October 24, 2021

ஜெ. வாரிசு நான் தான் – போயஸ் கார்டன் எனக்கே சொந்தம் – தீபா அதிரடி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு இன்று காலை அவரின் அண்ணன் மகள் தீபா திடீரென வந்தார். அப்போது, டிடிவி தினகரன் தரப்பினர் அவரை உள்ளே விடாமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தீபாவின் ஆதரவாளர்கள் அங்கு பாதுகாப்பு நின்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தீபாவை உள்ளே அனுமதிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் தடுப்புகளை அமைத்தும் அவர்களை தடுத்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய தீபா, தன் சகோதரர் தீபக் அழைப்பின் பேரில்தான் போயஸ் கார்டன் வந்தாகக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்த தீபக் அழைத்தார் என்றும் அதனால்தான் வந்தேன் என்று தெரிவித்து தீபா அங்கேயே நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்முறையாக, தற்போது தான் போயஸ் கார்டன் சென்றுள்ளார் தீபா. இதையடுத்து போயஸ் கார்டன் இல்லம் அருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தினகரன் தரப்பினர் உள்ளே செல்லவிடாமல் தடுப்பதாக தீபா தரப்பினர் குற்றம் சாட்டிஉள்ளனர். செய்தியாளர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது என போலீஸ் தடுத்து நிறுத்தி உள்ளது.

 

பிறகு தீபா தனது கணவர் மாதவனுடன் வந்து பத்திரிகையாளர்களுக்கு கண்ணீருடன் பேட்டி கொடுத்தார்.அதில், தீபக் அழைத்ததால் தான் போயல் கார்டனுக்கு வந்தேன். அங்கு வந்து ஜெ.,வின் படத்திற்கு பூ மட்டும் வைத்து விட்டு போ என தீபக் சொன்னார். என்னை உள்ளே விட மாட்டார்கள் என நான் கூறியதற்கு நான் இருக்கிறேன் வா என்றார். நான் வந்ததும் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளரை தாக்கினர். அதனால் தான் வீட்டில் இருந்து வெளியே வந்தேன். அங்கு 2 குண்டர்கள் மட்டும் தான் உள்ளனர். அவர்கள் என்னை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. குண்டர்கள் என்னையும் என் பாதுகாவலர்களையும் அடித்து வெளியே தள்ளிவிட்டனர். எங்களை தாக்கியவர்களை அடையாளம் காட்ட தயார்.சசிகலாவுடன் சேர்ந்து தீபக் தான் திட்டமிட்டு என்னை ஏமாற்றி வரவழைத்துள்ளார். சசிகலாவுடன் இணைந்து தீபக், ஜெயலலிதாவை கொன்றார். அம்மா போன்று இருந்த அத்தையை கொன்றது அவர் தான். போயஸ் கார்டன் வீட்டிற்கு உரிமை கேட்டு நாளை டில்லி கோர்ட் செல்ல உள்ளேன்.தீபக் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கும், தனது கணவர் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இதனால், போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தாக்கப்பட்ட பத்திரிகையாளருக்கும், சிகிச்சை அளிக்க வேண்டும். பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன். பிரதமரை சந்தித்து விரிவாக பேச உள்ளேன். எனக்கும் எனது கணவர் உயிருக்கும் ஆபத்தும் உள்ளது. போலீஸ் பாதுகாப்பு தேவை. போயஸ் கார்டன் வீட்டிற்குள் ஏதோ தவறு நடக்கிறது. அதனால் தான் உள்ளே விட மறுக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கட்டிக்காத்திட்ட அ.தி.மு.க. இன்று துரோக கும்பலின் பிடியில் சிக்கி சீர்கெட்டு வரும் நிலை மிக மிக வேதனைக்குரியது. சசிகலாவின் வழிகாட்டுதலில் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வை நாங்களே இயக்குவோம் என்பது எம்.எல்.ஏ.க்களில் சிலரை தன் வசமாக்கியதின் மூலம் கட்சியும், ஆட்சியும் எங்கள் வசமே என்று வெட்டி வீராப்பு பேசுவது பெரும் நகைச்சுவைக்குறியதும், கேலிக்குறியதுமாகும். தினகரன் மாதிரி ஆட்கள் அ.தி.மு.க.வை சொந்தம் கொண்டாடுவது எள்ளளவும் ஏற்புடையது அல்ல. கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா தினகரனை துரோகி என்று இனம் கண்டு பகிரங்கமாக கண்டித்து அடிப்படை உறுப்பினராகக்கூட இருக்க தகுதியற்ற நபராக நீக்கிவைத்தார்.

அன்று முதல் வெளித்தெரியா வாழ்வு கண்ட நபரே இந்த தினகரன். துரோக கும்பலால் தான் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த மரணத்தின் மர்மம் என்பது ஒட்டு மொத்த தமிழக மக்களால் முன் வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டாகும். இந்த குற்றசாட்டுகளுக்கு எல்லாம் தீர்வு வராத நிலையில் அவர்கள் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பது பொதுமக்களுக்கும், தொண்டர்களும் பொறுத்துக்கொள்ள முடியாத கோபத்தையும், ஆத்திரத்தையும் மூட்டியுள்ளது.

வத்தலகுண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமாறன் சிந்திய இரத்தத்தால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அ.தி.மு.க.வுக்கு சம்பந்தமே இல்லாத சசிகலா, தினகரன் போன்றோரால் ஒருபோதும் வீழ்த்திட முடியாது. ஜெயலலிதாவின் உண்மை வாரிசான என்னால் தான் இக்கழகம் கட்டிக்காக்கப்படும். எனது அத்தை எனக்கு ஊட்டி வளர்த்திட்ட தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு இக்கழகத்தை மீட்டு கட்டிகாப்பதே எனது லட்சியம். உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் லட்சியமும் அதுவே. லட்சியம் நிறைவேரும் அந்நாளில் துரோக கும்பலின் கொட்டம் அடக்கப்பட்டிருக்கும் வீழ்த்தப்பட்டிருக்கும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.