்’ என கூறி உள்ளார்.அதேபோல நாடாளு மன்றத்தில் பேசிய பிரிட்டிஷ் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கரியோனும் முழு மனதுடன் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டார்